Monthly Archives: April 2012
போதைப் பழக்கத்திலிருந்து விடுபட
போதைப் பழக்கத்திலிருந்து விடுபட
தன் சிந்தனையை போதையில் புதைத்து மன மயக்கத்தையும், குழப்பத்தையும் தன்னைத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான். போதைப் பொருட்களில் மது, பிரெளன் சுகர், கஞ்சா, புகையிலை, பான் மசாலா இன்னும் பல வகைகள்.
பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிகளிலோ படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும் பழகிக்கொண்ட பழக்கத்தை இன்று வரை விட்டு மீளமுடியவில்லை என வருத்தப்பட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். பலமுறை இத்தீய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் என முயற்சி எடுத்து தோற்றுப் போனவர்களும் இருக்கிறார்கள். ஒன்றைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் சேர்த்து அடிமையாகிக் கொண்டவர்களும் இருக்கின்றனர். கடின வேலை செய்பவர்கள் தங்கள் உடல் வலி மறந்து இருக்கவும் போதையைப் பயன்படுத்துகிறோம் என்று கூறுகிறார்கள். நிச்சயம் ஒரு நாள் மரணம் உண்டு, இதை விட்டு ஒழித்தால் மட்டும் மரணமின்றி வாழ்ந்துவிடலாமா? என தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டு தொடர்பவர்களும் இருக்கிறார்கள்.
இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய மதிப்பு, வேலை, நட்பு, உறவினர்கள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது.
போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலைக் குறைக்கச் செய்கின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்படுட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். உடல் சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
போதை என்பது தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் என எண்ணிவிட இயலாது. இதனால் அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும் பாதிப்படைகின்றது. படிக்கும் வயதில் போதையைப் பயன்படுத்தினால் தம்முடைய படிப்பும் கெட்டு, தன்னோடு பழகும் சக நண்பர்களின் படிப்பையும் பாழ்படுத்திவிடுவது. பணிபுரிபவர்கள் போதைக்கு அடிமையானால் அலுவலக வேலையை இழந்து, தம்முடைய பொருளாதாரத்தை இழந்து குடும்பத்தை வறுமையில் கொண்டு சென்றுவிடுதல், குடும்ப மகிழ்ச்சி மற்றும் சமூக அந்தஸ்தை இழத்தல். வாகனம் ஓட்டுபவர்கள் போதையைப் பயன்படுத்துவதால் கவனம் சிதைந்து விபத்துக்களுக்கு உள்ளாகி உயிர் இழப்புகளை ஏற்படுத்துவது.
சிறிது சிறிதாக போதைப்பழக்கமானது அதிகரித்து அந்த அற்ப இன்பத்தைப் பெற்றுக்கொள்ள திருடுதல், பொய் பேசுதல் மற்றும் மானக்கேடான விஷயமாக இருந்தாலும் அதைச் செய்யத் துணிந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. போதையின் கோரப்பிடியில் அகப்பட்டவர்கள் அஞ்சாமல் பாலியல் குற்றங்களிலும் ஈடுபட்டு அதன் மூலம் பல நோய்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்க எத்தனையோ மறுவாழ்வு மையங்கள் உள்ளன. அலோபதி, ஆயுர்வேதா, சித்தா என எத்தனையோ மருத்துவ முறைகளும் இருக்கின்றன. எனினும் யார் இறைவனிடம் நம்பிக்கை வைத்து, தன் மனதை அந்த நம்பிக்கையில் செலுத்தி, இது பாவம் என எண்ணிக் கைவிடுகின்றாரோ அவர்களால் மட்டும் தான் இத்தகைய பழக்கங்களிலிருந்து மீள்வது முடியும். ஆகவே, திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட விடியல் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
பேராசை நீங்க
பேராசை நீங்க
விதர்ப்ப தேசத்து ராஜா சித்ரகுப்தனுக்கு பெரும் ஆசை எழுந்தது. அவனுக்கு இல்லாத செல்வமே இல்லை. குழந்தைச் செல்வத்தைக் கூட சமீபத்தில் பெற்றெடுத்தான். செக்கச்செவேர் என இருந்த அந்தக் குழந்தையை மன்மதனுக்கு ஈடாக கூறலாம். அழகின் திலகம் அந்தக் குழந்தை. என்னதான் பொன்னும், பொருளும், நாடும், நகரங்களும் இருந்தாலும் அவனுக்கு பக்கத்து நாடான குபேரபுரி மீது ஒரு கண். அவன் அமைச்சர்களை அழைத்தான். மந்திரி பிரதானிகளே! நாம் உலக நாட்டவர்களில் ஒப்பற்றவர்கள் எனப் பெயர் பெற்றுள்ளோம். ஆனால் நம் பக்கத்து நாடான குபேரபுரியும் நம் அளவுக்கு செல்வத்தையும், சிறப்பையும் சம்பாதித்திருக்கிறார்கள். அந்த நாட்டை நம் வலிமையால் கைக்கொண்டால், நாம் மாபெரும் வல்லரசாகி விடுவோம். நம்மை அழிக்க யாராலும் இயலாது. அந்த நாட்டை கைப்பற்ற ஆலோசனை நடத்தி என்னிடம் சொல்லுங்கள், என்றான். அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் அரசனிடம், மன்னா. குபேரபுரி, விதர்ப்ப நாட்டை விட சற்று கூடுதல் படைபலம் உள்ளது. அது மட்டுமின்றி, அந்நாட்டு அரசன் செண்பகராஜன் பெரும் வீரன். வம்புக்கு போகாதவன். மிகவும் நல்லவன். அவனிடம் வம்புக்கு போனால், விதர்ப்ப நாடு அவன் கைக்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேவையற்ற விவகாரம் எதற்காக? என்றனர். சித்ரகுப்தன் கர்ஜித்தான். பயந்தாங்கொள்ளிகளே. இதெல்லாம் நான் அறியாதவனா? எளியவனை வீழ்த்துவது எளிது. வலியவனுடன் மோத வேண்டும். அவனை வெற்றி கொண்டு, செல்வத்துடன் பெரும் புகழையும் ஈட்ட வேண்டும். உங்களிடம் போய் ஆலோசனை கேட்டேனே. உடனே போருக்கு ஆயத்தம் செய்யுங்கள், என்றான். மந்திரிகள் நடுங்கி விட்டனர். போர் மூண்டது. சித்ரகுப்தனின் பேராசை பெருநஷ்டம் ஆனது. அன்று பிரதோஷ நாள். சித்ரகுப்தன் பிரதோஷ விரதத்தை தவறாமல் இருப்பவன். போர் நடந்து கொண்டிருந்த போது வந்த பிரதோஷத்தன்று, தன் விரதத்தை பாதியில் முடித்துக் கொண்டான். அதன் விளைவாக சிவநிந்தைக்கு ஆளானான். பிரதோஷ விரதத்தை கைவிட்டது, பேராசை ஆகிய காரணங்களால் போரில் தோற்றான். அவனைக் கைது செய்ய செண்பகராஜன் ஆட்களை அனுப்பினான். நாடிழந்த சித்ரகுப்தன் தன் கைக்குழந்தையான தர்மகுப்தனை மட்டும் காட்டில் போட்டுவிட்டு, ராணியுடன் இறந்து போனான். அந்தக்குழந்தை காட்டில் அழுது கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அங்கு வந்தாள் ஒரு பிராமணப் பெண்மணி. அவள் தன் கைக்குழந்தையுடன் காட்டில் பசிக்கு ஏதாவது கிடைக்குமா என தேடிக் கொண்டிருந்தாள். அவளுக்கும் ஒரு கைக்குழந்தை இருந்தது. அந்த ஆண் குழந்தைக்கு சிவநேசன் என பெயர் சூட்டியிருந்தாள். அவள் பெரும் ஏழை. காட்டில் விறகு பொறுக்கி அதன்மூலம் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாள். அவள் குழந்தையின் அழுகுரலை கேட்டு ஒரு புதரில் சென்று பார்த்தாள். அங்கே அந்த பிஞ்சுக்குழந்தை அழுதுகொண்டிருந்தது.
