Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், புதுவண்டிப்பாளையம்

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், புதுவண்டிப்பாளையம், கடலூர் மாவட்டம்.

முருகன் தலங்களிலேயே திருச்செந்தூரைப் போலவே மிகவும் சிறப்பாக சூரசம்காரம் கொண்டாடப் படும் தலம் கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்.

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சமணர்களின் கொடுமைக்கு ஆளானார். சமணர்களின் தலைவனும், அரசனுமான மகேந்திரவர்மன் அவரை கல்லோடு சேர்த்துக் கட்டி வங்கக் கடலில் வீசி எறிந்தான். இருந்தும் அந்த கல்லையே தெப்பமாக்கி நமசிவாயஎன்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து திருப்பாதிரிப்புலியூருக்கு தென் திசை நோக்கி மிதந்து வந்து, கெடில நதி வாயிலாக கரையேறினார் நாவுக்கரசர்.

அப்பர் பெருமான் கரையேறிய அருங்காட்சியினை ஆண்டு தோறும் சித்திரை அனுஷத்தில் கொண்டாடுவார்கள். அப்படி கொண்டாடும் போது திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரரும், புதுவண்டிப்பாளையம் முருகப்பெருமானும் அந்த தலத்துக்கு எழுந்தருளி அப்பருக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுக்கின்றனர்.

இத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம். இங்கு வேல் கோட்டம்தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 7 மணி 10 முதல் மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி

அம்மன்

வள்ளி, தெய்வானை

பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர்

பொள்ளாச்சி

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

விவசாய வளம் கொழிக்கும் செழிப்பான ஊர் பொள்ளாச்சி. இவ்வூரின் பெயர்க் காரணங்களை இரண்டு விதமாகக் கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகளில் பொள்ளாச்சி வாரச்சந்தை பெயர் பெற்ற சந்தையாகும். சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் வருவர். அப்படிப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொருள் ஆட்சிஎன்ற பெயர் ஏற்பட்டு அது நாளடைவில் மருவி பொள்ளாச்சிஎன வழங்கலாயிற்று. இவ்வூரில் மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்து சோலைகளாக பரிமளித்தது. சோலைகள் பொழில்கள் என வழங்கப்பட்டன. சிற்றூர்களை வாய்ச்சி என அழைப்பர். பொழில்களுக்கு இடையில் அமைந்த வாய்ச்சி பொழில்வாய்ச்சிஎன வழங்கப்பட்டு நாளடைவில் இப்பெயர் மருவி பொள்ளாச்சிஎன வழங்கலாயிற்று என்றும் கூறுவர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் கொங்கு சுந்தர பாண்டியன், கொங்கு திரிபுவனச் சக்ரவர்த்தி விக்ரமசோழன் ஆகிய அரசர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறியலாம். தெற்குச் சுவரில் கொச்சி அரச பரம்பரையைச் சார்ந்த மன்னர் பெரும் படப்பு சொரூபத்தின் ஆறாம் ஆண்டு ஆட்சி கல்வெட்டு ஒன்றுள்ளது. இதில் இக்கோயிலின் பெயர் திருவகத்தீஸ்வர முடையார் கோயில்எனக் காணப்படுகிறது. எனவே இத்தலம் சிவத்தலமாக இருந்திருக்ககூடும் என்ற குறிப்பு உள்ளது.