அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம்
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம், பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.
+91- 44 – 2752 3019, 98423 – 09534 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திரிபுராந்தகர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | திரிபுராந்தக நாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கூவரம், திருவிற்கோலம் | |
ஊர் | – | கூவம் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞான சம்பந்தர் |
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர(மூன்று) அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து, தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதிலாவது நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. இது சிவனுக்கும் பொருந்தும்.
ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ “சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன வேண்டும்” என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் (ஏர்க்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின், விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் “கூரம்” என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் “கூவம்” என்று மருவியது.
சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. தலைக்கு மேல் பச்சைக் கற்பூரம் மட்டும் தூவி, பாலபிஷேகம் செய்கின்றனர்.
இத்தலத்தில் சிவன் தவக்கோலத்தில் இருக்கிறாராம். எனவே, இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் குறிப்பாகத் தவளைகள் மட்டும் வாழ்வதில்லை. தவளை எழுப்பும் சத்தம் சிவ தவத்திற்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள்.
திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் சுவாமி “திரிபுராந்தகர்” என்றும், அம்பாள் “திரிபுராந்தகி அம்மன்” என்றும் பெயர் பெற்றுள்ளனர். சக்கர அச்சு முறிந்து நின்றபோது, போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன், தேரில் இருந்து இறங்கி, கையில் வில் ஏந்திய கோலத்திலேயே இங்கு நின்றார். எனவே, இங்குள்ள சிவனுக்கு “திருவிற்கோலநாதர்” என்றும், தலத்திற்கு “திருவிற்கோலம்” என்றும் பெயர் உள்ளது. சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது மட்டும் சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார். சிவனின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.
முஞ்சிகேசர், கார்கோடர் என்ற இரு முனிவர்களின் வேண்டுதலுக்கிணங்கி சிவன், திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ நடனம் ஆடி காளியின் செருக்கை அடக்கினார். இதனால் அவள் மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவளிடம் சிவன், தான் இத்தலத்தில் ரக்ஷா(காத்தல்) நடனம் ஆடப்போவதாகவும், அப்போது தன்னை தரிசித்து கோபம் அடங்கி மகிழும்படி கூறினார். அதன்படி சிவன் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடியபோது, காளி சுவாமியை தரிசித்து அமைதியடைந்தாள்.
இவள் இக்கோயிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனிச்சன்னதியில் “தர்க்க மாதா” என்ற பெயரில் அருளுகிறாள். சிவனுடன், தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
இங்குள்ளவிமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாறை குறித்து பாடியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக இருக்கின்றனர். இராஜகோபுரத்திற்கு நேரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். அம்பாள், சுவாமிக்கு வலது புறத்தில் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கிறாள். இதனை சுவாமி, அம்பாளை திருமணம் செய்த கோலம் என்கிறார்கள்.
இவளுக்கு முன்புறத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக இருக்கிறது. அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுவதாகச் சொல்கிறார்கள். சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது “அக்னி தலம்” ஆகும்.
தேவாரப்பதிகம்:
தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர்பொழில் கூக மேவினான் மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.
திருவிழா:
சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆடியில் அம்மனுக்கு 10 நாட்கள் “பூ பாவாடை” திருவிழா, சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம்.
பிரார்த்தனை:
திரிபுராந்தகரிடம் வேண்டிக்கொண்டால் ஆளுமைத் திறன் வளரும், தீய குணங்கள், ஆணவம், துன்பங்கள் நீங்கும், குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும் என்பது நம்பிக்கை. சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் “அச்சிறுத்த விநாயகராக” பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வழிகாட்டி :
திருவள்ளூரில் இருந்து (17 கி.மீ.,) பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோக்களில் கோயிலுக்கு செல்லலாம். சென்னை – பேரம்பாக்கம் பஸ்கள் கூவம் வழியாக செல்கிறது.
Leave a Reply