செண்பகவனத்து செல்வ கணபதி

யாரும் எக்காரியத்தையும் ஆனைமுகத்தோனைத் தொழாது செய்யத் துடங்குவதில்லை. அவர் ஓங்கரத் தத்துவத்தின் மூலாதாரம். எளிமையானர்; விண்ணோர்கள் முதலாய் அனைவராலும் வணங்கப் படுபவர்.வேலூரிலிருந்து பெங்களூர் சாலையில் 3 கல் தொலைவில் உள்ள சேண்பாக்கம் தான் செண்பக வனம்.

பண்டைய காலத்தே செண்பக வனமாய் இருந்த இவ்விடம், தற்பொழுது சேண்பாக்கமாக மருவி இருக்கலாம். சுயம்புவாகக் கணபதி உள்ள இடம் என்பதால் “ஸ்வயம்பாக்கம்” என ஆதி சங்கரர் பெயரிட்டார்; அது பின்னர் சேண்பாக்கமாக மருவியிருக்கலாம் என்பது மறு சாரார் கருதுகோள்.

இங்கும் சுயம்பு இலிங்கமாகக் கணபதி அமர்ந்து அருள் மழை பொழிகிறார். இங்குள்ள மற்ற 10 கணபதிகளும் சுயம்பு இலிங்கங்களாகவே காட்சியளிக்கின்றனர். அதில் ஒருவர் தரை மட்டத்தில் உள்ளார். அது மண் தத்துவத்தை நினைவூட்டுவதாயுள்ளது. இப்பதினொரு சுயம்பு இலிங்கங்களும் “ஓம்” என்னும் அமைப்பில் உள்ளதுதான் விதப்பு(சிறப்பு). தல விருட்சம் வன்னி மரம்.

துக்கோஜி எனும் மகாராட்டிர மந்திரி, அவ்வழியே இரவு வேளையில் இரதத்தில் பயணிக்கும்பொழுது ஏதோ ஒன்றின்மேல் முட்டி, அச்சு முறிந்து இரதம் நின்று விட்டது. கீழிறங்கிப் பார்க்க இரத்தக் கறை தெரிந்தது.
அடிபட்டது யார் எனத் தெரியாது விழிக்கையிலே, அவருக்குக் கணபதி,” நாம்தான் இங்கு உள்ளோம்; எமக்கு இங்கேயே ஆலயம் எழுப்பு” என்று உணர்த்தினாராம். அவர் கட்டிய ஆலயம் என தலபுராணம் கூறும்.

இத்தலத்தின் சிறப்புகள்:

1.மூலவரின் முதுகில் இரதச் சக்கரம் ஏறிய வடு உள்ளது.
2.மேற்கூரை இல்லை. விண்ணோர்கள் தொழத்தான் அப்படி என்று மக்களின் நம்பிக்கை.
3.மூலவரின் சந்நிதியிலேயே கொடிமரமும் உள்ளது.
4.நவக்கிரகங்களில் சனி மூலவரைப் பார்த்து அமர்ந்துள்ளார்.

ஆண்டுதொறும் பிள்ளையார் சதுர்த்தி அன்று துடங்கி அடுத்த 10 நாட்களூக்குப் பெருவிழா நடக்கும். புரட்டாசியில் சங்கடகர சதுர்த்தியில் புண்ணிய விழா (பவித்ரோற்சவம்)வும் நடைபெறும்.

நம்பிக்கைகள்:

குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு வந்தால் பாலகணபதிக்குப் பால் முழுக்காட்டு செய்ய வேண்டும்.
குழந்தை இல்லாதவர்கள் அருள்மிகு செல்வ கணபதிக்கு 33 தாமரைத் தண்டில் பசு நெய்யினால் தீபம் ஏற்றவேண்டும். மகாசங்கடகர சதுர்த்தியன்று விரதமிருந்து பாலபிடேகம் செய்து அருகம் புல்லால் அருச்சனை செய்யவேண்டும். மட்டைத் தேங்காயுடன் கோயிலை வலம்வந்து வன்னி மரத்தை வணங்கிப் பின் தேங்காயை கணபதிக்குக் கொடுக்கவேண்டும்.
தடைப்பட்ட திருமணம் நடக்க, மகாசங்கடகர சதுர்த்தியன்று விரதமிருந்து தீபம் ஏற்றி நவக்கிரகங்களை வழிபடல்வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *