அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்

அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், மலைக்கோட்டை அடிவாரம், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்.

+91- 451 – 2433 229 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சீனிவாசப் பெருமாள்

உற்சவர்

கல்யாண சீனிவாசர்

தாயார்

அலமேலு மங்கை

தல விருட்சம்

நெல்லி

தீர்த்தம்

பத்மகிரி தீர்த்தம்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பத்மாசலம்

ஊர்

திண்டுக்கல்

மாவட்டம்

திண்டுக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

பெருமாள் அடியார்கள் சிலர், மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி இங்கு ஒரு யாகம் நடத்தினர். அப்போது அசுரன் ஒருவன், அவர்களைத் தொந்தரவு செய்தான். அசுரனை அழித்து யாகம் தடையின்றி நடக்க அருளும்படி அவர்கள், பெருமாளிடம் வேண்டினர். சுவாமியும் அசுரனை அழித்தார். இவ்வேளையில் அவர் உக்கிரமாக இருந்தார். சுவாமியின் உக்கிரத்தைக் குறைக்கும்படி, அவர்கள் மகாலட்சுமியை வேண்டினர். தாயாரும் சுவாமியை சாந்தப்படுத்தினார். பின்பு இருவரும் இங்கேயே எழுந்தருளினர். பிற்காலத்தில் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமிக்கு கோயில் எழுப்பப்பட்டது. இவர் சீனிவாசர்என திருநாமம் பெற்றார்.

திண்டுக்கல் மலைக் கோட்டையின் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது. மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் நெல்லி மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இதை துளசிக்கும் ஒப்பானதாகச் சொல்வர். மகாலட்சுமி இருக்குமிடத்தில், மகாவிஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலத்தை மகாவிஷ்ணுவின் இருப்பிடமாகக் கருதுகின்றனர். மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். சுவாமி, வலது கையை ஆகாயம் நோக்கிக் காட்டியும், இடது கையால் பூமியைக் காட்டியபடியும் இருக்கிறார். கோயில் முகப்பில் பெரிய கருடாழ்வார் நின்ற நிலையில் இருக்கிறார். சித்ரா பவுர்ணமியன்று சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, குடகனாற்றில் இறங்குவார். ஆனி பிரம்மோற்ஸவம் மற்றும் பங்குனி உத்திரத்தன்று சுவாமிக்கு திருக்கல்யாண விழா நடக்கிறது.

அருள்மிகு சௌந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு

அருள்மிகு சௌந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல் மாவட்டம்.

+91- 451-255 7232 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சவுந்தர்ராஜ பெருமாள்

தாயார்

சவுந்திரவல்லி

தல விருட்சம்

வில்வ மரம்

தீர்த்தம்

குடகனாறு நதி

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

தாளமாபுரி

ஊர்

தாடிக்கொம்பு

மாவட்டம்

திண்டுக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

மண்டூகம்என்ற சொல்லின் பொருள் தவளை.” ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். இதனால், அவர் மண்டூக மகரிஷிஎனப் பெயர் பெற்றார். தன் சாப நிவர்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டித் தவமிருந்தார். அப்போது, அசுரன் ஒருவன் அவரை தொந்தரவு செய்யவே, அவனிடமிருந்து தன்னைக் காக்கும்படி மதுரையில் அருளும் கள்ளழகரை வேண்டினார். அவருக்கு அருளிய சுவாமி, அசுரனை அழித்தார். மேலும், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். “சவுந்தரராஜர்என்றும் திருநாமம் பெற்றார். மதுரை அழகர் கோயிலுக்கு இணையான சிறப்பை பெற்ற இத் திருத்தலத்தை 500 வருடங்களுக்கு முன்பு விஜய நகர ஆட்சி வழி வந்த அட்சுத தேவராயர் கட்டியதாக வரலாறு கூறுகிறது. மதுரை அழகர்கோயிலுக் குண்டான நேர்த்திக்கடனை இங்கே செலுத்தலாம்.

இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். திருவோணத்தன்று ஹயக்ரீவருக்குத் தேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது. படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுகுறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது. அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷ மானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பதுஅபூர்வம். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், இலட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு.