Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே), ஆருர் அரநெறி

அருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே), ஆருர் அரநெறி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 -242 343, +91-94433 54302 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அசலேஸ்வரர், அரநெறியப்பர்
உற்சவர் அரநெறியப்பர்
அம்மன் வண்டார்குழலி
தல விருட்சம் பாதிரி
தீர்த்தம் சங்கு தீர்த்தம், கமலாலயம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆருர் அரநெறி
ஊர் ஆருர் அரநெறி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர்

63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள், சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார். இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், “கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே. அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே?”என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,”இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர். இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்?”என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக, “அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்றுஎனக் கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். கோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதைக் கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர். சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான். இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 242 343, +91- 94433 54302 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்
அம்மன் கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்
தல விருட்சம் பாதிரிமரம்
தீர்த்தம் கமலாலயம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவாரூர்
ஊர் திருவாரூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்?” எனக் கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க இலிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த இலிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 இலிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ இலிங்கத்துடன், மயன் செய்த இலிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ இலிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற இலிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன.