Monthly Archives: July 2011
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக் கோயில், திருஇந்தளூர்
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக் கோயில், திருஇந்தளூர்– 609 003. நாகப்பட்டினம் மாவட்டம்.+91- 4364-223 330 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர் |
தாயார் | – | பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி |
தீர்த்தம் | – | இந்து புஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திரு இந்தளூர் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
நினைத்ததை எல்லாம் பெற்றுத்தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்தான். இவன் ஏகாதசியில் விரதம் இருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பான். இவனது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் தேவலோகத்திலோ அனைவரும் கலக்கமாக இருந்தனர். அம்பரீசன் நூறாவது விரதம் முடித்து விட்டால் தேவலோகப்பதவி கூட கிடைத்து விடும். மானிடனுக்கு இப்பதவி கிடைத்து விட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் எனப் பயந்தனர்.
இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர். துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துவிட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க, பூமிக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். அவன் ஏகாதசி விரதம் முடித்திருந்தாலும் துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். அப்போது தான் ஏகாதசியின் முழுப்பயனும் அவனுக்கு கிடைக்கும். துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை. துவாதசி ஆரம்பிக்க, மன்னன் உணவு உண்ணத் தயாராக இருந்தான். அதற்குள் துர்வாசர் வந்து விட்டார். தன் விரதத்தை தடுக்கத்தான் இவர் வந்துள்ளார் என்பது மன்னனுக்கு தெரியாது. முனிவரை வரவேற்ற மன்னன்,”தாங்களும் என்னுடன் உணவருந்தினால், எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும்” என்றான். முனிவரும் சம்மதித்துவிட்டு நதியில் நீராடிவிட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறிச் சென்றார். முனிவரின் திட்டம் என்னவென்றால், தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும். மன்னன் நமக்காக காத்திருந்தால் அவனது விரதம் தடை படும் என்பது தான். துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது. கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்துவிடுவார். இன்னும் சிலநிமிடங்களே இருந்தது. வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தான். உடனே தலைமைப்பண்டிதர்,”உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்துவிடும்” என்று கூறினர். அதேபோல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்து விட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காகக் காத்திருந்தான்.
அருள்மிகு நாண்மதியப்பெருமாள், தலைச்சங்க நாண்மதியம் (தலச்சங்காடு)
அருள்மிகு நாண்மதியப்பெருமாள், தலைச்சங்க நாண்மதியம் (தலச்சங்காடு)-609107 நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 99947 29773 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாண்மதியப்பெருமாள் |
உற்சவர் | – | வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி |
தாயார் | – | தலைச்சங்க நாச்சியார் |
தீர்த்தம் | – | சந்திர புஷ்கரணி |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | தலச்சங்காடு |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, அதிலிருந்து மகாலட்சுமிக்கு முன்னதாக தோன்றியவர் சந்திரன். இவர், இலட்சுமியின் அண்ணன் ஆவார். நவகிரகத்தில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். அத்திரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்கள் கூறுகிறது. சந்திரன் மிக அழகானவர். இவர் தேவகுருவிடம் கல்வி கற்று, பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு முறை மகாவிஷ்ணுவை குறித்து “ராஜசூய யாகம்” செய்தார். சகல வெற்றிகளையும் தரும் இந்த யாகத்திற்கு ஏராளமான முனிவர்கள் வந்திருந்தனர். இவர்களுடன் தேவகுருவின் மனைவி தாரையும் வந்தாள். சந்திரனும், தாரையும் நேருக்கு நேர் பார்த்ததும் இருவரும் விரும்பத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த குரு, திருமாலிடம் முறையிட்டார். சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாதவராக அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட்டார். இதற்கிடையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் என்ற குழந்தை பிறந்தது. பின்னர் திருமால் கூறியபடி குருவிடம் மனைவியை ஒப்படைத்தான் சந்திரன். தந்தை மீது புதனுக்கு வெறுப்பு ஏற்பட்டு, இமயமலையில் கடும் தவம் செய்து கிரக பதவியடைந்தான்.
இதைத்தவிர சந்திரன் இன்னொரு தவறும் செய்து விட்டான். தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனைத் திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,”உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்” என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழுச் சந்திரன் தேய தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைத்தது. வருத்தமடைந்த அவன் திருமாலிடம் சென்று தன் குறையை கூறினான். அதற்கு பெருமாள்,”சந்திரனே. நீ உடனே ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்கநாண்மதியம் ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி என்னை வழிபட்டால் உன் சாபம் நீங்கும்” என்றார். அவர் கூறியபடி ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் சென்று வழிபட்ட சந்திரன், கடைசியாகத் தலைச்சங்காடு வந்து குளத்தில் நீராடிப் பெருமாளை வழிபட்டான். உடனே அவனுக்கு ஏற்பட்ட தோஷமும், நோயும் விலகியது. பெருமாள் அவனுக்கு காட்சி கொடுத்து அவனை அப்படியே தலையில் சூடிக்கொண்டார்.