Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில், தஞ்சாவூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர் | |
அம்மன் | – | அல்லியங்கோதை, சௌந்தரநாயகி | |
தல விருட்சம் | – | ஆலமரம் | |
தீர்த்தம் | – | காவிரி, குடமுருட்டி, காமதேனு தீர்த்தம், சிவதீர்த்தங்கள் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்புள்ளமங்கை | |
ஊர் | – | பசுபதிகோயில் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (பசுபதி கோயில்), தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். சப்த ஸ்தான தலங்களுள் இது 5வது தலம். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனைப் பாற்கடல் தந்த, கேட்டவரமருளும் காமதேனு பசு நாள்தோறும் சிவனைத் தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம். இதை மெய்ப்பிக்கும் வகையில் பசு ஒன்று சிவலிங்கத் திருமேனி மீது பால் சொரிந்து நிற்கும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. கோச்செங்கட்சோழன் என்ற மன்னன் முற்பிறவியில் சிலந்திப் பூச்சியாக இருந்து, சிவலிங்கத் திருமேனி மேல் வலை பின்னி சிவத்தொண்டு செய்துவந்தது. சிவலிங்கத்தின்மீது இலை தழைகளும், பறவை எச்சமிடுவதையும் தடுக்க சிலந்தி பின்னிய வலையின் நோக்கம் அறியாத யானை, பக்தி மேலீட்டால் காவிரி நீரால் அபிஷேகம் செய்யும்போது சிலந்தி வலை அறுபட்டது. இதனால் வெகுண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்ததில் யானை கலவரம் அடைந்து, துதிக்கையைத் தரையில் அடித்துப் புரண்டதில் சிலந்தியும் யானையும் சிவபதம் அடைந்தன. அச்சிலந்தி வேண்டிய வரத்தின்படி, மறுபிறப்பில் சோழநாட்டு மன்னனாகப் பிறந்தது. இவனே சங்ககால மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. இப்புராணக் கதையையும், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் என்பதை உறுதிப்படுத்தவும், கோபுர நிலைக்காலிலும், சுவர்களிலும் சிலந்தியின் வழிபாடு, யானையின் வழிபாடு போன்ற புடைப்பு சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன.
மாடக்கோயில்கள் காவிரிக்கரை கிராம மக்களை வெள்ளக்காலத்தில் பாதுகாக்கக் கட்டப்பட்டவை என அறிவியல் அடிப்படையிலும் கூறலாம்.
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
+91-94435 86453 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வசிஷ்டேஸ்வரர் | |
அம்மன் | – | உலகநாயகியம்மை | |
தல விருட்சம் | – | முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி | |
தீர்த்தம் | – | சக்கர தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தென்குடித்திட்டை, திட்டை | |
ஊர் | – | தென்குடித்திட்டை | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. “ஓம்” என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதிகாலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. இறைவன், இறைவியுடன் விரும்பிக் குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். அவற்றுள் ஒன்று சீர்காழி. மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் “ஓம்” என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் “ஹம்” என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் “ஞானமேடு” எனவும் “தென்குடி திட்டை” எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று. வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் “வசிஷ்டேஸ்வரர்” எனப் பெயர் பெற்றார். அம்பாள் “உலகநாயகியம்மை.”