அருள்மிகு திருமுருகநாதசுவாமி திருக்கோயில் , திருமுருகன்பூண்டி

அருள்மிகு திருமுருக நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4296- 273 507 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை5.30 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமுருகநாதர்
அம்மன் ஆவுடை நாயகி, மங்களாம்பிகை
தீர்த்தம் சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமுருகன்பூண்டி
ஊர் திருமுருகன்பூண்டி
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி, துன்புறுத்தி வந்தான். அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட, முருகன் சம்காரத்திற்கு தயாரானார். ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி, பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எப்படியிருப்பினும், சூரனைத் துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மகத்தி தோஷம் பீடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி, மாதவி நாதரை வணங்க வந்தார். அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட, அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீரை எடுத்து, சிவனை மேற்கு நோக்கியபடி அமைத்து வணங்கினார். பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய பிரம்மகத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.

சிவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தான் பெற்ற கவிப்புலமையின் பலனாக தனது நண்பனான மன்னன் சேரமானிடம் பொன்னும், பொருளுமாகப் பரிசுகள் பல பெற்று இவ்வழியே திரும்பிக்கொண்டிருந்தார். தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வந்தபோது இருட்டியதால் அருகில் உள்ள கூப்பிடுவிநாயகர் கோயில் வாயிலில் ஓய்வெடுத்தார். அப்போது, தன்னை துதிக்காமல் சென்ற சுந்தரரைச் சோதிக்க எண்ணிய சிவன், தனது பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களைக் கவரச்செய்தார். இதனால் மனக்கலக்கமுற்ற சுந்தரர் அங்கே இருந்த கூப்பிடுவிநாயகரிடம் தனது பொருட்களை மீட்க வழி கூறும்படி முறையிட்டார். தனது தகப்பனின்திருவிளையாடலை அறிந்த அவர் தும்பிக்கையால் கிழக்கு திசை நோக்கி காட்டினார். அவர் காட்டிய திசைக்கு வந்த சுந்தரர் அங்கு பதுங்கியிருந்த சிவனிடம் முறையிட்டு, அவரை உரிமையுடன் திட்டிப்பாடி, இழந்த பொருளை மீட்டுத் தரும்படி வேண்டினார். அவரது பாடலில் மயங்கிய சிவபெருமான் தான் பறித்த பொன்னையும், பொருளையும் அவருக்கே திருப்பி வழங்கி ஆசிபுரிந்தார். இவ்வாறு சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் தனியே திருவிளையாடல் நடத்திய தலம் எனும் பெருமையை உடையது.

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4296 – 273 113, +91- 94431 39503

காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்)
அம்மன் கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி
தல விருட்சம் பாதிரிமரம்
தீர்த்தம் காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி
ஊர் அவிநாசி
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

சுந்தரர், இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனைக் கோயிலுக்கு வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்நடக்கிறது.