Monthly Archives: October 2011
அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில், எழுமாத்தூர்
அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில், எழுமாத்தூர் – 638 001 ஈரோடு மாவட்டம்.
+91-424-2267578
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆருத்ரா கபாலீஸ்வரர் |
அம்மன் | – | வாரணி அம்பாள் |
தல விருட்சம் | – | வன்னிமரம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருத்தொண்டீசுவரம் |
ஊர் | – | எழுமாத்தூர் |
மாவட்டம் | – | ஈரோடு |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இந்த சிவாலயத்தை கட்டியவர் லட்சுமி காந்தன் என்ற அரசன் என்று சொல்லப்படுகிறது. இந்த அரசன் வேள்வி ஒன்றை நடத்தும் போது, அதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பால்குடங்கள் கீழே வைக்கப்பட்டதும், கவிழ்ந்து கொண்டே இருந்தன. அரசன் இந்த இடத்தை அகழ்ந்து பார்த்தான். அப்போது மண்வெட்டி பட்டு உதிரம் பெருக அரசன் அஞ்சி இறைவனின் திருமேனி கண்டு கோயில் எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது.
கி.பி.1004 முதல் 1280 முடிய இந்நாட்டை ஆண்ட கொங்கு சோழர்களில் சிலர் கரிகாலன் என்ற பெயரை பெற்றிருந்தனர். அவர்களுள் ஒரு கரிகாற்சோழன் சமய முதலி என்பவருடைய துணையுடன் காவேரி ஆற்றோரத்தில் 36 சிவாலயங்களை அமைத்தார். அந்த சிவாலயங்களில் ஒன்று ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில் என்றும் சொல்லப்படுவதுண்டு.
ஆருத்ரா கபாலன் என்ற அரக்கன் இங்கு வாழ்ந்து வந்தான். சிவனால் கொல்லப்பட்ட அவன், உயிர் துறக்கும் தருவாயில் இத்தலத்துக்கு தனது பெயரை சூட்ட வேண்டும் என இறைவனிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான். இதனால் இறைவனுக்கு ஆருத்ரா கபாலீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.
அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், புள்ளமங்கை
அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், புள்ளமங்கை, தஞ்சை மாவட்டம்.
திருப்புள்ளமங்கை தற்போது பசுபதிகோவில் என்று வழங்குகிறது.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதி கோயில், தஞ்சை மாவட்டம்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆலந்துறை நாதர், பசுபதி நாதர், பிரம்புரீசுவரர் |
அம்மன் | – | அல்லியங்கோதை, சௌந்தரநாயகி |
தீர்த்தம் | – | காவிரி, சிவதீர்த்தங்கள் |
புராணப் பெயர் | – | புள்ள மங்கை |
ஊர் | – | பசுபதி கோயில் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
குடமுருட்டி ஆற்றின் கரையில் இந்த ஆலயம் உள்ளது. ஊர்ப்பெயர் பண்டைநாளில் புள்ள மங்கை என்றும், கோயிற் பெயர் ஆலந்துறை என்றும் வழங்கப்பெற்றது. ஆல மரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறைத் தலம் ஆதலின் ஆலந்துறை என்று பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. சம்பந்தர் தன் பதிகத்தின் எல்லா பாடலிலும் புள்ளமங்கை என்ற பெயரையும், ஆலந்துறையில் உறையும் இறைவன் என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டுக்களில் “ஆலந்துறை மகாதேவர் கோயில்” என்று இக்கோயில் குறிக்கப்படுகின்றது. இன்றைய நாளில் ஊர்ப் பெயர் மாறி பசுபதி கோயில் என்று வழங்கப்படுகிறது.
இத்தலத்திற்கு அருகிலுள்ள பாடல் பெற்ற தலமான திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட ஏழு தலங்களுள் இது 5வது தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (இத்தலம்), தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனை சப்த கன்னியர்கள் மட்டுமன்றி, கேட்ட வரமருளும் தேவலோகப் பசுவான காமதேனு நாள் தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்குண்டு. ஆகையால் இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது முதன் முதலில் வெளிவந்த ஆலகால நஞ்சினை எடுத்துச் சிவபெருமான் உண்டு தன் கழுத்தில் அடக்கிய ஊர் இத்தலம் என்பதால் இதலத்திற்கு ஆலந்துறை என்ற பெயரும், இறைவன் ஆலந்துறைநாதர் என்றும் கூட அழைக்கப்படுகிறார்.