அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம்
அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்), தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 4362-260 553 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர் | |
உற்சவர் | – | கிருதபுரீஸ்வரர் | |
அம்மன் | – | பாலாம்பிகை, இளமங்கையம்மை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | காவிரிதீர்த்தம் | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருநெய்த்தானம் | |
ஊர் | – | தில்லைஸ்தானம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர் |
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலைக் குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க, பசு மறைந்து விட்டது. காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்குத் தெரியவில்லை. இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் “நெய்யாடியப்பர் (திருநெய்த்தானனார்)” ஆனார்.
இத்தலத்தில் நடந்த இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சிவனடியார் தினமும் இறைவனுக்கு நெய் விளக்கு போட்டுவிட்டுத் திரும்பும் போது, பிரகாரத்தில் உள்ள கீரைகளை பறித்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவர் சிவனிடம், “இறைவா! நான் தினமும் உனக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு அருள்புரிந்து காக்க வேண்டும்” என வேண்டினார். இறைவன் அசரீரியாக,”நீ எனக்கு நெய் விளக்கு போட்டதற்குக் கைமாறாக, கோயில் பிரகாரத்திலிருந்த கீரையை பறித்து சென்றாய். ஆகவே உனக்கு வேறு எப்படி அருள்புரிய முடியும்” என்றார். இவ்வாறு தல வரலாறு கூறுகிறது. இதிலிருந்து அறியப்படும் நீதி என்னவெனில் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.
+91-436 -2260 332, 94430 08104 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர் | |
அம்மன் | – | தரும சம்வர்த்தினி | |
தீர்த்தம் | – | சூரிய புஷ்கரணி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருவையாறு | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும்போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. சிலாது மகரிஷி, ஒரு பெட்டியில் இந்தக் குழந்தையை வைத்துவிட்டு மூடித் திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டுச் சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு, அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் “ஐயாறப்பர்” எனப்பட்டார்.
கரிகால் சோழன் பல்லக்கில் இப்பக்கமாக வந்துகொண்டிருந்த போது தேர்ச் சக்கரம் நிலத்தில் புதையுண்டது . அதனை எடுக்கத் தோண்டும்போது குருதி வெளிப்பட்டது . சிவலிங்கமிருப்பதை கண்ட அரசன் தன் தவறுணர்ந்து, தலையை துணிக்க முற்படுகையில் ஈசன் அசரீரியால் தடுத்தார் என வரலாறு கூறும். ஆகையால் கரிகாலன் இக்கோயிலைக் கட்டுவித்தான். சுந்தரரும், சேரமான் பெருமாளும் வந்த போது இறைவன் காவிரி வெள்ளத்தை ஒதுக்கி வழிவிடச்செய்த தலம்.