அருள்மிகு இராமர் பாதம், இராமேசுவரம்
அருள்மிகு இராமர் பாதம், இராமேசுவரம், இராமநாதபுரம் மாவட்டம்.
+91-4573-221223; 91-4573-221255 (மாற்றங்களுக்குட்பட்டவை)
ராமருக்கே தோஷம் நீக்கிய தலம்
ஸ்ரீராம தீர்த்தம், ராமேஸ்வரம் திருத்தலத்தில், ராமநாதர் கோயிலுக்கு வெளியே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ராமபிரான், நாகர் சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்கிறார்கள். ராவணனிடமிருந்து சீதையை மீட்பதற்கு வழி கிடைக்க, திருப்புல்லாணிக்கு அருகிலிருக்கும் கடலில் நவபாஷாணக் கல்லில் நவகிரகங்கள் நிறுவி வழிபட்டார் ராமர். அத்துடன் திருப்புல்லாணி தலத்தில் தர்ப்பையில் அமர்ந்து கடலரசனிடம், இலங்கைக்குச் செல்லப் பாலம் அமைக்க வழி கேட்டார். பிறகு, இலங்கைக்கு அனுமன் மற்றும் வானரப் படைகள் உதவியுடன் பாலம் அமைத்துச் சென்று இராவணனோடு போரிட்டு சீதையை மீட்டார். இராவணனைக் கொன்ற தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரை (அக்னி தீர்த்தம்) அருகில் சிவலிங்கம் நிறுவி பூஜித்து, தோஷ நிவர்த்தி பெற்றார். இராமர் நிறுவிய இலிங்கம்தான் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இராமேஸ்வரம் இராமநாதர்.
இராமேஸ்வரம் கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. கோயிலுக்கு வெளியே சிறிது தூரத்தில் இராம தீர்த்தம், இலட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம் என்று உள்ளன. சில தீர்த்தங்கள் காலமாறுதலால்
மறைந்துவிட்டன. தற்பொழுது இராமேஸ்வரம் கோயிலிலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில் ராமர் ஏற்படுத்திய தீர்த்தக்குளம் உள்ளது. இராமபிரான், சிவலிங்கம் நிறுவி வழிபட்டபின் இராமரை, ஒரு முனிவர் சந்தித்தார். அவர், “ராமா, உன் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் நாக தோஷங்கள் உள்ளன. நீ கடல் தீர்த்தத்திலிருந்து சற்று தூரத்தில், மேற்குப் பகுதியில், வில்வமரக் காடுகள் உள்ள பகுதியில் ஒரு குளம் அமைத்து, அங்குள்ள வில்வ மரத்தடியில் நாகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷ பாதிப்புகள் நீங்கும்“ என்று ஆலோசனை சொன்னார்.
இராமரும் முனிவர் சொன்னதுபோல் சீதா தேவியுடன் செய்து வழிபட்டு, தோஷங்கள் நீங்கப் பெற்றார். அதற்குப்பின்தான் இராமர் அயோத்தி சென்றதாக ஐதீகம்.
இராம பிரான் அங்கு வந்ததன் அடையாளமாக குளத்திற்கு அருகில் இராமர் பாதம் உள்ளது. இராமர் பெரிய திருவுருவில் காட்சி தருகிறார். வலதுபுறம் சீதாபிராட்டியும், இராமரின் இடதுபுறம் இலட்சுமணனும் அருகில் ஆஞ்சநேயரும் உள்ளனர். பெரும்பாலும் மூலஸ்தானம் மூடப்பட்டே இருக்கிறது. ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் திறந்திருக்குமாம். இராமர் சந்நதிக்கு எதிரில் கருடாழ்வார் நின்ற நிலையில் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார்.
தோஷ நிவர்த்திக்காக வருபவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் கோயில் அர்ச்சகர் தகுந்த ஏற்பாடுகளும் அதற்குரிய சிறப்புப் பூஜைகளும் செய்து தருவாராம். இராமபிரான், இங்கு நாகர் சிலை பிரதிஷ்டை செய்து தோஷம் நீங்கிய பிறகுதான் சீதாதேவி தாயானதாகச் சொல்லப்படுகிறது.
Leave a Reply