Category Archives: திருச்சி

அருள்மிகு தசாவதாரக் கோயில், ஸ்ரீரங்கம்

அருள்மிகு தசாவதாரக் கோயில், ஸ்ரீரங்கம், கொள்ளிடம் ஆற்றங்கரை, திருச்சி மாவட்டம்.

+91-431- 243 59 05 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன

உற்சவர்

லட்சுமி நாராயணர்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

ஸ்ரீரங்கம்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

உலகத்தில் தருமம் அழிந்து, அதர்மம் ஓங்குகிற சமயம், நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார். உலக உயிர்களுக்கு இறைவன் தன் கருணையால் இன்பம் ஊட்டுவதற்கே அவதாரங்களை இறைவன் எடுக்கிறார். அதனடிப்படையில் ஸ்ரீரங்கம் கோயில் இராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை ஏற்று, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோயிலாகும்.

ஸ்ரீஅகோபில மடத்தால் நிர்வகிக்கப்படும் இந்த கோயில் மூலஸ்தானத்தில், மச்சா, கூர்மா, வராக, நரசிம்மா ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்குசக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், இராம அவதாரம் வில், அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும், கல்கி அவதாரம் கேடயம், கத்தியுடனும் பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். மூலஸ்தானத்தில் சேனாதிபதி விஸ்வக்சேனர் வீற்றிருக்கிறார். இங்குள்ள உற்சவ மூர்த்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர்.

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி மாவட்டம்.

+91- 431- 243 2246 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

காட்டழகிய சிங்கர்

தல விருட்சம்

வன்னி மரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

ஸ்ரீரங்கம்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

முன்காலத்தில் இப்பகுதி காடாக இருந்தது. காட்டு யானைகளின் தொந்தரவை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடினர். யானைகளை அடித்து விரட்டுவது இயலாத காரியம். அவற்றை அழிக்க எண்ணுவதே பாவ காரியம் என்பதால் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்த மக்கள், நரசிம்மருக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்த பின் யானைகளின் தொந்தரவு குறைந்தது. எனவே இங்குள்ள பெருமாள் காட்டழகிய சிங்கர் எனப்பட்டார்.

கர்ப்பகிரகத்தில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தன் இடது தொடையில் உட்கார வைத்து ஆலிங்கன நிலையில் உள்ளார். வலது கையில் அபயஹஸ்தம் காட்டுகிறார். “என்னை நம்பியவர்களை நான் கைவிட்டதில்லைஎன்பது போல் இந்த அமைப்பு உள்ளது. பொதுவாக, கிழக்கு பார்த்திருக்கும் பெருமாள் இங்கு மேற்கு பார்த்த சன்னதியில் உள்ளார். விஜயதசமியன்று ஸ்ரீரங்கம் பெருமாள் இங்குள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி, காலை முதல் மாலை வரை அருள்பாலிக்கிறார். அதன்பின் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வீதியில் உள்ள வன்னி மரத்தை நோக்கி அம்பெய்த பின் தெற்கு வாசல் வழியாக மூலஸ்தானம் செல்கிறார். இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம். சுவாதி நட்சத்திரம் பெருமாளின் ஜென்ம நட்சத்திரம். அன்று பெருமாளுக்கு சிறப்பாக திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் வழிபடுவோர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும், தீராத நோய் தீரும் என்பது ஐதீகம். இது தவிர பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்கள் குறிப்பிடும் நாள்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் இவரை வழிபட்டால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை வரம் நிச்சயம் என்கிறார்கள்.