அருள்மிகு நரசிங்கர் – சிங்கர்குடி

“திருமலாபுரம்” எனக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் “சிங்கர்கோயில்” இன்று “சிங்கர்குடி” என விளங்குகிறது.

கடலூரிலிருந்து புதுவை செல்லும் வழியில் 13 கல் தொலைவில் உள்ள தவளக்குப்பத்தின் மேற்கே 2 கல் தொலைவில் உள்ளது.

சீற்றமே வடிவான உக்கிர நரசிங்கர், தன் பக்தனான பிரகலாதனுக்காக சிங்கர்குடிக்குத் தானே வந்தமர்ந்து காட்சி தருகிறார்.

நிமிச் சக்கரவர்த்தி யாகங்கள் பலவும் நடத்தியதால் அவனுக்கு விண்ணோர் வரமளிக்கவும் சாபமிடவும் வல்லமையைக் கொடுத்தனர். இந்திர யாகம் செய்ய நினைத்த நிமி தன் குலகுருவான வசிட்டரிடம் சென்று நடத்தித் தருமாறு வேண்டினான். அந்நாளில் முன்னமேயே வேறு இடத்தில் யாகம் செய்ய ஒப்புக்கொண்டதால், “யாரையேனும் வைத்து செய்துகொள்; வந்து ஆசி தருகிறேன்” என்றார் வசிட்டர். நிமி, கவுசிக முனிவரை வைத்து யாகத்தை முடித்துவிட்டுக் களைப்பில் அயர்ந்து உறங்கும் வேளையில் வந்தார் வசிட்டர். தன்னை வரவேற்க நிமி வராததும், தன் எதிரியான கவுசிகனை வைத்து யாகம் நடத்தியதாலும் சினமுற்ற வசிட்டர், “நிமியே! உன் உயிர் உடலற்று அருவமாக உலவுதாகுக!” என சாபமிட்டார். அதற்கு நிமியும்,”உறங்குபவனைச் சபித்தல் முனிவருக்கு அழகல்ல; என்னைப்போல் நீங்களும் ஆகுக!” என பதிலுக்குச் சபித்தான். நிமிக்குச் சாபம் நீங்க யாகம் செய்யப் பல முனிவர்கள் முன் வந்தனர். ஆயினும், நிமி, “நான் இப்படியே உலகில் உள்ள எல்லோர் விழிகளிலும் இருந்து பெருமாளைத் தரிசனம் செய்தால் போதும்” என்றான். வசிட்டர், பிரமனின் அறிவுரைப்படி சிங்கர்குடி சென்று தவமியற்றிச் சாப விமோசனம் பெற்றார்.

திருக்கோயில் மேற்கு நோக்கி உள்ளது. அரசகோபுரம் கடந்து உள்ளே நுழைந்து இடதுபுறமுள்ள அன்னை கனக துர்க்கையை வணங்கிப்பின் அழகிய சிற்பவேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபத்தை அடையலாம். இம்மண்டபத்தயடுத்து, திருமகளின் அமிசமான ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியாரைக் கண்டு வணங்கலாம். பின்னர் வெளிவந்து வலம் வரும்பொழுது கோயிலின் பின்புறம் வெள்ளிக் கிழமை மண்டபத்தைக் காணலாம். இதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பெருமாள் தன் பிராட்டியுடன் ஊஞ்சலாடுவார். நரசிங்கரின் சந்நிதிக்கு இடப்புறம் கனகவல்லித் தாயாரின் கருவறை.

 


நரசிங்கரின் கருவறைக்குள் நுழையுமுன் வசிட்ட விநாயகராம் தும்பிக்கை ஆழ்வாரை வணங்கி உட்புகல் வேண்டும்.

கொடிமரம், கருட ஆழ்வார் ஆகியோரை வணங்கிப்பின் உட்செல்ல எம்பிரானின் நெடிதுயன்ற உக்கிரப் பெருவடிவாய்ப் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம், பதாக ஹஸ்தம், குறுவாள், சூலம்(களம்), வில், கதை, கேடயம் தாங்கியுள்ளார். எஞ்சியுள்ள எட்டுக்கரங்களையும், கம்பர்:“வகிர்ப்படுத்து உரக்கும்; பற்றி வாய்களைப் பிளக்கும்; வன்தோல்
துகிற் படுத்து உரிக்கும்; செந்தீக் கண்களைச் சூலும்; சுற்றிப்
பகிர்ப் படக் குடரைக் கொய்யும்; பசை அறப் பிசையும்; பல் கால்;
உகிர்ப் புரைப் புக்கோர் தம்மை உகிர்களல் உறக்கும், ஊன்றி,”
வருணிக்கிறார்.

உக்கிர நரசிங்கரின் கீழே இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலப்புறம் நோக்கிய யோக நரசிங்கரும், பால நரசிங்கரும் உள்ளனர்.

உக்கிர நரசிங்கரை வணங்க உற்ற வினைகள் ஓடிப் போகும்.

One Response to அருள்மிகு நரசிங்கர் – சிங்கர்குடி

  1. Ramesh Ranganathan says:

    நன்றி அய்யா , நான் நேரம் கெடைக்கும் போது எல்லாம் சிங்கிரிகுடி கோவிலுக்கு செல்வேன் . கோவிலை பற்றி வேலிட்டதற்கு நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *