Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல், திருச்சி மாவட்டம்.

91-431- 2230 257 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30- பகல் 1 மணி, மாலை 3- இரவு 8.30 மணி. வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும். இந்நாட்களில், காலை 6- 6.30, 8- 9, 11- 12.30, மாலை 5 – 6, இரவு 8.30-9 ஆகிய நேரங்களில் மட்டும் சுவாமி, அம்பாள் சன்னதிகள் அலங்காரத்திற்காக அடைக்கப்படும்.

மூலவர் ஜம்புகேஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வெண்நாவல்
தீர்த்தம் நவ தீர்த்தங்கள்
ஆகமம் சைவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஆனைக்காவல், திருஆனைக்கா
ஊர் திருவானைக்கா
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர்

சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் இலிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த இலிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் இலிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் நீர்தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.

நாவல் மரத்துக்கு ஜம்புஎன்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் இலிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி ஜம்புகேஸ்வரர்எனப் பெயர் பெற்றார்.

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை, பனையபுரம், திருச்சி மாவட்டம்.

+91- 431 – 246 0455 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் நித்யகல்யாணி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கொள்ளிடம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பாலத்துறை
ஊர் திருப்பாற்றுறை
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது, தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர்தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில், தான் இலிங்க வடிவில் இருப்பதாகக் கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான்.

பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி பாற்றுறை நாதர்என்றும், தலம் பாற்றுறை” (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.