Monthly Archives: December 2011

அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி

அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 94423 47433 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அக்கினீசுவரர், தீயாடியப்பர்
அம்மன் சௌந்தரநாயகி, அழகம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி, அக்னி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மேலைத்திருக்காட்டுப்பள்ளி
ஊர் திருக்காட்டுப்பள்ளி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும், அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். சிவன் அக்னிதேவன் முன் தோன்றி, “இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும், அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும்என்றும் வரமளித்தார். அக்கினி வழிபட்ட தலமாதலின் கோயிலுக்கு அக்னீஸ்வரம்என்பது பெயர். அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது. இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாள்களில் நீராடி வழிபடுதல் சிறப்பென்பர்.

உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாகப் பூத்துவந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்துவந்து தர, அவற்றைப் பெற்று தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்தமனைவி அம்மலரைச் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர். இறைவனைத் திருமால், பிரமன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி ஆகியோர் வழிபட்ட தலம். இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்தில் கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் அழகமர்மங்கைஎனக் குறிக்கப்படுகிறது. நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.

அருள்மிகு திருமுருகநாதசுவாமி திருக்கோயில் , திருமுருகன்பூண்டி

அருள்மிகு திருமுருக நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4296- 273 507 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை5.30 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமுருகநாதர்
அம்மன் ஆவுடை நாயகி, மங்களாம்பிகை
தீர்த்தம் சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமுருகன்பூண்டி
ஊர் திருமுருகன்பூண்டி
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி, துன்புறுத்தி வந்தான். அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட, முருகன் சம்காரத்திற்கு தயாரானார். ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி, பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எப்படியிருப்பினும், சூரனைத் துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மகத்தி தோஷம் பீடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி, மாதவி நாதரை வணங்க வந்தார். அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட, அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீரை எடுத்து, சிவனை மேற்கு நோக்கியபடி அமைத்து வணங்கினார். பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய பிரம்மகத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.

சிவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தான் பெற்ற கவிப்புலமையின் பலனாக தனது நண்பனான மன்னன் சேரமானிடம் பொன்னும், பொருளுமாகப் பரிசுகள் பல பெற்று இவ்வழியே திரும்பிக்கொண்டிருந்தார். தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வந்தபோது இருட்டியதால் அருகில் உள்ள கூப்பிடுவிநாயகர் கோயில் வாயிலில் ஓய்வெடுத்தார். அப்போது, தன்னை துதிக்காமல் சென்ற சுந்தரரைச் சோதிக்க எண்ணிய சிவன், தனது பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களைக் கவரச்செய்தார். இதனால் மனக்கலக்கமுற்ற சுந்தரர் அங்கே இருந்த கூப்பிடுவிநாயகரிடம் தனது பொருட்களை மீட்க வழி கூறும்படி முறையிட்டார். தனது தகப்பனின்திருவிளையாடலை அறிந்த அவர் தும்பிக்கையால் கிழக்கு திசை நோக்கி காட்டினார். அவர் காட்டிய திசைக்கு வந்த சுந்தரர் அங்கு பதுங்கியிருந்த சிவனிடம் முறையிட்டு, அவரை உரிமையுடன் திட்டிப்பாடி, இழந்த பொருளை மீட்டுத் தரும்படி வேண்டினார். அவரது பாடலில் மயங்கிய சிவபெருமான் தான் பறித்த பொன்னையும், பொருளையும் அவருக்கே திருப்பி வழங்கி ஆசிபுரிந்தார். இவ்வாறு சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் தனியே திருவிளையாடல் நடத்திய தலம் எனும் பெருமையை உடையது.