அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்
அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் – 609 704. நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4366 – 270 718, 91-4366 270 557, 270 374, 99426 56580 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நீலமேகப்பெருமாள் |
உற்சவர் | – | சவுரிராஜப்பெருமாள் |
தாயார் | – | கண்ணபுரநாயகி |
ஆகமம் | – | வைகானஸம் |
தீர்த்தம் | – | நித்யபுஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | கிருஷ்ணபுரம் |
ஊர் | – | திருக்கண்ணபுரம் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் எதையும் பொருட்படுத்தாமல், பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்சர மந்திரம்” கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.
இத்தலத்தில் உள்ள உற்சவர் “சவுரிராஜப் பெருமாள்” என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். “சவுரி” என்ற சொல்லுக்கு “முடி” என்றும், “அழகு” என்றும் பொருள்கள் உண்டு.
ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் சுவாமிக்கு சாத்திய மாலையை, தன் காதலிக்கு சூடிவிட்டார்.
அந்நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்தார். மன்னருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு அணிவித்தார். அதில் முடி இருந்ததைக்கண்ட மன்னர் அர்ச்சகரிடம், “மாலையில் முடி எப்படி வந்தது?” எனக் கேட்டார். அர்ச்சகர், “பெருமாளின் ஜடையில் இருந்த முடிதான் அது” என்று சொன்னார். மன்னனுக்கு சந்தேகம் வரவே,”ஆண்தெய்வத்துக்கு ஜடையா?” எனக் கேட்டார். மன்னன், தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே “சவுரிராஜப் பெருமாள்‘ என்ற பெயரும் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். கலங்கிய அர்ச்சகர், பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்ட, பெருமாள் திருமுடியுடன் காட்சி தந்தார். எனவே இவர் “சவுரிராஜப் பெருமாள்” எனப் பெயர் பெற்றார்.
கருவறைக்கு மேல் உத்பலாவதக விமானம் உள்ளது. இதில் முனிவர்கள் வணங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இந்த விமானத்தை தரிசிப்பதற்கு மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. இதற்காக விமானத்தை சுற்றிலும் மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது.
இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோத்சவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார்.
விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட இராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார். அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில், பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டித் தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை “மாப்பிள்ளை” என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர்.
முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை “முனையதரையன் பொங்கல்” என்றே சொல்கின்றனர்.
இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடித் தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.
ஒருநாள், திருக்கோயிலின் அரையர் வந்தபோது, டில்லி சுல்தானின் படைகள், இத்திருக்கோயிலின் உயர்ந்த மதில்களை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். திரும்பி, பக்கத்திலிருந்த எம்பெருமானைப் பார்த்தபோது, பகவான் வழக்கம்போல் புன்னகை மலர சேவை சாதித்துக் கொண்டிருந்தான் (தரிசனம் தருவது). “டில்லி சுல்தானின் இந்த அட்டூழியத்தை, சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாயே” என்று சொல்லி, கையிலிருந்த தாளத்தை எம்பெருமானை நோக்கி வீசியெறிந்தார். அது பகவானின் புருவத்தில் பட்டு ரத்தமும் கொட்டியது. உடனே அந்த ரத்தத்தைத் துடைத்து, இறைவனிடம் கதறியழுது, தன்னை மன்னித்துவிடும்படி வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு பலனும் உடனே கிடைத்தது. மறுநாள், டில்லி தளபதி, தனது அடுத்த இலக்காக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலைப் படையெடுத்து அழிப்பதற்காகத் தனது வீரர்களை மதுரையம்மதிக்குச் செல்லும்படி ஆணையிட்டார். அதனால் திருக்கண்ணபுரம் திருக்கோயில் அடியோடு நாசமாவதிலிருந்து மயிரிழையில் தப்பியது.
அன்றிரவு வீடு திரும்பிய திருக்கோயிலின் அரையர், இவ்விதம் தனது பக்திக்குரிய எம்பெருமானின் மீது தாளத்தை வீசி அவனுக்கு அபசாரம் செய்துவிட்டோமே என அன்றிரவு முழுவதும் புலம்பித் தவித்தார். நள்ளிரவில் மிகக் கடுமையான காய்ச்சலும் அவரைத் தொற்றிக்கொண்டது. “என் ஐயனை இவ்விதம் அடித்துவிட்டேனே” என்று இரவு முழுவதும் கண்ணீர் சிந்திப் புலம்பிக்கொண்டே இருந்த அரையர், மறுநாள் காலை சூரிய உதயத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார். அரையர் தாளத்தை வீசியதால் சௌரிராஜப் பெருமானின் திருமுகத்தில் ஏற்பட்ட வடுவை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
“ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.