யாரோ குழந்தையை காட்டில் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்ட அவள், ஏற்கனவே தனக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இந்தக்குழந்தையையும் எடுத்துச் சென்றால் எப்படி வளர்ப்பது என்று யோசித்தாள். வறுமை நிலையில் இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாதே என கவலைப்பட்டாள். அப்போது வானில் அசரீரி ஒலித்தது. “பெண்ணே! கவலைப்படாதே. இந்தக்குழந்தையை நீ எடுத்துச்செல். இந்தக்குழந்தை உன் வீட்டிற்கு வருவதன் மூலம் உன் ஏழ்மை நிலை ஒழியும்” எனக் கூறியது. அந்தப்பெண் பெரும் சிவபக்தை. தவறாமல் பிரதோஷ விரதம் இருப்பவள். அவள் அசரீரியின் குரலை தெய்வ வாக்காக மதித்து தர்மகுப்தனை வீட்டிற்கு எடுத்துச்சென்றாள். இரண்டு குழந்தைகளையும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்தாள். காலப்போக்கில் அவளுக்கு செல்வநிலை உயர்ந்தது. அவள் காட்டில் போய் விறகுவெட்டும் நிலைமை மாறி நாட்டிற்குள்ளேயே வேலைசெய்து பிழைக்கும் அளவிற்கு உயர்ந்தாள். இன்னும் சில நாட்களில் பொருள் மேலும் சேரவே, வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து, இருப்பதைக் கொண்டே வாழலாம் என்ற நிலைக்கு உயர்ந்தாள். தர்மகுப்தன் ஒருமுறை தான் கண்டெடுத்த பொற்குடப் புதையலையும் தன் தாயிடமே கொடுத்தான். அதன்பின் அவர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆயினர். இரண்டு குழந்தைகளையும் அந்தத் தாய் குருகுலத்தில் சேர்த்து சகல வித்தைகளையும் கற்கச் செய்தாள். காட்டில் கண்டெடுத்த தர்மகுப்தனை ஊரார் குழந்தை என ஒதுக்காமல், தன் மகன் போலவே பாதுகாத்து வளர்த்தாள். இருவரும் வாலிபராயினர். சிவநெறியில் அவர்கள் திளைத்து போயிருந்தனர். தர்மகுப்தன் ருத்திராட்சம் மற்றும் திருநீறு அணிந்து சிவன் கோயிலுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தான். ஒருமுறை கூட அவன் பிரதோஷ விரதம் இருக்கத் தவறுவதில்லை. இதன் பலனாக அவனுக்கு தெய்வபலம் உயர்ந்தது. அவனுக்கு 21 வயது ஆன சமயத்தில் அவன் தன் சகோதரனுடன் காட்டுப்பகுதிக்கு வேடிக்கை பார்ப்பதற்காக சென்றான். காட்டிற்குள் ஒரு சிவன் கோயில் இருந்தது. அங்கு சென்று வழிபட்டு விட்டு ஒருபெரிய பாறையில் ஏறி காட்டின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு தடாகத்தில் சில பெண்கள் குளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் சிவநேசனிடம், இருவரும் போய் அந்தப் பெண்களைப் பார்த்துவிட்டு வரலாம். நீயும் வா என அழைத்தான். ஆனால் சிவநேசன் அங்கு வர மறுத்துவிட்டான். பெண்கள் ஜலக்கிரீடை செய்யும்போது பிரம்மச்சாரிகளான நாம் பார்க்கக்கூடாது என்பது விதி என்று தம்பியிடம் எடுத்துக் கூறினான். ஆனால் தர்மகுப்தன் அதைக்காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவனை