Category Archives: சிவ ஆலயங்கள்
சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி
அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சோமேஸ்வரர் | |
அம்மன் | – | சவுந்தரவல்லி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | நங்கவள்ளி | |
மாவட்டம் | – | சேலம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை” என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கிப் பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவக் கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு குளத்தில் எறிந்துவிட்டாள். அதன்பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு அருள் வந்து, தூக்கி எறியப்பட்ட அந்தக்கல் லட்சுமியின் வடிவத்தைக் கொண்டது எனக் கூறினாள். ஊர்மக்கள் அந்த கல்லைத் தேடி எடுத்து பார்த்தபோது, பாம்பு புற்றுடன் இலட்சுமிவடிவக் கல்லை கண்டனர். அதன்பிறகு கீற்று ஓலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலை விருத்தி செய்தனர். பெரிய கோயிலாக கட்டப்பட்டது. இந்த கோயில் ரெட்டியார், தேவாங்கர், வன்னியகுல சத்திரியர், நாயக்கர் சமுதாய மக்களுக்கு குலதெய்வ கோயிலாக விளங்குகிறது.
சோமநாதர் திருக்கோயில், பெருமகளூர்
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், பெருமகளூர், பேராவூரணி தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 90479 58135
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சோமநாதமுடையார் | |
அம்மன் | – | சுந்தராம்பிகை, குந்தளாம்பிகை | |
தல விருட்சம் | – | செந்தாமரைக் கொடி | |
தீர்த்தம் | – | லெட்சுமி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சதூர்வேதி மங்கலம், பெருமூள்ளுர், பேரூர் | |
ஊர் | – | பெருமகளூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் பெருமகளூர் கிராமத்தில் உள்ள பொதுக் குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது, தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழமன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித்தழுவியபோது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து, வைரம், வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பாணத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி, புத்திரகாமேஷ்டி யாகம் தொடங்கும் முன், மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி, தக்க இடத்தை தேர்ந்தெடுக்குமாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை கண்டு சொல்லுமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார்.