Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம் – 624401, திண்டுக்கல் மாவட்டம்.
****************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – இரசம்மாநகரம்

ஊர்: – நத்தம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

லிங்கம நாயக்கன் இப்பகுதியை ஆண்டு வந்த போது, அரண்மனைக்குப் பால் கொண்டு வருவபர் தினமும் பாலைக் கறந்து குறிப்பிட்ட இடத்தில் வைத்தவுடன் பால் குடம் காணாமல் போய்க் கொண்டே இருந்தது.

மன்னனுக்குத் தகவல் தெரிந்து, அந்த இடத்தைப் பார்வையிட்டான். அந்த இடத்தில் சிலை ஒன்று மண்ணில் மறைந்திருப்பது கண்டு கடப்பாறை கொண்டு தோண்ட உத்தரவிட்டான்.

தோண்டும் போது அம்மன் தோளில் கடப்பாறை பட்டுவிட்டதால் ரத்தம் பீறிட்டது. அச்சிலையை எடுத்து மஞ்சள் நீராட்டி அந்த இடத்திலேயே லிங்கம நாயக்கன் பிரதிட்டை செய்தான். ரத்தம் பீறிட்டு வெளிவந்த அம்மன் இருப்பதால் அவ்வூரின் பெயர் ரத்தம்என்றாகிக் காலப்போக்கில் நத்தம்என்று அழைக்கப்பட்டது.

மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பு.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மணப்பாறை

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மணப்பாறை, திருச்சி மாவட்டம்.
*********************************************************************************

+91 4332- 260 998, 98420- 80312 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – மணப்பாறை

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு காலத்தில், இந்தக் கோயில் இருந்த இடத்தில் மூங்கில் மரங்கள் வான் உயரம் வளர்ந்தோங்கி நின்றன. மூங்கில் காட்டின் நடுவே குறிப்பிட்ட இடத்தில் வேப்பமரங்கள் நின்றன. அங்கு வாழ்வோர், ஒருசமயம், மூங்கில் மரங்களை வெட்டினர். நடுவில் நின்ற ஒரு வேப்பமரத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படடது. அதை வேருடன் சாய்த்தனர். அதன் கீழே கல் ஒன்று புதைந்து கிடந்தது. கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது, கடப்பாறை முனை பட்டதும், கல்லுக்குள் இருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன மக்கள் அலறியடித்து ஓடி, ஊர் பெரியவர்களை அழைத்து வந்தனர். அப்போது அக் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள்வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேம்பினடியில் கிடந்த கல்லில் நீண்ட காலமாகக் குடிகொண்டு உள்ளதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி கோயில் கட்டி வணங்கினால், இந்நகரைக் காத்து அருள்பாலிப்பதாகவும் சொன்னார்.