Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம்

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம், திருவாரூர் மாவட்டம்.

+91-4366 – 292 300, 291 257, 94431 13025

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

மூலவர் இராமநாதசுவாமி
உற்சவர் நந்தியுடன் சோமாஸ்கந்தர்
அம்மன் சரிவார்குழலி
தல விருட்சம் மகிழம், செண்பகம்
தீர்த்தம் இராம தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இராமநாதீச்சரம், இராமனதீச்சரம்
ஊர் திருக்கண்ணபுரம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

இராமர், சீதையை மீட்க இலங்கை சென்றபோது, போரில் இராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார். ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், இராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பிகை தோன்றி, நந்தியை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, இராமர் சிவபூஜை செய்ய உதவினாள். இராமர் சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி, “இராமநாதேஸ்வரர்என்று பெயர் பெற்றார். ராமரை நந்தி மறைத்ததால், “ராமநந்தீச்சரம்என்ற பெயரும் உண்டு. சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது இலிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.

முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறு இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன், அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார். ஒருசமயம் மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்றபோது ஓரிடத்தில் 4 பெண் குழந்தைகளைக் கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும்திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி,” திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை,” திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.

அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்

அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 292 300, +91- 94431 13025 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வர்த்தமானீஸ்வரர்
உற்சவர் கல்யாண சுந்தரர்
அம்மன் மனோன்மணி
தல விருட்சம் பின்னை
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சரண்யபுரம்
ஊர் திருப்புகலூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

வருணன், வாயு, அக்னி மூவருக்கும் ஒருசமயம் போட்டி உண்டானது. இதில் வருணனும், வாயுவும் சேர்ந்து அக்னியை, சக்தியில்லாமல் போகும்படி செய்துவிட்டனர். அக்னி சக்தி இழந்ததால், தேவலோகம், பூலோகத்தில் மகரிஷிகளால் யாகம் நடத்த முடியவில்லை. எனவே அக்னி தனக்கு மீண்டும் சக்தி வேண்டி சிவனை வேண்டினான். பூலோகத்தில் தன்னை வழிபட மீண்டும் சக்தி கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி இங்கு வழிபட்ட அக்னிக்கு சிவன், சக்தி தந்து 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவத்தையும் கொடுத்தருளினார். அவர் வழிபட்ட சிவன் இத்தலத்தில் அக்னீஸ்வரராகவும், வர்த்தமானீஸ்வரராகவும் இங்கு எழுந்தருளியுள்ளனர். நாயன்மார்களில் ஒருவரான முருகனார் இத்தலத்தில் பிறந்தவர். சிவபக்தரான அவர் மலர்களை பறித்து, மாலையாக தொடுத்து தினமும் வர்த்தமானீஸ்வரரை வழிபட்டு வந்தார். இங்கு வணங்க வரும் பக்தர்களுக்காக மடம் ஒன்றையும் கட்டினார். திருஞானசம்பந்தரின் நண்பரான இவர், சீர்காழி அருகிலுள்ள திருப்பெருமணநல்லூரில் (ஆச்சாள்புரம்) சம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டார். சம்பந்தருடன் சேர்த்து ஜோதியில் ஐக்கியமாகி முக்தி பெற்றார். சிவன் இவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

இளங்கோயில்: வர்த்தமானீஸ்வரருக்கு எதிரில் முருக நாயனார், கையில் மலர்மாலை வைத்தபடி காட்சி தருகிறார். அம்பிகை மனோன்மணி, முன்மண்டபத்தில் காட்சி தருகிறாள். பூஜையின்போது சுவாமிக்கு வாசனை மலர்மாலை அணிவித்து, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் வர்த்தமானீஸ்வரருக்கு வலதுபுறத்தில் அக்னீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். வர்த்தமானீஸ்வரர் திருஞானசம்பந்தராலும், அக்னீஸ்வரர் மூவராலும் பாடல் பெற்றவர்கள் ஆவர். வர்த்தமானீஸ்வரர், அக்னீஸ்வரர் இருவரது சன்னதியையும் சேர்த்தே சுற்றி வந்து வணங்க முடியும். வர்த்தமானீஸ்வரர் சன்னதியை தனியே வலம் வர முடியாது. இவருக்கென தனி கொடிமரம், கோஷ்ட தெய்வங்களும் இல்லை. இக்கோயிலை இளங்கோயில்என்று அழைக்கிறார்கள். நுழைவுவாயிலை அடுத்து அக்னி பகவான் மூலவராக இருப்பது விசேஷ அம்சம். திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம் இது. சுந்தரருக்காக சிவன், செங்கற்களை தங்கமாக மாற்றி இத்தலத்தில் அருள்புரிந்தார்.