Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர் மாவட்டம்.

+91- 94439 59839 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோணேஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வாழை
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்
ஆகமம் காரணாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குடவாயில்
ஊர் குடவாசல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர்

பிரம்மா, பிரளயகாலத்தில் வேதங்களை ஒரு அமுத குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. மீண்டும் உயிர்களைப் படைக்க சிவன், வேடன் வடிவில் சென்று, குடத்தின் மீது அம்பு எய்தார். அமுத குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். குடத்தின் வாய் பாகம் இத்தலத்தில் விழுந்தது. சிவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தார். காலவெள்ளத்தில் இந்த இலிங்கம் புற்றால் மூடப்பட்டது.

பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை, சத்ரு என்பவளின் சூழ்ச்சியால் அவளிடம் அடிமையாக இருந்தாள். தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து அமுதக்குடத்தை பறிக்க முயன்றான். கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு, சண்டையிட்டார். அவனை வென்று அமுதக்குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது. எனவே தனது அலகால் கீறவே, அடியில் இலிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். கருடன் தனது தாயின் நிலையைக்கூறினார். அவரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அருளினார் சிவன். அதன்பின்பு கருடனே இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார்.

அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு

அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு, சிமிழி போஸ்ட், செம்பங்குடி வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 269 235, +91- 94435 00235 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நர்த்தனபுரீஸ்வரர் (ஆடவல்லார்)
அம்மன் பாலாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சங்கு தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தலையாலங்கானம்
ஊர் திருத்தலையாலங்காடு
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர்

தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை அழிப்பதற்காக வேள்வி ஒன்றை நடத்தினார்கள். அதில் தோன்றிய யானையின் தோலை சிவன் உரித்தார்; மானைத் தன் கையில் ஏந்திக்கொண்டார்; முயலகன் என்ற அரக்கனை அழித்து அவனது முதுகின் மீது ஏறி நர்த்தனம் ஆடிய தலம் இது. கபில முனிவர் பூஜித்த தலம். சங்க காலத்தில் இத்தலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். அவனுக்கு தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.

கோயிலின் முன்பு தீர்த்தம் உள்ளது. இது மிகவும் விசேஷமானது. இதில் நீராடி இறைவனுக்குத் தீபமிட்டு உறுதியுடன் வழிபட்டால் வெண்குஷ்டநோய் நீங்கபெறும் என்பது இன்றும் மக்களின் அசையாத நம்பிக்கையாகும்.