திருக்கண்ணபுரமே வைகுந்தமாகவும், அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானே வைகுந்தம் அளிப்பவனாகவும் இருப்பதால், இந்தத் திருக்கோயிலில் மட்டும் வைகுந்தவாசல் என்று தனியாகக் கிடையாது என்பது மகரிஷிகளின் வாக்கு. ஆதலால்தான், வைணவ மகாபுருஷரான நம்மாழ்வாரும், இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை, “வைகுந்தம் கொடுக்கும் பிரான்” என்று போற்றியிருக்கிறார்.
மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.
இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது. உற்சவப் பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜப் பெருமாள் என்று பெயர். சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.
நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார். கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.
கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்னும் திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்ற ஐந்து தலங்களும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடங்கள்.
திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை(பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம்.
108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு – திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு –திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.
இங்குள்ள தீர்த்தத்தில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜை செய்கிறார்கள். ஒருசமயம் தேவேந்திரனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. ததிசி என்ற மகரிஷியின் மரணத்திற்கு தேவேந்திரன் காரணமானதால் அவனுக்கு அந்த தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்கிக்கொள்வதற்காக திருக்கண்ணபுரம் நித்ய புஷ்கரணியில் நீராடி, அஸ்வமேத யாகம் செய்தான். அப்போது இந்திரன் நவக்கிரகப் பிரதிஷ்டை செய்து, சூரியனையும் வழிபட்டதாக பத்மபுராணம் கூறியுள்ளது.
இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட நவக்கிரகங்களைத்தான் இன்றும் நாம் இத்திருத்தலத்தில் தரிசிக்கிறோம். மேலும் இந்த நவக்கிரகங்களின் மீது எம்பெருமானின் கடாட்சம் (திருக்கண் பார்வை) படுகிறது. நவக்கிரக தோஷங்களைப் போக்குவதில் திருக்கண்ணபுரமும் சக்திவாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது. இந்த நவக்கிரகங்களைச் சுற்றிலும் 12 ராசிகளின் சின்னங்களும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. ஸ்ரீமந் நாராயணன் அனைத்துச் சக்திகளையும் தன் குடவயிற்றில் கொண்டிருப்பதால் நவக்கிரகங்கள் போன்ற இதர தேவதாசக்திகளை வைணவத் திருக்கோயில்களில் பிரதிஷ்டை செய்வதில்லை. பகவானைத் தரிசிக்கும்போது அனைத்து தேவதா சக்திகளையும் நாம் தரிசித்து வணங்கிவிடுகிறோம். இதே காரணத்தினால்தான் வைணவத் திருக்கோயில்களில் கற்பூர ஆரத்தி எடுத்தவுடன் பக்தர்கள் அதைக் கைகளினால் ஒற்றிக்கொள்வதில்லை. பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணனின் சந்நிதியில் அவனைத் தவிர, அவனைவிட பல படிகள் குறைந்தவரான அக்னியை வணங்கக்கூடாது என்ற தாத்பரியம்தான் காரணமாகும். ஆனால் திருக்கண்ணபுரம் திருத்தலத்தில் மட்டும் ராஜகோபுரம் நுழைவாயிலில் இடதுபுறச் சுவரில் பெருமாள் சந்நிதியை நோக்கி ஒரே வட்டத்தில் நவக்கிரகங்களும், ராசி மண்டலத்துடன் அதன் நடுவில் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற அமைப்பு வேறெந்த திருக்கோயிலிலும் காண்பதரிது.
கண்ணபுரத்து அமுதன், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீபத்மினி, ஸ்ரீஆண்டாள் ஆகிய நான்கு தேவிகளுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகின்றான்.
பாடியவர்கள்:
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.
இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.
–நம்மாழ்வார்
திருவிழா:
வைகாசியில் 15 நாள், மாசியில் 15 நாள் பிரம்மோத்சவம்.
பிரார்த்தனை
சுவாமியிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து(நியாயமான) கோரிக்கைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்குத் திருமஞ்சனம் செய்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
இருப்பிடம்:
மயிலாடுதுறையில் இருந்து (30 கி.மீ.,) சன்னாநல்லூர் வழியே திருப்புகலூர் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். நன்னிலம் – நாகப்பட்டினம் செல்லும் பஸ்களும் திருப்புகலூர் வழியாக செல்கிறது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : நன்னிலம்
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
தங்கும் வசதி : மயிலாடுதுறை
Leave a Reply