Monthly Archives: December 2011
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர், கரூர் மாவட்டம்.
+91- 4324 – 262 010 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பசுபதீஸ்வரர்( பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்) | |
அம்மன் | – | அலங்காரவல்லி , சௌந்தரநாயகி, கிருபா நாயகி | |
தல விருட்சம் | – | வஞ்சி | |
தீர்த்தம் | – | தடாகைதீர்த்தம், ஆம்பிரவதி (அமராவதி) நதி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கருவூர், திருக்கருவூர் ஆனிலை | |
ஊர் | – | கரூர் | |
மாவட்டம் | – | கரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
பிரம்மனுக்கு, தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவைக் கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து, வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, “புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு” என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, இலிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், “நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை ‘பசுபதிநாதர்‘ என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்” என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய, பிரம்மனுக்கு கர்வம் நீங்கியது. இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர், கரூர் மாவட்டம்.
+91-4324- 262 010, 238 442, 99435 27792 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கல்யாண விகிர்தீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | பண்ணேர் மொழியம்மை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | மணிமுத்தாறு, குடகனாறு | |
ஆகமம் | – | காமிகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வெஞ்சமாங்கூடலூர் | |
மாவட்டம் | – | கரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். அவளை அடைவதற்காக சமயம் பார்த்து காத்திருந்த அவன், ஒருநாள் விடியும் முன்பே கவுதமர் ஆசிரமத்திற்கு சென்றான். சேவல் வடிவம் எடுத்து கூவினான். அதைக்கேட்ட கவுதமர் விடிந்து விட்டது என எண்ணி ஆற்றிற்கு நீராடச் சென்றுவிட்டார். அப்போது, இந்திரன் கவுதமரின் வடிவம் எடுத்து ஆசிரமத்திற்குள் புகுந்தான். அவனைத் தன் கணவர் என்றெண்ணிய அகலிகை, பணிவிடைகள் செய்தாள். இதனிடையே ஆற்றிற்குச் சென்ற கவுதமர் பொழுது சரியாக விடியாமல் இருந்ததைக் கண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு திரும்பினார். கவுதமரைக் கண்ட இந்திரன், பூனை வடிவம் எடுத்து தப்ப முயன்றான். நடந்த நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியில் அறிந்த கவுதமர், அவனது உடல் முழுதும் கண்ணாக மாறும்படி சபித்துவிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி, தான் செய்த பாவத்திற்கு விமோசனம் தேடினான். இத்தலத்திற்கு வந்த இந்திரன், சிவனை வணங்கி தவம் செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும் என்றார். அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே, இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான். சிவனும், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
சிவத்தல யாத்திரை வந்த சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பொன்னும், பொருளும் தீர்ந்து விட்டது. எனவே, விகிர்தீஸ்வரரை வணங்கிப் பொன் வேண்டும் எனக்கேட்டார். சிவன் தன்னிடம் “பொன் இல்லை” என்றார். “உன்னிடம் இல்லாத பொருள் ஏது?” என்று சொல்லி கட்டாயப்படுத்தி, பொன் கேட்டார் சுந்தரர். அப்போதும் சிவன், “தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உனக்கு பொன் தரவேண்டுமானால் எந்த பொருளையாவது அடமானம் வைத்துத்தான் தரவேண்டும்” என்றார். சுந்தரரும் விடுவதாக இல்லை. “எதையாவது வைத்தாவது எனக்குப் பொன் தாருங்கள்” என்றார். சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய சிவன், பார்வதி தேவியை மூதாட்டியாக மாற்றி அங்கு வரச்செய்தார். அவளிடம் முருகன், விநாயகர் இருவரையும் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மாறாகப் பொன் தரும்படி கேட்டார். அவரும் பொன் தந்தார். அதனை சுந்தரருக்கு கொடுத்தார். நண்பன், உதவி என்று தன்னிடம் வந்தபோது தன் பிள்ளைகளை அடமானம் வைத்து உதவி செய்தார் இத்தலத்து சிவன். இவ்வாறு நட்புக்கு மரியாதை செய்த சிவனாக இவர் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் நண்பர்களுக்குள் ஒற்றுமை கூடும், நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர். பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் 6 முகங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை அருணகிரியார், “வெஞ்சக்கூடல் பெருமானே” என்று பதிகம் பாடியிருக்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவருக்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் மீண்டும் இணைந்து தாம்பத்யம் சிறக்கும் என நம்புகிறார்கள்.