Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்.
+91-4175 252 438 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அருணாச்சலேசுவரர், அண்ணாமலையார் | |
அம்மன் | – | அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள் | |
தல விருட்சம் | – | மகிழமரம் | |
தீர்த்தம் | – | பிரம்மதீர்த்தம், சிவகங்கை | |
ஆகமம் | – | காரண, காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவண்ணாமலை | |
ஊர் | – | திருவண்ணாமலை | |
மாவட்டம் | – | திருவண்ணாமலை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர் |
பிருங்கி முனிவர் சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையைப் பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணையத் தவமிருந்தாள். அவளுக்குக் காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, உமையொருபாகனாகக் காட்சி கொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற, அவரோ “யார் எனது அடி, முடியைக் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர்” என்று தெரிவித்து விட்டார். சோதிப் பிழம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த சோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.
சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி) அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து, தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம், “நான் தங்களது முடியைக் கண்டேன்” என்றார்.
பிரம்மன் பொய் சொன்னதை அறிந்து, “உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது” என சாபமிட்டார். விஷ்ணு உண்மையைக் கூறியதால், தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார். பொய் சொன்ன தாழம்பூவை, தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள்.
அருள்மிகு வாலீஸ்வரர் கோயில், குரங்கணில்முட்டம்
அருள்மிகு வாலீஸ்வரர் கோயில், குரங்கணில்முட்டம், தூசி போஸ்ட், மாமண்டூர் வழி, திருவண்ணாமலை மாவட்டம்.
+91- 44- 2724 20158, 99432 – 95467 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்யலாம். முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.
மூலவர் | – | வாலீஸ்வரர், கொய்யாமலர்நாதர் | |
அம்மன் | – | இறையார்வளையம்மை | |
தல விருட்சம் | – | இலந்தை | |
தீர்த்தம் | – | காக்கைமடு தீர்த்தம், வாயசை தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்குரங்கணின் முட்டம் | |
ஊர் | – | குரங்கணில்முட்டம் | |
மாவட்டம் | – | திருவண்ணாமலை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே, அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியைச் சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் சிவன், “பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும்” என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம்(காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார்.
கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால், தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், “தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்” எனக் கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தான். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் “குரங்கு அணில் முட்டம்” என்றானது. கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது.