Category Archives: சேலம்

அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், காருவள்ளி

அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், காருவள்ளி, சின்னத் திருப்பதி, சேலம் மாவட்டம்.

+91- 4290 – 246 344 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரசன்ன வெங்கட்ரமணர்

தாயார்

அலமேலு மங்கை

தல விருட்சம்

அரப்பு, புளி

தீர்த்தம்

சந்திரபுஷ்கரணி

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

காருவள்ளி

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

திருப்பதியில்குடிகொண்டிருக்கும் வெங்கடேசப்பெருமாள், குளிக்கச்சென்றார். தலைக்கு தேய்க்க அரப்பை தேடியபோது, அங்கு அரப்பு இல்லை. தன் மனைவியிடம் கேட்கலாம் என்று பார்த்தார். அவரும் அங்கில்லை. தாயாரைத்தேடி பல இடங்களுக்கும் சென்ற பெருமாள் அரப்பு மரங்கள் நிறைந்திருந்த இக்குன்றுக்கு வந்தார். குன்றின் அழகில் மயங்கிய அவர், அரப்பு எடுத்து குளித்துவிட்டு இங்கேயே தங்கினார் என்று புராணம் கூறுகிறது. பிற்காலத்தில், இக்குன்றில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும் புற்று ஒன்றில் தொடர்ந்து பால் சொரிந்தது. வியந்த மக்கள் புற்றுக்கு அடியில் பெருமாள் சுயம்புவாக இருந்ததைக்கண்டு, அவருக்கு கோயில் கட்டினர். கோயிலுக்கு முன்புறம் சிறிய வெங்கட்ரமணர் சிலை உள்ளது. இவரது தோளில் பக்தர்கள் துளசியை ஒட்டி வைத்து விட்டு, தமது வேண்டுதல்களையும், புதிதாக செய்யவிரும்பும் செயல்களுக்கு அனுமதியையும் பெற நண்பர்களிடம் சொல்வது போல உரிமையுடன் சொல்கின்றனர். அப்போது, பெருமாளின் தோளில் இருக்கும் துளசி கீழே விழுந்தால் உத்தரவு கிடைத்ததாக எண்ணி அச்செயலை செய்கின்றனர். சுற்றுவட்டார மக்கள் காலங்காலமாக இம்முறையில் உத்தரவு கேட்டபின்பே தமது வீட்டு வைபவங்களைத் தொடங்குகின்றனர்.

வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே சண்டை நிகழ்ந்தபோது, வாயுவின் பலத்தால் தெறித்த ஆனந்த பர்வதத்தின் ஒரு பகுதியே இக்குன்று என வரலாறு கூறுகிறது. திருப்பதியில் கோயில் கொண்டுள்ளதைப்போலவே இவ்விடத்தில், வெங்கடேசப்பெருமாள் அருளுகிறார். எனவே, இத்தலம் சின்னத்திருப்பதிஎனப்படுகிறது.

அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர்

அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர், சேலம் மாவட்டம்.

+91- 4282-260248, +91-99946 31830

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கரிவரதராஜப்பெருமாள்

தாயார்

கமலவல்லி

தல விருட்சம்

வில்வம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

ஆறகழூர்

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை ராஜராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் மக்கள் செல்வச் செழிப்புடன் இருந்தனர். எனவே, அவர்கள் இறைவழிபாட்டை முற்றிலும் மறந்தனர். அவர்களுக்கு இறைவழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக திருமால், வருணனிடம் சொல்லி மழை பெய்யாமல் செய்தார். இதனால், பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். துன்பம் வந்ததும் கடவுளின் நினைவு வந்தது. பெருமாளிடம் தங்கள் பக்தியின்மைக்காக மன்னிப்பு கோரினர். அன்றிரவில் மன்னனின் கனவில் திருமால் தோன்றி, “உங்களுக்கு செல்வம் தருவதும், அதை நிறுத்துவதும் எமது கையில்தான் உள்ளது. நிலையற்ற செல்வத்தின் பின்னால் சென்று இறைவழிபாட்டை மறக்காதீர்கள்என்றார். உண்மையை உணர்ந்த மன்னன் மன்னிப்பு கேட்டான். பின், திருமால் நாட்டில் கரிய மேகங்கள் உருவாகச் செய்து மழைபொழிவித்தார். மகிழ்ந்த மன்னன் இவ்விடத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டினான். கரிய மேகங்களை உருவாக்கி அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி கரிவரதராஜப் பெருமாள்என பெயர் பெற்றார்.

கருறையில் கரிவரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். மழை வேண்டுபவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். தாயார் கமலவல்லி, சுவாமி சன்னதிக்கு எதிரே கிழக்கு பார்த்தபடி, தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சன்னதியின் முன்புறம் நாகதேவி இருக்கிறாள்.