வீட்டிற்கு போகச்சொல்லிவிட்டு, தர்மகுப்தன் மட்டும் அந்த குளத்தின் அருகே சென்றான். அங்கு குளித்துவிட்டு கரையேறிய பெண்மணி பூலோக ஊர்வசி போல் காட்சிதந்தாள். அவள் நிச்சயமாக ஒரு ராஜகுமாரியாக இருக்க வேண்டும் என தர்மகுப்தன் கற்பனை செய்துகொண்டு தனக்கு இவள் கிட்டமாட்டாள் என எண்ணியபடியே திரும்பினான். இதை அந்த ராஜகுமாரி கவனித்து விட்டாள். அவள் கந்தர்வ ராஜன் மகள் அஸ்வரூபி. அவள் அந்த இளைஞனை அழைத்தாள். அவனுடைய அழகும், சிவப்பழம் போன்ற தோற்றமும் அவளைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. தேவகுலப் பெண்மணியான அவள், மானிடனான தர்மகுப்தனை விரும்பத் தொடங்கினாள். தன் விருப்பத்தை அவனிடமும் தெரிவித்தாள். ஏழையான என்னால் தெய்வகுலப் பெண்மணியான உன்னை எப்படி திருமணம்செய்து கொள்ள முடியும்? பணமும் குலமும் நம் திருமணத்திற்கு இடையூறாக இருக்கும். எனவே நம் ஆசையை இத்துடன் விட்டுவிடுவதே நல்லது, என்றான். ஆனால் ராஜகுமாரி அஸ்வரூபி இதை ஒப்புக் கொள்ளவில்லை. அவள் தன் தந்தையிடம் சென்று விருப்பத்தை தெரிவித்தாள். மானிடனை தெய்வப் பெண்மணிகள் திருமணம் செய்துகொள்வது என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அரசன், மகள் மீது கொண்ட பாசத்தால் சிவபெருமானிடமே நேரில் சென்று அவருடைய அனுமதியை கேட்டான். ஏற்கனவே பிரதோஷ விரதம் இருக்கும் தன் பக்தனுக்கு அருள்பாலிக்க நினைத்த சிவன், ராஜகுமாரிக்கு தர்மகுப்தனை திருமணம் செய்து வைக்கலாம் என அனுமதி அளித்தார். இறைவனே அனுமதி அளித்ததால் பெற்றோரது ஒப்புதலுடன் திருமணம் இனிதாக நிறைவேறியது. பின்பு கந்தர்வ மன்னனின் படைபலத்துடன் விதர்ப்ப நாட்டிற்கு சென்று செண்பகராஜ மன்னனுடன் போர்தொடுத்து தன் நாட்டை மட்டும் தர்மகுப்தன் பெற்றுக்கொண்டான். எந்தவித ஆசைக்கும் ஆட்படாமல், தான் மீட்ட நாட்டை நீண்டகாலம் ஆண்டான். அனைத்து கோயில்களிலும் பிரதோஷத்தை பெரும் விழா போல் கொண்டாட ஏற்பாடு செய்தான்.
- தினமலர்
சித்திரகுப்தன் பேராசையால் போரில் தோற்றான். பிராமணப் பெண் இருப்பதை வைத்துக்கொண்டு இரு குழந்தைகளையும் வளர்த்தாள். தர்மகுப்தன் போரில் வென்றாலும் தன் நாட்டை மட்டும் பெற்றுக்கொண்டான். ஆகவே, “போதுமென்ற மனமே பேராசையை ஒழிக்கும்.”
பேராசை முட்டாள்தனமானது, பேராசை கொண்டவன் அறிவு பூர்வமாகச் செயல்படவே மாட்டான், விவேகமுள்ளவன் தனக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவனாக இருப்பான். – ஓஷோ
பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை.
– ஷிர்டி சாய்பாபா
பேராசை ஏழு பாவங்களில் தலையானதாம்.
போதுமென்ற மனம் பெற, கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபடப் பலன் கிட்டும்.
பட்டினத்தார் |
திருவொற்றியூர் |
சென்னை |
நெய்யாடியப்பர் | தில்லைஸ்தானம் | தஞ்சாவூர் |