Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா
அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்,(திருவெக்கா), காஞ்சிபுரம் -631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91-44 -37209752 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | யதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் |
தாயார் | – | கோமளவல்லி தாயார் |
தீர்த்தம் | – | பொய்கை புஷ்கரிணி |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருவெக்கா |
ஊர் | – | காஞ்சிபுரம் |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பன்னிரு ஆழ்வார்களில் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தின் அம்சமாக அவதரித்தவர் திருமழிசை ஆழ்வார். இவர் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்து வளர்த்தார். ஆனால், ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி, எடுத்து வந்து குடிக்க கொடுத்தார். இதைத்தான் ஆழ்வார் முதன் முதலாக குடித்தார். தொடர்ந்து இவர்கள் கொடுத்த பாலை குடித்து வளர்ந்த ஆழ்வார், ஒருநாள் சிறிது பாலை மீதம் வைத்து விட்டார். அந்த பாலை வேளாளர் தன் மனைவியுடன் சாப்பிட்டார். உடனே தன் முதுமை போய் இளமை வரப்பெற்றார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கனிகண்ணன் என்று பெயரிட்டனர். ஆழ்வாருடனேயே வளர்ந்து வந்த கனிகண்ணன் பிற்காலத்தில் அவரது சீடரானார். பல சமயங்களிலும் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்தார். பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்க செய்ததுடன், அவருக்கு திருமந்திர உபதேசமும் செய்தார். ஒரு முறை காஞ்சிபுரம் வந்த திருமழிசை ஆழ்வார் திருவெக்கா தலத்திற்கு வந்து, பெருமாளுக்குப் பல ஆண்டுகள் சேவை செய்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டிக்கு அவர் விருப்பப்படி இளமையை திரும்ப வரும்படி செய்தார். இவளது அழகில் மயங்கிய பல்லவ மன்னன், அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான். காலம் சென்றது. மன்னன் வயதில் முதியவனானான். ஆனால் அவளது மனைவியோ என்றும் இளமையுடன் இருந்தாள். இதனால் கவலைப்பட்ட மன்னன் தனக்கும் இளமை வேண்டும் என விரும்பினான். எனவே ஆழ்வாரின் சீடரான கனிகண்ணனிடம் தனக்கும் இளமையாகும் வரம் வேண்டும் என வேண்டினான். எல்லோருக்கும் அந்த வரம் தர முடியாது என கனிகண்ணன் கூற, கோபமடைந்த மன்னன் அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த ஆழ்வார், சீடனுடன் தானும் வெளியேற முடிவு செய்தார். இந்த பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை. எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என்று கூறினார். பெருமாளும் தன் பாம்பு படுக்கையை சுருட்டிக்கொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் தான் இந்த பெருமாளுக்கு “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
அருள்மிகு பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
அருள்மிகு பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் – 631 502, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 98423 51931 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பவளவண்ணர் |
தாயார் | – | பவழவல்லி (பிரவாளவல்லி) |
தீர்த்தம் | – | சக்கர தீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | பிரவாளவண்ணர் (திருப்பவளவண்ணம்) |
ஊர் | – | காஞ்சிபுரம் |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்ட போது, அவர்களில் யார் தனது திருவடியையும், திருமுடியையும் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என தீர்ப்பளிப்பதாகச் சொன்னார் சிவன். விஷ்ணு திருவடியைக் காணச் சென்றார். அவரால் முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மாவோ, திருமுடியைக் கண்டுவிட்டதாக பொய் சொல்லி விட்டார். இதனால் சிவசாபம் பெற்று, பூலோகத்தில் கோயிலோ, வழிபாடுகளோ இல்லாமல் ஆனார். எனவே, சிவனை மகிழ்ச்சிப்படுத்தி, சாப விமோசனம் பெற, யாகம் ஒன்றை நடத்தினார் பிரம்மன். கணவன், மனைவி இருவரும் இணைந்து நடத்தினால்தான் யாகம் பரிபூரணம் அடையும் என்பது நியதி. ஆனால், பிரம்மாவோ அவரது மனைவி சரஸ்வதிதேவியை அழைக்காமல் தனியே யாகம் செய்தார். இதனால் மனைவியின் அதிருப்தியையும் அடைந்தார். சரஸ்வதி சில அசுரர்களை அனுப்பி யாகத்தை நிறைவேறவிடாமல் செய்தாள். இதனால் கலவரமடைந்த பிரம்மா, சரஸ்வதியை சமாதானம் செய்யும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணுவும் அவ்வாறே செய்து, அசுரர்களை அழித்து, சிதறிய ரத்தத்துடன் பவள நிறமேனியனாக (சிவந்த உடலுடன்) காட்சி கொடுத்தார். இதனால் சுவாமிக்கு “பவளவண்ணர்” என்ற திருநாமம் ஏற்பட்டது. இவருக்கு “பிரவாளவண்ணர்” என்றொரு பெயரும் உண்டு. இத்தலம் வந்த ஆதிசேஷன், பவளவண்ணரின் தலைக்கு மேல் குடையாக நின்றார்.