Category Archives: ஆலயங்கள்

பேராசை நீங்க

பேராசை நீங்க

விதர்ப்ப தேசத்து ராஜா சித்ரகுப்தனுக்கு பெரும் ஆசை எழுந்தது. அவனுக்கு இல்லாத செல்வமே இல்லை. குழந்தைச் செல்வத்தைக் கூட சமீபத்தில் பெற்றெடுத்தான். செக்கச்செவேர் என இருந்த அந்தக் குழந்தையை மன்மதனுக்கு ஈடாக கூறலாம். அழகின் திலகம் அந்தக் குழந்தை. என்னதான் பொன்னும், பொருளும், நாடும், நகரங்களும் இருந்தாலும் அவனுக்கு பக்கத்து நாடான குபேரபுரி மீது ஒரு கண். அவன் அமைச்சர்களை அழைத்தான். மந்திரி பிரதானிகளே! நாம் உலக நாட்டவர்களில் ஒப்பற்றவர்கள் எனப் பெயர் பெற்றுள்ளோம். ஆனால் நம் பக்கத்து நாடான குபேரபுரியும் நம் அளவுக்கு செல்வத்தையும், சிறப்பையும் சம்பாதித்திருக்கிறார்கள். அந்த நாட்டை நம் வலிமையால் கைக்கொண்டால், நாம் மாபெரும் வல்லரசாகி விடுவோம். நம்மை அழிக்க யாராலும் இயலாது. அந்த நாட்டை கைப்பற்ற ஆலோசனை நடத்தி என்னிடம் சொல்லுங்கள், என்றான். அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் அரசனிடம், மன்னா. குபேரபுரி, விதர்ப்ப நாட்டை விட சற்று கூடுதல் படைபலம் உள்ளது. அது மட்டுமின்றி, அந்நாட்டு அரசன் செண்பகராஜன் பெரும் வீரன். வம்புக்கு போகாதவன். மிகவும் நல்லவன். அவனிடம் வம்புக்கு போனால், விதர்ப்ப நாடு அவன் கைக்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேவையற்ற விவகாரம் எதற்காக? என்றனர். சித்ரகுப்தன் கர்ஜித்தான். பயந்தாங்கொள்ளிகளே. இதெல்லாம் நான் அறியாதவனா? எளியவனை வீழ்த்துவது எளிது. வலியவனுடன் மோத வேண்டும். அவனை வெற்றி கொண்டு, செல்வத்துடன் பெரும் புகழையும் ஈட்ட வேண்டும். உங்களிடம் போய் ஆலோசனை கேட்டேனே. உடனே போருக்கு ஆயத்தம் செய்யுங்கள், என்றான். மந்திரிகள் நடுங்கி விட்டனர். போர் மூண்டது. சித்ரகுப்தனின் பேராசை பெருநஷ்டம் ஆனது. அன்று பிரதோஷ நாள். சித்ரகுப்தன் பிரதோஷ விரதத்தை தவறாமல் இருப்பவன். போர் நடந்து கொண்டிருந்த போது வந்த பிரதோஷத்தன்று, தன் விரதத்தை பாதியில் முடித்துக் கொண்டான். அதன் விளைவாக சிவநிந்தைக்கு ஆளானான். பிரதோஷ விரதத்தை கைவிட்டது, பேராசை ஆகிய காரணங்களால் போரில் தோற்றான். அவனைக் கைது செய்ய செண்பகராஜன் ஆட்களை அனுப்பினான். நாடிழந்த சித்ரகுப்தன் தன் கைக்குழந்தையான தர்மகுப்தனை மட்டும் காட்டில் போட்டுவிட்டு, ராணியுடன் இறந்து போனான். அந்தக்குழந்தை காட்டில் அழுது கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அங்கு வந்தாள் ஒரு பிராமணப் பெண்மணி. அவள் தன் கைக்குழந்தையுடன் காட்டில் பசிக்கு ஏதாவது கிடைக்குமா என தேடிக் கொண்டிருந்தாள். அவளுக்கும் ஒரு கைக்குழந்தை இருந்தது. அந்த ஆண் குழந்தைக்கு சிவநேசன் என பெயர் சூட்டியிருந்தாள். அவள் பெரும் ஏழை. காட்டில் விறகு பொறுக்கி அதன்மூலம் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாள். அவள் குழந்தையின் அழுகுரலை கேட்டு ஒரு புதரில் சென்று பார்த்தாள். அங்கே அந்த பிஞ்சுக்குழந்தை அழுதுகொண்டிருந்தது.

யாரோ குழந்தையை காட்டில் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்ட அவள், ஏற்கனவே தனக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இந்தக்குழந்தையையும் எடுத்துச் சென்றால் எப்படி வளர்ப்பது என்று யோசித்தாள். வறுமை நிலையில் இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாதே என கவலைப்பட்டாள். அப்போது வானில் அசரீரி ஒலித்தது. “பெண்ணே! கவலைப்படாதே. இந்தக்குழந்தையை நீ எடுத்துச்செல். இந்தக்குழந்தை உன் வீட்டிற்கு வருவதன் மூலம் உன் ஏழ்மை நிலை ஒழியும்எனக் கூறியது. அந்தப்பெண் பெரும் சிவபக்தை. தவறாமல் பிரதோஷ விரதம் இருப்பவள். அவள் அசரீரியின் குரலை தெய்வ வாக்காக மதித்து தர்மகுப்தனை வீட்டிற்கு எடுத்துச்சென்றாள். இரண்டு குழந்தைகளையும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்தாள். காலப்போக்கில் அவளுக்கு செல்வநிலை உயர்ந்தது. அவள் காட்டில் போய் விறகுவெட்டும் நிலைமை மாறி நாட்டிற்குள்ளேயே வேலைசெய்து பிழைக்கும் அளவிற்கு உயர்ந்தாள். இன்னும் சில நாட்களில் பொருள் மேலும் சேரவே, வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து, இருப்பதைக் கொண்டே வாழலாம் என்ற நிலைக்கு உயர்ந்தாள். தர்மகுப்தன் ஒருமுறை தான் கண்டெடுத்த பொற்குடப் புதையலையும் தன் தாயிடமே கொடுத்தான். அதன்பின் அவர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆயினர். இரண்டு குழந்தைகளையும் அந்தத் தாய் குருகுலத்தில் சேர்த்து சகல வித்தைகளையும் கற்கச் செய்தாள். காட்டில் கண்டெடுத்த தர்மகுப்தனை ஊரார் குழந்தை என ஒதுக்காமல், தன் மகன் போலவே பாதுகாத்து வளர்த்தாள். இருவரும் வாலிபராயினர். சிவநெறியில் அவர்கள் திளைத்து போயிருந்தனர். தர்மகுப்தன் ருத்திராட்சம் மற்றும் திருநீறு அணிந்து சிவன் கோயிலுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தான். ஒருமுறை கூட அவன் பிரதோஷ விரதம் இருக்கத் தவறுவதில்லை. இதன் பலனாக அவனுக்கு தெய்வபலம் உயர்ந்தது. அவனுக்கு 21 வயது ஆன சமயத்தில் அவன் தன் சகோதரனுடன் காட்டுப்பகுதிக்கு வேடிக்கை பார்ப்பதற்காக சென்றான். காட்டிற்குள் ஒரு சிவன் கோயில் இருந்தது. அங்கு சென்று வழிபட்டு விட்டு ஒருபெரிய பாறையில் ஏறி காட்டின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு தடாகத்தில் சில பெண்கள் குளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் சிவநேசனிடம், இருவரும் போய் அந்தப் பெண்களைப் பார்த்துவிட்டு வரலாம். நீயும் வா என அழைத்தான். ஆனால் சிவநேசன் அங்கு வர மறுத்துவிட்டான். பெண்கள் ஜலக்கிரீடை செய்யும்போது பிரம்மச்சாரிகளான நாம் பார்க்கக்கூடாது என்பது விதி என்று தம்பியிடம் எடுத்துக் கூறினான். ஆனால் தர்மகுப்தன் அதைக்காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவனை வீட்டிற்கு போகச்சொல்லிவிட்டு, தர்மகுப்தன் மட்டும் அந்த குளத்தின் அருகே சென்றான். அங்கு குளித்துவிட்டு கரையேறிய பெண்மணி பூலோக ஊர்வசி போல் காட்சிதந்தாள். அவள் நிச்சயமாக ஒரு ராஜகுமாரியாக இருக்க வேண்டும் என தர்மகுப்தன் கற்பனை செய்துகொண்டு தனக்கு இவள் கிட்டமாட்டாள் என எண்ணியபடியே திரும்பினான். இதை அந்த ராஜகுமாரி கவனித்து விட்டாள். அவள் கந்தர்வ ராஜன் மகள் அஸ்வரூபி. அவள் அந்த இளைஞனை அழைத்தாள். அவனுடைய அழகும், சிவப்பழம் போன்ற தோற்றமும் அவளைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. தேவகுலப் பெண்மணியான அவள், மானிடனான தர்மகுப்தனை விரும்பத் தொடங்கினாள். தன் விருப்பத்தை அவனிடமும் தெரிவித்தாள். ஏழையான என்னால் தெய்வகுலப் பெண்மணியான உன்னை எப்படி திருமணம்செய்து கொள்ள முடியும்? பணமும் குலமும் நம் திருமணத்திற்கு இடையூறாக இருக்கும். எனவே நம் ஆசையை இத்துடன் விட்டுவிடுவதே நல்லது, என்றான். ஆனால் ராஜகுமாரி அஸ்வரூபி இதை ஒப்புக் கொள்ளவில்லை. அவள் தன் தந்தையிடம் சென்று விருப்பத்தை தெரிவித்தாள். மானிடனை தெய்வப் பெண்மணிகள் திருமணம் செய்துகொள்வது என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அரசன், மகள் மீது கொண்ட பாசத்தால் சிவபெருமானிடமே நேரில் சென்று அவருடைய அனுமதியை கேட்டான். ஏற்கனவே பிரதோஷ விரதம் இருக்கும் தன் பக்தனுக்கு அருள்பாலிக்க நினைத்த சிவன், ராஜகுமாரிக்கு தர்மகுப்தனை திருமணம் செய்து வைக்கலாம் என அனுமதி அளித்தார். இறைவனே அனுமதி அளித்ததால் பெற்றோரது ஒப்புதலுடன் திருமணம் இனிதாக நிறைவேறியது. பின்பு கந்தர்வ மன்னனின் படைபலத்துடன் விதர்ப்ப நாட்டிற்கு சென்று செண்பகராஜ மன்னனுடன் போர்தொடுத்து தன் நாட்டை மட்டும் தர்மகுப்தன் பெற்றுக்கொண்டான். எந்தவித ஆசைக்கும் ஆட்படாமல், தான் மீட்ட நாட்டை நீண்டகாலம் ஆண்டான். அனைத்து கோயில்களிலும் பிரதோஷத்தை பெரும் விழா போல் கொண்டாட ஏற்பாடு செய்தான்.

  • தினமலர்

சித்திரகுப்தன் பேராசையால் போரில் தோற்றான். பிராமணப் பெண் இருப்பதை வைத்துக்கொண்டு இரு குழந்தைகளையும் வளர்த்தாள். தர்மகுப்தன் போரில் வென்றாலும் தன் நாட்டை மட்டும் பெற்றுக்கொண்டான். ஆகவே, போதுமென்ற மனமே பேராசையை ஒழிக்கும்.”

பேராசை முட்டாள்தனமானது, பேராசை கொண்டவன் அறிவு பூர்வமாகச் செயல்படவே மாட்டான், விவேகமுள்ளவன் தனக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவனாக இருப்பான். – ஓஷோ

பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை.

ஷிர்டி சாய்பாபா

பேராசை ஏழு பாவங்களில் தலையானதாம்.

போதுமென்ற மனம் பெற, கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபடப் பலன் கிட்டும்.

பட்டினத்தார்

திருவொற்றியூர்

சென்னை

நெய்யாடியப்பர் தில்லைஸ்தானம் தஞ்சாவூர்

பேச்சாற்றல் வளர

பேச்சாற்றல் வளர

பேச்சாற்றல் மனிதர்களிடம் உள்ள அற்புத சக்தி. உணர்ச்சி மற்றும் தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இறைவன் அளித்த பேச்சாற்றலைப் பலரும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். மிகச் சிலரே பயனுள்ள சொற்களை அளந்து பேசுகிறார்கள். எதைப் பேச வேண்டும். எப்படிப் பேச வேண்டும்? யாரிடம் யாருக்காகப் பேசுகிறோம்? எவ்வளவு பேச வேண்டும்? எங்கு எப்போது பேச வேண்டும்? என்பன போன்ற நெறிமுறைகளை உணர்ந்து பேசுபவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

எப்படிப் பேச வேண்டும்? என்பது குறித்து நம் பெரியோர்கள் நிறைய பேசியிருக்கிறார்கள். வாக்கை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே இனியவை கூறல், வாய்மை, புறங்கூறாமை பயனில சொல்லாமை, சொல்வன்மை என்று பல அதிகாரங்களை இயற்றியிருக்கிறார் வள்ளுவர்.

பயனற்ற சொற்களைப் பேசுவதால் நேரமும் ஆற்றலும் விணாகிறது. நம்மில் பலர் ஒன்று தற்பெருமை பேசுகிறார்கள். இல்லையெனில், மூன்றாம் நபரைப் பற்றி புறங்கூறிப் பேசுகிறார்கள். ஓயாது பேசுபவனின் மனம் சமுத்திரத்தின் மேற்பரப்பு போன்று அலைபாயும். அவனது சொற்களில் பேரிரைச்சலே எஞ்சியிருக்கும். சிறிது காலத்துக்குப் பிறகு அவன் சொற்களுக்கு அடிமையாகி விடுகிறான். அவனுக்கும் அமைதிக்கும் வெகுதூரம். எதிரில் ஆள் இல்லாத பட்சத்தில் பரபரவென்று செல்போனை உயிர்ப்பித்து வம்பு பேசத் துவங்கிவிடுவான். இப்படிப்பட்டவர்கள் கேட்டு, கவனித்து உள்வாங்கும் ஆற்றலை இழந்து விடுகிறார்கள். ஆன்மிகச் சொற்பொழிவுக்குச் சென்றாலும் அங்கே பேசப்படுவதை ஒரு 10நிமிடம்கூட இவர்களால் செவிமடுக்க முடியாது. கேட்கத் துவங்கிய 2வது நிமிடமே இவர்களின் உள்ளம் பேசுபவரை எடைபோடும். இதனால் கேட்பதும் சிந்திப்பதும் அறுபடுகிறது. ஆனால் சொற்களைக் கையாளத் தெரிந்த மனிதன் கெட்டிக்காரன். அறிவாளி. அவன் சொற்களைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறான். அவன் உள்ளம் அமைதியில் நிலைத்திருக்கும். அவனால் பிறர் சொல்வதை பொறுமையாக செவிமடுக்க முடியும்.

உண்மையே பேச வேண்டும். அதனை இதமாக எடுத்துரைக்க வேண்டும். உண்மை பேசுகிறேன் என அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதலும் தவறு. பிறரைத் துன்புறுத்தாத வாய்மையும், இனிமையும், நலனும் உடைய சொற்களைப் பேசுதல் வாக்கினால் செய்யும் தவம் என்கிறார் கிருஷ்ணர். எனது வாக்கு தேன் போன்று இருக்கட்டும் என்றொரு பிரார்த்தனை வேதத்தில் உண்டு. யாகாவாராயினும் நா காக்க என்று நாவடக்கத்தை வலியுறுத்துகிறார் வள்ளுவர். உண்மை பேசு இனிமையாகப் பேசு உண்மையாயினும் நலம் தராதவற்றைப் பேசாதே என்கிறார் மனு நீதிச் சோழன்.

ஆம் பயனுள்ள சொற்களையே இடம், பொருள், ஏவல் அறிந்து தகுந்த காலத்தில் பேச வேண்டும். ஆனால் சாப்பிடாமல் கூட இரண்டு நாள் இருந்து விடலாம். பேசாமல் எப்படி இருப்பது என்று கேட்பவர்களும் உண்டு. இவர்கள் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும். தனக்கும் பிறருக்கும் பயன்படாத கடுமையான புறங்கூறும் பொய்யான சொற்களை அறவே தவிர்க்க வேண்டும்.

நமது எண்ணம், சொல், செயல் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருப்பதற்கு ஆர்ஜபம் என்று பெயர். இதனை எவர் ஒருவர் 12 வருடங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் சொல்வதெல்லாம் சத்தியமாகும் என்கிறது சாஸ்திரம். எனவேதான் மகான்களது வாக்கு பொய்ப்பதில்லை. உள்ளத்தில் உண்மையுண்டானால் வாக்கினில் ஒளியுண்டாகும் என்றார் மகாகவி பாரதியார்.

பலருக்கு இங்கிதம் தெரிவதில்லை. என் சுபாவமே அப்படித்தான். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன். பட்டென்று பேசிவிடுவேன் என்று சொல்பவர்களைப் பார்க்கலாம். ஆனால் இவர்களிடம் வேறு எவரேனும் இங்கிதமின்றிப் பேசிவிட்டால் அதை ஏற்க முடியாமல் தவிப்பதையும் காண முடியும்.

ஆறுதல் சொல்ல வேண்டிய நேரத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி சூழலை மேலும் மோசமாக்கும் சொற்களை எந்தவித விழிப்புணர்வும் இன்றி கொட்டிவிடுவார்கள் பலர். இது தவறு. சொல்ல வேண்டியதை சுருக்கமாகச் சொல்லப் பழக வேண்டும். அனுமனை சொல்லின் செல்வர் என்கிறோம். அவர் இங்கிதம் அறிந்தவராக, சரியான நேரத்தில் சீதாவிடம் சென்று சரியான சொற்களைக் கூறித் தன்னை அறிமுகம் செய்து பேசியதையும், திரும்ப வந்து ஸ்ரீராமனிடம் செய்தி கூறிய பாங்கையும் ரசித்தால் மட்டும் போதாது. எப்படிப் பேச வேண்டும் என்பதை அனுமான் மூலம் கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

சொற்களால் வாழவைக்கவும் முடியும். சாகடிக்கவும் முடியும். நாம் பேசிய சொற்கள் நமக்கு எஜமானர்கள். “பேசாத சொற்களுக்கு நாம் எஜமானன் என்பார்கள்.” ஆயுதங்களைவிட மிக வேகமாகச் சென்று ஒருவரின் உள்ளத்தைக் குத்திக் கிழிக்க வல்லவை சொற்கள். ஆத்திரத்திலும் அவசரத்திலும் அள்ளி இறைக்கும் சொற்கள் கேட்பவரின் உயிரைக் குடிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே சொற்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல் சொற்களை ஆளும் கலையை அறிய வேண்டும். வாரம் ஒரு முறையோ அல்லது ஒரு நாளில் சில மணி நேரமோ மெளனம் பழக வேண்டும். சொற்களின் மதிப்பை அறிய வேண்டும்.

பேச்சைக் குறைப்பதே யோகத்தின் முதல் படி என்கிறார் பதஞ்சலி மகரிஷி. பேச்சைக் குறைத்தால்தான் மனதை உள்முகமாகத் திருப்ப முடியும். சொற்களை அலட்சியமாகப் பயன்படுத்தும் மனிதன் வாழ்க்கையின் இலட்சியத்தை மறந்து விடுகிறான். சுற்றியுள்ள மனிதர்களை இயற்கையை இறைவனை தன்னை உற்று நோக்கத் தவறி விடுகிறான். வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவன் பேச்சைக் குறைப்பான். கவனத்தை செயலில் காட்டுவான்.

எதிரில் உள்ளவரை பேசவிடாமல் குறுக்கிடுவது, அவரின் உடல் மொழியையும் முகாபாவத்தையும் கண்டு கொள்ளலாமல் பேசிக் கொண்டே செல்வது ஆகியன அநாகரிகத்தின் உச்சம் என்பதை அறிய வேண்டும்.

பெரியோர்கள் பிறரது குணங்களையே பேசுவர். குற்றங்களைப் பெரிதாகச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். வீண் பேச்சுகளால் நமது நேரம் மட்டுமல்ல அருகில் இருப்பவர் நேரமும் வீணாகும். குறைவாகப் பேசி நிறையக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறார் இறைவன்.

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லும் சொல் வன்மையைவிட அறமும் பொருளும் ஒருவருக்கு வேறு இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவர் எத்தனையோ மணி நேரம் பேசினாலும் கூறிவிட முடியாத விஷயத்தை வேறு ஒருவர் சில சொற்களில் கூறிவிடுவார்.

பெரியோரிடம் நன்கு கற்றறிந்து, கற்றதை உள்வாங்கி, ஆழ் மனதில் இருத்தி சிந்தித்துத் தெளிந்தவர்களின் சொற்கள் கேட்பவர் உள்ளத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் முத்து உதிர்வது போல ஓரிரு வார்த்தைகளை அவர்கள் உதிர்த்தாலும், அதனால் மிகுந்த நன்மை விளையும். எனவேதான் மகான்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் அதன் மூலம் அபரிமிதமான மன அமைதியை நம்மால் உணர முடிகிறது.

தூய்மையும் அமைதியும் நிறைந்த உள்ளத்திலிருந்து ஆற்றல் மிகுந்த சொற்கள் பிறக்கின்றன என்றார் விவேகானந்தர்.

மன அமைதியைக் குலைப்பதும் தற்காலிக இன்பம் தருவதும் பண்பற்ற, பயனற்றதுமான சொற்களைப் பேசுபவர்கள் எங்கும் எப்போதும் கிடைப்பார்கள். ஆனால் அந்த தருணத்தில் துன்பத்தைத் தருவதாக இருந்தாலும் நிலையான இன்பம் தரும் சொற்களை அன்பு கலந்த கண்டிப்புடன் சொல்பவர்கள் கிடைப்பது அரிது. ஆன்மிக வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்புபவர்கள். ஆரம்பத்தில் துன்பம் தந்தாலும் காலப்போக்கில் இன்பம் தரும் பயனுள்ள சொற்களைப் பேசுபவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் ஒரு சாரார். ஆனால், அவர்களது பேச்சு சிந்தனையைத் தூண்டுவதாக அமையுமா என்று பார்க்க வேண்டும். சிலர், சிந்தனையைத் தூண்டுமாறு பேசுவார்கள். ஆனால் சிரிக்க வைக்க மாட்டார்கள். இன்னும் சிலர், உயர்ந்த சிந்தனையை எந்தவித இறுக்கமும் இன்றி நகைச்சுவையுடன் வழங்குவார்கள். இதைப் பகுத்தறிந்து ஒவ்வொருவரும் தன்னைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னிடம் பேசுபவர் எந்த நோக்கத்துடன் பேசுகிறார் என்பதை அறிந்து அவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

இனிக்க இனிக்கப் பேசினாலும், பயனற்ற, பண்பற்ற கருத்துகளை ஏற்கக்கூடாது. கடுமையாகச் சொன்னாலும் பண்பை வளர்க்கும் பயனுள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். இத்தகைய சொற்களை உணர்வுபூர்வமாக, தங்குதடையில்லாது, மிதமான வேகத்தில் ஏற்ற இறக்கத்துடன் பேசிப்பேசி பேச்சாற்றலை வளர்த்துகொள்ளவேண்டும்.

பேச்சாற்றல் வளர, கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட நல்ல பலன் கிட்டும்.

திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) இராஜேந்திர பட்டினம் கடலூர்

வெற்றிவேல் முருகன்

சி.மானம்பட்டி

கடலூர்
பாசுபதேஸ்வரர் திருவேட்களம் (சிதம்பரம் நகர்) கடலூர்
பேசும் பெருமாள் கூழம்பந்தல் காஞ்சிபுரம்
கரிவரதராஜப்பெருமாள் ஆறகழூர் சேலம்

கண்ணனூர் மாரியம்மன்

தாரமங்கலம்

சேலம்

எழுத்தறிநாதர் இன்னம்பூர் தஞ்சாவூர்
வீரபத்திரசுவாமி தாராசுரம் தஞ்சாவூர்
சித்தநாதேஸ்வரர் திருநறையூர் தஞ்சாவூர்
சிவானந்தேஸ்வரர் திருப்பந்துறை தஞ்சாவூர்
மாசி பெரியண்ணசுவாமி ஓமாந்தூர் திருச்சி
உத்தமராயப்பெருமாள் பெரிய அய்யம்பாளையம் திருவண்ணாமலை
அபிமுக்தீஸ்வரர் மணக்கால் ஐயம்பேட்டை திருவாரூர்
மாணிக்கவாசகர் சின்னமனூர் தேனி
சப்தபுரீஸ்வரர் திருக்கோலக்கா நாகப்பட்டினம்
லெட்சுமி ஹயக்ரீவர் முத்தியால் பேட்டை புதுச்சேரி

பேச்சியம்மன்

சிம்மக்கல், மதுரை

மதுரை

அர்த்தநாரீஸ்வரர் இரிஷிவந்தியம் விழுப்புரம்
கிருபாபுரீஸ்வரர் வெண்ணெய்நல்லூர் விழுப்புரம்
அதிதீஸ்வரர் வாணியம்பாடி வேலூர்