செண்பகவனத்து செல்வ கணபதி
யாரும் எக்காரியத்தையும் ஆனைமுகத்தோனைத் தொழாது செய்யத் துடங்குவதில்லை. அவர் ஓங்கரத் தத்துவத்தின் மூலாதாரம். எளிமையானர்; விண்ணோர்கள் முதலாய் அனைவராலும் வணங்கப் படுபவர்.வேலூரிலிருந்து பெங்களூர் சாலையில் 3 கல் தொலைவில் உள்ள சேண்பாக்கம் தான் செண்பக வனம்.
பண்டைய காலத்தே செண்பக வனமாய் இருந்த இவ்விடம், தற்பொழுது சேண்பாக்கமாக மருவி இருக்கலாம். சுயம்புவாகக் கணபதி உள்ள இடம் என்பதால் “ஸ்வயம்பாக்கம்” என ஆதி சங்கரர் பெயரிட்டார்; அது பின்னர் சேண்பாக்கமாக மருவியிருக்கலாம் என்பது மறு சாரார் கருதுகோள்.
இங்கும் சுயம்பு இலிங்கமாகக் கணபதி அமர்ந்து அருள் மழை பொழிகிறார். இங்குள்ள மற்ற 10 கணபதிகளும் சுயம்பு இலிங்கங்களாகவே காட்சியளிக்கின்றனர். அதில் ஒருவர் தரை மட்டத்தில் உள்ளார். அது மண் தத்துவத்தை நினைவூட்டுவதாயுள்ளது. இப்பதினொரு சுயம்பு இலிங்கங்களும் “ஓம்” என்னும் அமைப்பில் உள்ளதுதான் விதப்பு(சிறப்பு). தல விருட்சம் வன்னி மரம்.
ஆனைமுகன் – தஞ்சை
தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள யானைமுகத்தன்.
அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி
யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி
மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி
மதுரதமி ழோதுமகத் தியனைப் போற்றி
எண்டிசையும் புகழு மெந்தன் குருவைப் போற்றி
யிடைகலைபின் சுழிமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்கு ளமர்ந்த விநா யகனைப் போற்றி
குகமணியின் தாளிணைகள் போற்றி போற்றி.