Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர்

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-94435 86453, 96552 61510 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வில்வவனேசுவரர்
அம்மன் வளைக்கைநாயகி
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் எமதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவைகாவூர், வில்வவனம்
ஊர் திருவைகாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 294 1912, 94435 86453, 93443 30834 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

தற்பொழுது ஆலயம் அதிகாலை முதல் இரவு வரை பக்ததர்கள் வசதிக்காக திறந்து விடப்படும் அலை பேசி எண் 9843606985,சு.செந்தமிழ்செல்வன் விஜயமங்கை

மூலவர் விஜயநாதேஸ்வரர் (விஜயநாதர்)
அம்மன் மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை)
தீர்த்தம் அர்ஜுன தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவிசயமங்கை
ஊர் திருவிஜயமங்கை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

மகாபாரத போரின்போது பாண்டவர், கவுரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளையில், வேதவியாசர் அர்ஜுனராகிய விஜயனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி விஜயன் சிவனை வேண்டித் தவமிருந்தான். இதையறிந்த, துரியோதனர் முகாசுரனை அனுப்பி தவத்தை கலைக்க முயன்றார். பன்றி வடிவில் வந்த அசுரனை, விஜயன் வீழ்த்தினான். அங்கு வந்த ஒரு வேடன், தானே பன்றியை வீழ்த்தியாகச் சொன்னார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அவ்வேளையில், சுயரூபம் காட்டிய சிவன், பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், “ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு விஜயன் தகுதிபெற்றவன்தானா?” என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், “விஜயன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்என்றார். விஜயனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். விஜயன், தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே, இங்கு எழுந்தருளிய சிவன் விஜயநாதர்என்று பெயர் பெற்றார். தலத்திற்கும் திருவிஜயமங்கைஎன்ற பெயர் ஏற்பட்டது.

சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில். இங்கு கருவறைக் கோபுரம் பெரியதாகவும், ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது.