அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் பாலையா கார்டன், மடிப்பாக்கம்

அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் பாலையா கார்டன், மடிப்பாக்கம், சென்னை.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாண கந்தசுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மடிப்பாக்கம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியைச் சேர்ந்த முருகபக்தர்கள் அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்தசுவாமியை தரிசித்து வந்தனர். ஒருகால கட்டத்தில் அவர்கள் கந்தசுவாமியை இப்பகுதியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தை உருவாக்கினார். முதலில் விநாயகர் மட்டுமே இங்கு அருள்புரிந்து வந்தார். இதன் பிறகே முருகப்பெருமானுக்கு சன்னதி அமைத்து கும்பாபிஷேகம் செய்து கோயில் கட்டினர். நுழைவுவாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்திருக்க கருவறையில் கல்யாண கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். இங்கு நாம் முருகனை தரிசிக்க ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகளுக்கு படிபூஜையும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் கந்தசஷ்டியன்று நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் முருகனுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. இங்கே முருகன் திருமணக் கோலத்தில் வீற்றிருப்பதால், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம்.

+91-4633-283201,226400,223029 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.15 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

குமாரர்சுவாமி

உற்சவர்

இலஞ்சிக்குமாரர்

தலவிருட்சம்

மகிழம்

தீர்த்தம்

சித்ராநதி

ஆகமம்

மகுட ஆகமம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

இலஞ்சி

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர், துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்றுகூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி ஆராய்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா? அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது. கபிலர், உலகம் இல்பொருளே எனக்கூறி தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது. ஆகவே, உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மைப்பொருள் யார் ? என ஆராய்ந்தனர். அப்போது, கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும், உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், இளமைப்பருவமுடையோனாய் அவர்கள் முன் தோன்றினார் அவர் யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம்என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி, தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார்.