Monthly Archives: June 2011
அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம்
அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம்-608 001, கடலூர் மாவட்டம்.
*******************************************************************************************
+91 4144- 223 450 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 7.30 இரவு மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – சிதம்பரம்
மாநிலம்: – தமிழ்நாடு
மன்னன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட தோட நிவர்த்திக்காக, தல யாத்திரை சென்றான். வழியில் அவனைச் சந்தித்த அந்தணர் ஒருவர், காயத்ரி மந்திரத்தால் அவர் பெற்ற புண்ணியத்தை மன்னனுக்குக் கொடுத்தார். இதனால் மன்னனின் தோடம் நீங்கியது. மகிழ்ந்த மன்னன், அந்தணருக்கு பொருள் கொடுத்தான். அதை வாங்க மறுத்தவர், காயத்ரிக்கு கோயில் கட்டும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி மன்னன் இங்கு காயத்ரியை மூலவராக வைத்து தனிக்கோயில் கட்டினான்.
சிவனுக்குரிய நந்தியை இவளது சன்னதிக்குள் பிரதிட்டை செய்துள்ளனர். கோட்டத்தில் அட்டபுச(8கை) துர்க்கை, அமிர்த கலசம் ஏந்திய மகாலட்சுமி, சரசுவதி உள்ளனர்.
மூலவர் காயத்ரி மேற்கு நோக்கி, ஐந்து முகம், ஆயுதம் ஏந்திய பத்து கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கிறாள். இவள் மூன்று அம்ச அம்பிகையாக காட்சி அளிக்கிறாள். பாதம் அருகில் ஸ்ரீசக்ரம் உள்ளது. இவள் காலையில் காயத்ரி, மதியம் சாவித்திரி, மாலையில் சரசுவதியாக அருளுவதாக ஐதீகம். இவளே மும்மூர்த்திகள் மற்றும் முத்தேவியரின் அம்சமாக இருக்கிறாள்.
அருள்மிகு துர்க்கை கோயில், பட்டீசுவரம்
அருள்மிகு துர்க்கை கோயில், பட்டீசுவரம், தஞ்சை மாவட்டம்
**********************************************************************
தல விருட்சம்: வன்னி
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:மழபாடி, திருப்பட்டீசுவரம் ஊர்:திருப்பட்டீச்சுரம்
மாநிலம்: தமிழ்நாடு
பட்டிக்கன்று மணலினால் ஓர் லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
அருள்மிகு தேனுபுரீசுவரர் ஆலயம், பட்டீசுவரத்தில் உள்ளது. பட்டீசுவரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீசுவரம் கோவிலில் பிரதிட்டை செய்தார்கள்.
தேவலோகப் பசுவான காமதேனுவின் மகள் பட்டி, இங்கே ஈசனைப் பூசித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் என்றாயிற்று. கோயிலின் வடக்கு வாயிலில் சுமார் ஆறடி உயரமுள்ள துர்க்கை அருள்கிறாள்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலங்களிலும், அமாவாசை, பௌர்ணமி, அட்டமி, நவமி திதிகளிலும் இந்த துர்க்கை கோலாகலமாக பூசிக்கப்
படுகிறாள். சாந்த வடிவமாக, எட்டுத் திருக்கரங்கள், முக்கண்களுடனும், காதில் குண்டலங்கள் துலங்க அன்னை மீனாட்சியைப் போலவே கையில் கிளி ஏந்திப் பரவச தரிசனம் அளிக்கிறாள் துர்க்கை.
அன்னை கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் போன்றவற்றை ஏந்தி வலக் கரத்தை அபயமாகவும், இடக்கரத்தை தன் தொடையின் மீது இருத்தியும் அழகே வடிவாய் உள்ளாள். பொதுவாக காளி மற்றும் துர்க்காம்பிகைக்கு சிம்ம வாகனம் மேற்கு நோக்கியே காணப்படும். ஆனால் இந்த துர்க்கையின் சிம்ம வாகனம் இடப்புறம் நோக்கி வித்தியாசமாகக் காணப்படுகிறது.
இந்த அன்னைக்கு அடிக்கடி சண்டி யாகம் நடப்பதால், சண்டி யாகத்திற்கென்றே ஒரு மண்டபம் ஆலயத்தில் உள்ளது.