Monthly Archives: February 2012

அருள்மிகு அட்சய பைரவர், இலுப்பைக்குடி

அருள்மிகு அட்சய பைரவர், இலுப்பைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

+04561 – 221 810, 94420 43493 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 – 12 மணி, மாலை 4 – 7.30 மணி வர திறந்திருக்கும்.

 

பொதுவாக, பைரவரின் கையில் கபாலம் இருக்கும். ஆனால், காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோயிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு.

சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, “சுயம்பிரகாசேஸ்வரர்என்றும், “தான்தோன்றீஸ்வரர்என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

அருள்மிகு சாஸ்தா (கைவிடேயப்பர்) திருக்கோயில், கைவிளாஞ்சேரி

அருள்மிகு சாஸ்தா (கைவிடேயப்பர்) திருக்கோயில், கைவிளாஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாஸ்தா (கைவிடேயப்பர்)
அம்மன் பூரணை, புஷ்கலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கைவிளாஞ்சேரி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தைக் கைப்பற்றிய அவர்கள் இந்திரலோகத்தையும் கைப்பற்றினார்கள். அங்கும் ஆட்சி அமைத்தார்கள். இந்திர லோகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த தேவர்களின் தலைவனான இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி மூங்கிலாக வடிவெடுத்து இருவரும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இந்திரலோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் தவமிருந்து வழிபட்டனர். இரவில் யார் கண்ணிலும் படாதபடி மறைந்து சென்று சாஸ்தாவின் கையில் உள்ள தாமரைப் பூவிதழ்களின் நடுவே தங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை சாஸ்தாவிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். சில காலத்திற்குப் பின், சாஸ்தா தனது காவல் கணக்குகளை சிவபெருமானிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வருமுன் இந்திராணியை தனது தளபதியான மகாகாளரிடம் ஒப்படைத்தார். இதுபோன்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை அஜமுகி, அழகே உருவான இந்திராணியைத் தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளை கவர்ந்து செல்ல முயன்றாள். இதைக் கண்டு கோபமடைந்த மகாகாளர், அஜமுகியிடம் சண்டையிட்டார். அவளது கரத்தை வெட்டியதும், அலறியடித்து ஓடினாள். மகாகாளர் இந்திராணியை மீட்டார். அரக்கியான அஜமுகியின் கை விழுந்த காடு கைவிழுந்த சேரி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது கைவிளாஞ்சேரிஎன அழைக்கப்படும் ஊராகும். சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்திராணியைக் கை விடாது காப்பாற்றிய சாஸ்தா இங்கு கைவிடேயப்பர்என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.