Category Archives: இதர திருக்கோயில்கள்

அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம்

அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம், ஈரோடு மாவட்டம்.

+91 4258 220 749, 98423 70761

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காடு ஹனுமந்தராய சுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாராபுரம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

ஆஞ்சநேய பக்தரான ஸ்ரீவியாஸராயர் சுவாமி 1460லிருந்து 1530ம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் நாடு முழுவதும் 732 ஆஞ்சநேயர் கோயில்களைக் கட்டினார். அதில் 89வதாகக் கட்டப்பட்டது தாராபுரம் கோயில். அந்தக் கோயில் கட்டிய இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால் சுவாமிக்கு காடு ஹனுமந்தராய சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. 1810ல், கோவை கலெக்டராக இருந்தவர் ஆங்கிலேயரான டீலன்துரை. இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது சிலர் நோய் நீங்க காடு ஹனுமந்தராய சுவாமியை வழிபடுமாறு கூறினர். கலெக்டரும் அவ்வாறே செய்ய நோய் நிவர்த்தியானது. இதற்கு நன்றிக்கடனாக கோயிலில் கர்ப்பக்கிரகத்தை பெரிதாகக் கட்டினார். கோபுரம் கட்ட முயன்ற போது, பக்தர் ஒருவரின் கனவில் சுவாமி தோன்றி, கோபுரம் தேவையில்லை என்று கூறியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மத்வாச்சாரியரின் நூல்களுக்கு விளக்கவுரை (டீகா) எழுதியவர் ஜெயதீர்த்த சுவாமிகள். இதனால் இவருக்கு டீகாசார்யா என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இவருடைய மூல பிருந்தாவனம் மைசூரு அருகிலுள்ள மல்கேடாவில் உள்ளது. இங்கிருந்து மிருத்திகை (புனிதமண்) கொண்டு வந்து, இந்தக் கோயிலிலுள்ள இலட்சுமி நரசிம்மன் சந்நிதியில் இவருக்கு பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்வ மத மடாதிபதிகளில் முக்கியமானவரான இராகவேந்திர சுவாமிகளின் மந்திராலயத்தில் இருந்து மிருத்திகை கொண்டு வரபட்டடு இராமர் சந்நிதியில் அவரது பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிருந்தாவனங்களில் அமர்ந்து வழிபடுவதன் மூலம் ஞானசக்தியும், கல்வியும் மேம்படும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம்

அருள்மிகு ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91-4633-245250, 98429 40464

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர்
தல விருட்சம் நெல்லிமரம்
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
புராணப் பெயர் கிஷ்கிந்தாபுரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கிருஷ்ணாபுரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் இராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை இராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால் வானர வீரர்கள் களைப்படைந்த போது அவர்கள் கண்ணுக்கு ஒரு விசித்திரமான குகை ஒன்று தென்பட்டது. அந்த குகைக்குள்ளேயிருந்து தண்ணீரில் நனைந்தபடி பறவைகள் வருவதை பார்த்து விட்டு அதனுள் நுழைந்து பார்த்தனர். அங்கே நீர் நிறைந்த குளங்கள், மாளிகைகள், கோபுரங்கள் இருந்ததையும், குளத்தின் அருகே சுயம்பிரபை என்ற பெண் தவத்தில் இருப்பதையும் கண்டனர்.(இந்தக் குகையையும் குளத்தையும் இப்போதும் பார்க்கலாம்) சுயம்பிரபையை கண்ட ஆஞ்சநேயர் அவளை வணங்கி, “தாங்கள் யார்? என்று கேட்கிறார்.” அதற்கு சுயம்பிரபை,”முன்னொரு காலத்தில் தேவலோகத்தை சேர்ந்த மயன் என்பவன் இந்த பகுதியில் அழகிய ஊரை அமைத்தான். ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் பெற்றான். அத்துடன் தெய்வப்பெண்ணான ஹேமையுடன் தான் அமைத்த அழகிய நகரில் வாழ்ந்து வந்தான். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த இந்திரன் மயனைக் கொன்று விட்டான். கொலைப்பாவத்தால் சிரமப்பட்ட இந்திரனைக் காக்க தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனின் ஆணைப்படி கங்கை இந்த குகைக்குள் வர அதில் குளித்து தன் பிரம்மகத்தி தோஷத்தை இந்திரன் போக்கி கொண்டான். அன்றிலிருந்து இந்த குளத்தை நான் காத்து வருகிறேன். அத்துடன் இராமதூதன் அனுமன் இப்பகுதி வரும் போது அவனிடம் ஒப்படைத்து விட்டு நீ தேவலோகம் வந்து விடலாம்என்று பிரம்மன் கூறினார். “எனவே இன்று முதல் இந்த தீர்த்தத்தை நீ பாதுகாத்து வரவேண்டும். நான் தேவலோகம் செல்கிறேன்என்றாள் சுயம்பிரபை. ஆனால் அனுமனோ, “தாயே, சீதா தேவியை இராமருடன் சேர்த்து வைக்காமல் நாங்கள் எங்கும் தங்க மாட்டோம். மேலும் இராமர் பட்டாபிஷேகம் முடிந்த பின் இங்கு வந்து தங்குகிறேன்என்று கூறி விடை பெற்றுச் சென்றார். இலங்கையில் வெற்றி கண்ட இராமர் சீதையுடன் புஷ்பவிமானத்தில் அயோத்தி திரும்புகிறார். அப்போது இத்தலத்தில் வசிக்கும் சுயம்பிரபை பற்றியும், அவள் பாதுகாத்துக்கொண்டிருக்கும் தீர்த்தத்தைப்பற்றியும் இராமரிடம் ஆஞ்சநேயர் எடுத்துக் கூறினார்.
அனுமன் கூறியதைக்கேட்ட இராமரும், “ஆஞ்சநேயா. பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அவசியம் இத்தலத்திற்கு வருவோம்என்றார். இராமர் பட்டாபிஷேகமும் சிறப்பாக நடந்தது. ஒரு சுபமுகூர்த்த நாளில் ஆஞ்சநேயரை அழைத்துக்கொண்டு கிருஷ்ணாபுரம் வந்தார் இராமர். ஆஞ்சநேயரை யந்திரங்கள் எழுதச்செய்து, தானே யாகம் வளர்த்து அனுமனைப் பிரதிஷ்டை செய்து, “நீ இங்கேயே தங்கி உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும்என்று உத்தரவிடுகிறார் இராமர்.