சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி
அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், ஆலப்பாக்கம் வழி, தீர்த்தனகிரி, கடலூர் மாவட்டம்.
+91-94434 34024
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சென்றால் சுவாமியை தரிசிக்கலாம்.
மூலவர் | – | சிவக்கொழுந்தீஸ்வரர் | |
அம்மன் | – | ஒப்பிலாநாயகி | |
தல விருட்சம் | – | கொன்றை | |
தீர்த்தம் | – | ஜாம்புவ தடாகம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்திணை நகர் | |
ஊர் | – | தீர்த்தனகிரி | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சுந்தரர் |
முன்னொரு காலத்தில், இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினர், சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால், அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் அங்கு வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். முதியவர் அவனிடம்,”நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு. அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்” என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினான். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம்,”ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி?” என தன் சந்தேகத்தை கேட்டான். முதியவர் அப்படியே மறைந்தார். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த விவசாயி சிவனை இங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.
திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) கோயில், எருக்கத்தம்புலியூர், இராஜேந்திர பட்டினம்
அருள்மிகு திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) கோயில், எருக்கத்தம்புலியூர், இராஜேந்திர பட்டினம், கடலூர் மாவட்டம் .
+91- 4143-243 533, 93606 37784
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) | |
அம்மன் | – | வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி) | |
தல விருட்சம் | – | வெள்ளெருக்கு | |
தீர்த்தம் | – | கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர் | |
ஊர் | – | இராஜேந்திர பட்டினம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி அதை சரியாகக் கவனிக்காததால், அவளை பரதவர் குலப் பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். இக்குற்றத்திற்காக சிவன் முருகனை, மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். முருகன் மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு “உருத்திரசன்மர்” என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் “குமாரசாமி” ஆனார். உருத்திரசன்மரின் உருவம் இங்கிருக்கிறது.