Category Archives: கடலூர்

அருள்மிகு பாபாஜி திருக்கோயில், பரங்கிப்பேட்டை

அருள்மிகு பாபாஜி திருக்கோயில், ரேவு மெயின்ரோடு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 44 – 2464 3630, 99941 97935

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சன்னதிக்கு வெளியே நின்று பாபாஜியைத் தரிசிக்கலாம்.

மூலவர் பாபாஜி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பரங்கிப்பேட்டை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பரங்கிப்பேட்டையில் சுவேதநாதய்யர், ஞானாம்பிகை தம்பதியர் வசித்தனர். சுவேதநாதய்யர் இங்குள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கி.பி.203ம் ஆண்டு, கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு நாகராஜன் என பெயர் சூட்டினர். சிறு வயதிலேயே கல்வி, கேள்விகளில் புலமை பெற்றவராக திகழ்ந்த நாகராஜன், பிற்காலத்தில் பாபாஜிஎன பெயர் பெற்றார். நாகராஜனுக்கு ஏழு வயதானபோது, முருகன் கோயிலில் திருவிழா நடந்தது. விழாவுக்கு வந்த ஒருவர், அவரைக் கடத்திச் சென்று காசியில் விட்டு விட்டார். அங்கு யோக மார்க்கத்தைக் கற்ற பாபாஜி, பொதிகைமலைக்குச் சென்று அகத்தியரைத் தரிசித்தார். அவர், “பக்தனே. உனக்கு யோக மார்க்கத்தை போதிக்கும் குரு கதிர்காமத்தில் (இலங்கை) இருக்கிறார்எனச் சொல்லி அனுப்பி வைத்தார். 12 நாட்களில் கதிர்காமம் சென்ற பாபாஜிக்கு, அங்கிருந்த போகர் சித்தர் பஞ்சாங்க கிரியா முறைகளை உபதேசித்தார். அதன்பின், பாபாஜி இமயமலைக்குச் சென்றார். தற்போதும் இவர் இமயமலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பிற்காலத்தில் பாபாஜியின் சீடர் ராமைய்யா, இங்கு பாபாஜிக்கு கோயில் எழுப்பினார்.

பாபாவின் தீவிர பக்தர் ஒருவர், அவரது தரிசனம் கிடைக்க விரும்பி பலமுறை இமயமலைக்குச் சென்றார். அவருக்கு பாபா காட்சி தரவில்லை. சோர்வடைந்த பக்தர், தனக்கு குறிப்பிட்ட நாளில் காட்சி கிடைக்காவிட்டால், தான் மலையிலிருந்து குதித்து உயிரை விடப்போவதாக கூறினார். அப்போதும், பாபாவின் தரிசனம் கிடைக்காமல் போகவே, அவர் இமயமலையில் இருந்து குதித்தார். பாபா அவரது உடலை எடுத்து வரச்செய்து, மீண்டும் உயிர் கொடுத்து, தன் சீடராக ஏற்றுக் கொண்டார். இவரையும், மற்றொரு பிரதான சீடரான அன்னை என்பவரையும் இயந்திரமாகப் பிரதிஷ்டை செய்துள்ளனர். அருகிலேயே பாபாஜி மற்றும் முருகன் யந்திரங்கள் உள்ளன.

அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில், சி.மானம்பட்டி

அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில், சி.மானம்பட்டி, கடலூர் மாவட்டம்.

+91 98428 13884 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளியன்று கூட்டத்தைப் பொறுத்து நள்ளிரவு 12 மணி அல்லது மறுநாள் காலை வரையிலும் கூட நடை திறந்திருக்கும்.

மூலவர்

வெற்றிவேல் முருகன்

உற்சவர்

வெற்றிவேலர்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

சி.மானம்பட்டி

மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்குமுன் இப்பகுதியில் வசித்த ஒருவர் இறை நம்பிக்கையின்றி இருந்தார். ஒருசமயம் அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டு, பல நாட்களாக படுத்த படுக்கையாகிவிட்டார். டாக்டர் அவருக்கு சிகிச்சையளித்தும் பலன் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் டாக்டர்கள் அவரது வாழ்நாள் விரைவில் முடிந்துவிடும் எனச் சொல்லி சென்று விட்டனர். வீட்டில் அனைவரும் மிகுந்த கலக்கத்தில் இருந்தனர். அப்போது, படுக்கையில் இருந்தவர், மயில் மீது முருகன் காட்சி தருவதைப் போல உணர்ந்தார். படுக்கையில் இருந்து எழுந்தவர், உறவினர்களை அழைத்து எனக்கு பசிக்கிறது. சாப்பாடு கொடுங்கள்என்றார். அவருக்கு உணவு கொடுக்கவே, அதைச் சாப்பிட்டுவிட்டு நான் குணமாகிவிட்டேன்என்றார். உறவினர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சில நாட்களில் பக்தர், தாம் ஒளியில் கண்ட முருகனை, அதே வடிவத்தில் சிலை வடித்துக் கோயில் எழுப்பினார். இவரே இங்கு வெற்றிவேல் முருகனாக அருள்பாலிக்கிறார். திருமணத்தடை உள்ளோருக்கு இங்கு வெற்றிலை துடைப்புஎன்னும் சடங்கு நடக்கிறது. இவர்களை கொடிமரம் அருகில் அமர வைத்து, கையில் சுவாமிக்குப் பூஜித்த வெற்றிலையைக் கொடுக்கின்றனர். பின், சுவாமியின் அபிஷேக தீர்த்தத்தை வெற்றிலையில் தெளிக்கின்றனர். பக்தர்கள் அந்த வெற்றிலையால் தம் முகத்தைத் துடைத்துக்கொண்டு, முருகனைத் தரிசிக்கின்றனர். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெற்றிலை மங்கலப்பொருட்களில் ஒன்றாகும். இதனை முகத்தில் துடைப்பதால், கெட்ட சக்திகள் விலகி, நன்மை பிறக்கும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.