Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கம்பம்

அருள்மிகு கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கம்பம், தேனி மாவட்டம்.

+91-94864 69990, 93612 22888

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர்
தாயார் அலமேலுமங்கை, காசிவிசாலாட்சி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் சுரபி
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கம்பம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட சிற்றரசருக்கு, சிவனுக்கும், பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவரது கனவில் தோன்றிய பெருமாள், மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஒரு கல் கம்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அதன்படி மன்னர் சிலையை எடுத்து வந்து, இங்கு பிரதிஷ்டை செய்தார். கம்பம் அருகில் கிடைத்தவர் என்பதால் சுவாமிக்கு, “கம்பராயப் பெருமாள்என்ற திருநாமம் சூட்டினார். அந்த ஊருக்கும், “கம்பம்என்றே பெயர் வைத்தார். பின்னர் காசியிலிருந்து iலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து, இருவருக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்வித்தார். இங்குள்ள தல விருட்சம் வன்னி. இந்த மரத்தை பிரம்மாவாக கருதுகின்றனர். ஆக, மும்மூர்த்திகளையும் வணங்க ஏற்ற தலம் இது.

திருமங்கை நாட்டை ஆண்ட நீலன் என்னும் மன்னன், தினமும் 1008 பெருமாள் அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் திருடி அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார். அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள், திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, “திருமங்கையாழ்வார்என்று பெயர்பெற்றார். திருமங்கை ஆழ்வாரின் பக்தியையும், அவரது வாழ்க்கையையும் சிறப்பிக்கும் விதமாக, இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், “திருமங்கையாழ்வார் திருடிய வைபவம்நடத்துகின்றனர். அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து, காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர். அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும், இதை பட்டோலை வாசித்தல்என்பர். அதன்பின் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தருவார்.

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில், அரங்கநாதபுரம்

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில், அரங்கநாதபுரம், திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 94439 70397, 97150 37810 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருவானேஷ்வர்

தாயார்

காமாட்சி அம்மன்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

அரங்கநாதபுரம்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது. மூலவர் விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வார காலம் தங்கி தியானம் செய்துள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம்.

ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது மதிகாரனாகிய சந்திரனுக்கும், ஐந்தாம் இடம் வித்யாகாரனாகிய புதனுக்கும் உரியது. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து திகழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.