அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்– 609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்)
தாயார் திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)
தீர்த்தம் சந்திர புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமணிக்கூடம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,”உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்எனச் சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேயத் தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாகச் சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாகக் காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 37வது தலம். தீராத நோய்கள் எல்லாம் திருமணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் மூலஸ்தானத்தில் வரதராஜர் கிழக்கு பார்த்து, தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு சக்கரமும், முன் கைகளில் அபய, ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்றபடி இடதுகரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்க விட்ட படியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறாள். இடது புறத்தில் பூமா தேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறாள். அருகிலேயே உற்சவமூர்த்திகள் உள்ளனர். அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

இத்தல இறைவன் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கனக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை கருடாழ்வார், சந்திரன் ஆகியோர் தரிசித்துள்ளனர்.

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய எந்தை ஒண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங்கண்ட திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே.

திருமங்கையாழ்வார்

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை:

தீராத நோய்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

வழிகாட்டி:

சீர்காழியிலிருந்து(6 கி.மீ) நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் இத்தலம் செல்லலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி

தங்கும் வசதி : மயிலாடுதுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *