Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு வராஹீஸ்வரர் திருக்கோயில், தாமல்
அருள்மிகு வராஹீஸ்வரர் திருக்கோயில், தாமல், காஞ்சீபுரம்
காஞ்சியிலும், அதனைச் சுற்றி அருகாமையில் உள்ள பல சிறிய ஊர்களிலும் மிகப் புராதனமான, பல அழகான திருக்கோயில்கள் உள்ளன. இவற்றில் பல திருக்கோயில்கள் கவனிப்பாரின்றி, சிதிலமடைந்து கிடக்கின்றன.
தாமல் சிற்றூரில் அமைந்துள்ள அருள்மிகு வராஹீஸ்வரர் திருக்கோயில் மிகவும் புராதனமானது மட்டுமல்ல, மிகவும் சக்தி வாய்ந்ததும்கூட.
ஸ்ரீ வராஹீஸ்வரர் சந்நிதி மேற்கு பார்த்த சந்நிதி. மூலவர் திருஉருவில் சங்கு, சக்கரம் இருபுறமும் அமைந்துள்ளன. தை மாதம் ரத சப்தமியன்று மூன்று நாட்கள் சூரியக் கதிர்கள் மூலவர் திருமேனியில் விழுவது அதிசயமிக்க நிகழ்ச்சி ஆகும்.
அம்பாள் திருநாமம் ஸ்ரீ கௌரி அம்பிகை. அம்பிகைக்குச் சிங்கமே வாகனமாகும். ஆனால், இங்கு யானை வாகனமாக அமைந்துள்ளது. உள்புற, வெளிப்புறத் தூண்களில் (8+8) பைரவர்கள் உள்ளனர். தேய்பிறை அஷ்டமியன்று அவர்களை வழிபடுவது நம் துயரங்கள் விலகுவதற்குச் சக்திவாய்ந்த பரிகாரமாகும்.
அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர்
அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர், சுந்தரபாண்டியம், ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம்.
காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வைகுண்டமூர்த்தி |
தாயார் | – | பூரண, புஷ்கலா |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | கோட்டையூர் |
மாவட்டம் | – | விருதுநகர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சுந்தரபாண்டியத்தில் பெரியகோயில் என்றழைக்கப்படும் வைகுண்ட மூர்த்தி சுவாமி கோயிலில் தர்மசாஸ்தாவாகவும், அய்யனாராகவும் இருவேறு உருவங்களில் எழுந்தருளி அப்பகுதி மக்களை காத்து வருகிறார்.
வைகுண்டமூர்த்தி சுவாமி கோயில் கி.பி. 1620ம் ஆண்டில் தற்போதைய சுந்தரபாண்டியம் பகுதியை ஆட்சி செய்து வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. இக்கோயிலில், அந்த மன்னனின் கலை நயத்தை வெளிப்படுத்தும் அழகிய சிற்ப ஓவியங்கள் இன்னும் அவனது புகழை பறைசாற்றுகின்றன.
வைகுண்ட வாசியான இந்த வைகுண்டமூர்த்தியார் அங்குள்ள ஈரேழு தேவலோகம், சுகபோக வைகுண்டவாசம் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு, பூலோக உயிர்களை காப்பதற்காக பூலோகத்தில் வந்து ஆங்காங்கே நிலை கொண்டுள்ளார்.
இவ்வாறு நிலை கொண்டுள்ள வைகுண்டமூர்த்தி, தென்னிந்திய கிராமத் தெய்வங்களில் கிராமத்தை காக்கும் முதன்மை காவல் தெய்வமாக விளங்கும் அய்யனாராகவும், தர்மசாஸ்தாவாகவும், கேரளாவில் சபரிமலையில் ஐயப்பனாகவும் பல்வேறு பெயர்களில் பல ஊர்களில் எழுந்தருளி பக்தர்களை காத்து வருகிறார்.
வைகுண்டமூர்த்தி சுவாமி வேட்டைக்கு போகும் காட்சியுடன் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், பூரண, புஷ்கலா என்ற இரு தேவியருடன் தம்பதி சகிதமாக, அய்யனராக கோயிலுக்கு உள்ளேயும் இருவேறுபட்ட அவதாரத்தில் ஒரே கோயிலில் அருள்பாலிக்கிறார்.