அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்
அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்– 676 301, மலப்புரம் மாவட்டம், கேரளா மாநிலம்.
+91- 494 – 260 2157 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாவாய் முகுந்தன் (நாராயணன்) |
தாயார் | – | மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி) |
தீர்த்தம் | – | கமல தடாகம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருநாவாய் |
மாவட்டம் | – | மலப்புரம் |
மாநிலம் | – | கேரளா |
முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர். இதில் ஒருமுறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையைக் கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் இலட்சுமி தேவியை அழைத்து, “இனிமேல் பூப்பறிக்க வேண்டாம். கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு” என்று கூறினார். இலட்சுமியும் அதன்படி செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப்பறித்து, பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், இலட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் இலட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
ஒரு முறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் “நவயோகிகள் தலம்” என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் “நாவாய் தலம்” ஆனது. இதை தற்போது “திருநாவாய்” என அழைக்கிறார்கள்.
இத்தலப்பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் வேத விமானம் எனப்படுகிறது. இவரை இலட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள் தரிசனம் செய்துள்ளனர்.
கோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி தலம் என அழைக்கிறார்கள். மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தினால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன.
பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும், திருநறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார்.
பாடியவர்கள்:
நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரர் மங்களாசாஸனம்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே.
–நம்மாழ்வார்
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, திருவோணம்
பிரார்த்தனை
காசியில் நடப்பதை போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்
இருப்பிடம் :
பாலக்காட்டிலிருந்து (100 கி.மீ) பட்டாம்பி சென்று அங்கிருந்து குட்டிபுரம் என்ற ஊரில் இறங்கி ஆட்டோவில் திருநாவாய் செல்லலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : குட்டிபுரம்,பாலக்காடு,நிலம்பூர்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோழிக்கோடு
தங்கும் வசதி :
பாலக்காடு மற்றும் கோழிகோடு ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டலில் தங்கிக் கொண்டு கோயிலுக்குச் சென்று வரலாம்.
Leave a Reply