Category Archives: பஞ்சபூதத் தலங்கள்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர், பாண்டூர் போஸ்ட் வழி – நீடூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91 4364 250 758, 250 755 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆபத்சகாயேஸ்வரர், இலிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், இரதீசுவரர் | |
அம்மன் | – | பெரியநாயகி, பிருகந்நாயகி | |
தல விருட்சம் | – | எலுமிச்சை | |
தீர்த்தம் | – | அக்னி, வருண தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருஅன்னியூர் | |
ஊர் | – | பொன்னூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் |
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான்.
தேவர்கள், அசுரனிடமிருந்து தங்களைக் காத்தருளும்படி சிவனை வேண்டச் சென்றனர். அவர் யோகத்தில் இருந்ததால், மன்மதனின் உதவியால் அவரது யோகத்தைக் கலைத்தனர். கோபம் கொண்ட சிவன், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய இரதிதேவி, சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். அவர், தகுந்த காலத்தில் மன்மதன் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்றார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணித் தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு, இங்கு இரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினார்.
இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவருக்கு “அக்னிபுரீஸ்வரர்” என்றும் பெயர் உண்டு. கார்த்திகை மாதத்தில் சுவாமியை, இரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி இருக்கிறது. இங்கு அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தெட்சிணாமூர்த்திக்கும் விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்கிறார்கள்.
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம்
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம், பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.
+91- 44 – 2752 3019, 98423 – 09534 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திரிபுராந்தகர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | திரிபுராந்தக நாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கூவரம், திருவிற்கோலம் | |
ஊர் | – | கூவம் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞான சம்பந்தர் |
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர(மூன்று) அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து, தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதிலாவது நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. இது சிவனுக்கும் பொருந்தும்.
ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ “சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன வேண்டும்” என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் (ஏர்க்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின், விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் “கூரம்” என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் “கூவம்” என்று மருவியது.