அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆலத்தியூர், மலப்புறம்
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆலத்தியூர்– 676 102. மலப்புறம். கேரளா.
காலை 5 மணி முதல் 10மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ராமர், ஆஞ்சநேயர் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | ஆலத்தியூர் |
மாவட்டம் | – | மலப்புரம் |
மாநிலம் | – | கேரளா |
கேரளமாநிம் ஆலத்தியூரில் அமைந்துள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். கோயிலின் கருவறையில் இராமபிரான் சீதையில்லாமல் தனியாக, தோற்றத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கிறார்.
இராமன், சீதையைத் தேடிப்போகும் உத்தம பக்தனான அனுமனுக்கு சீதையின் அடையாளங்களை சொல்லிக்கொடுக்கும்போது, அதைக் கேட்கும் தோற்றத்தில் தான் அனுமன் உள்ளார்.
கருவறையின் பக்கத்தில் அமைந்துள்ள கோயிலில் அனுமான் வீற்றிருக்கிறார். இராமபிரான் சொல்லும் ரகசியத்தை தலை சாய்த்து கேட்கும் ஆஞ்சநேயருக்கு முப்பத்தி முக்கோடி தேவர்களும் தங்களது சக்தியைக் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சீதையை கண்டுபிடித்துவர இராமர், அனுமனிடம் சீதையைப்பற்றி கடந்த கால இரகசியம் சொல்லும் போது, அதைக்கேட்காமல் இருப்பதற்காக தம்பி இலட்சுமணன் சிறிது தூரம் மாறி நிற்பான். அந்த இடத்தில் இலட்சுமணனுக்கு ஒரு கோயில் இருக்கிறது.
இராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அனுமன் தன்னலமில்லாத வீரனாக, இராம பக்தனாக திகழ்ந்தார். சீதாப்பிராட்டியை மீட்டு வருவதற்காக அவர் இராமரிடம் எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்கவில்லை.
இராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தார். தெய்வீககுணங்கள் அனைத்தும் அவரிடம் நிறைந்து இருந்தன. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர். இவரது பலத்தைப்பற்றி இவருக்கே தெரியாது.
அனுமான் தனது பலத்தைப்பற்றியோ, இராமருக்காக தான் செய்யும் தொண்டைப்பற்றியோ யாரிடமும் பெருமை பேசியது கிடையாது. நான் இராமபிரானின் சாதாரண தொண்டன் தான் என்று பணிவாகவே எப்போதும் கூறுவார். இராமருக்காக சேவை செய்யும் போது மரணமடைய நேரிட்டாலும் அதற்காகப் பெருமைப்படுவேன் என்று அடிக்கடி கூறுவார்.
இராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனும் அவனது இராச்சியம் திரும்ப கிடைத்தது. அங்கதன் இராஜகுமாரனாக முடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால் மிகப்பெரிய சாதனைகளை செய்த அனுமானோ ராமரிடம் எதுவுமே கேட்க வில்லை. சீதை தொடுத்த முத்துமாலையை கூட அனுமான் பரிசாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையெல்லாம் பார்த்த ராமர்,”நீ எனக்கு செய்த உதவிக்கான நன்றிக்கடனை நான் எப்படி திரும்பச்செலுத்துவேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே எல்லோரும் உன்னையும் வணங்குவர். எங்கொல்லாம் எனது கோயில் இருக்கிறதோ, அந்தக்கோயிலில் எல்லாம் முதலில் உனது சிலை வைக்கப்படும். முதலில் உன்னை வணங்கிய பின்னரே என்னை மக்கள் வணங்கட்டும்” என்று அருளாசி செய்தார்.
இதையெல்லாம் கேட்ட அனுமான் மிகுந்த பணிவுடன், என் தலைவனே,”எனது பெயரை யார் உச்சரித்தாலும், எனக்கென யாராவது கோயில் கட்டி என்னை வழிபட்டாலும் அவர்களுக்கும் தங்களே அருள் புரிய வேண்டும்.” இதுவே நான் உங்களிடம் கேட்கும் வரமாகும் என்கிறார்.
இராமரும் அப்படியே ஆகட்டும் என்கிறார். அனுமனும், இதனாலேயே “ராமா” என்று யார் சொன்னாலும் , ஸ்ரீ ராமஜெயம் எழுதினாலும் ஓடி அருள்பாலிக்கிறார். இறைவனிடம் பக்தி மட்டுமே செலுத்தி பிரதிபலனை எதிர்பாராமல் இருந்தவர் அனுமன். இப்படிப்பட்ட அனுமனைப்பற்றி தெரிந்து கொண்டு, அவரை வழிபாடு செய்வது சிறப்பு.
இராமனின் வலதுகையாகத் திகழ்ந்தவர்அனுமான். இவர் அமாவாசை தினத்தில் அவதரித்தார். எனவே இவரை ஆடி அமாவாசை தினத்தில் வழிபட்டால் பல மடங்கு புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
அனுமானை, சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. இவர் வாயுபகவானுக்கும், ஆஞ்சனாதேவிக்கும் பிறந்தவர். இவருக்கு பவனசுதன், பவனகுமார், மகாவீரர், மருத்சுதன், ஆஞ்சநேயன், பஜ்ரங்கபலி என்ற பெயர்களும் உண்டு
விநாயகர், அய்யப்பன், துர்காபகவதி, விஷ்ணு, பத்ரகாளி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
சீதையைத்தேடி கடல் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவு படுத்தும் வகையில், கல்லில் கட்டிய திடல் ஒன்று இங்குள்ளது.
திருவிழா:
ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்திலும், பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்திலும், ஆடி அமாவாசையிலும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை
இத்தலத்திற்கு வரும் பக்தர்கள், இங்குள்ள கல்லில் கட்டிய திடலை தாண்டினால் அவர்களது ஆரோக்கியம் பாதுகாத்து ஆயுள் பெருகும் என்பதும்,
குழந்தைகள் இரவில் தூங்கும் முன் இவரை நினைத்து வேண்டிக் கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது என்பதும் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சீதையைத் தேடி புறப்பட்ட அனுமன் சாப்பிடுவதற்காக ராமர், அவல் கொடுத்து அனுப்பினார். இதன் நினைவாகத்தான் இன்றும் இத்தலத்தில் அனுமனுக்கு அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இப்படி அவல் நைவேத்தியம் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுவதாகப் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள் .
வழிகாட்டி :
கேரளா, மலப்புறம் மாவட்டத்தில் திரூர் தாலுக்காவில் ஆலத்தியூர் என்ற ஊரில் இந்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள புகைவண்டி நிலையம் :
சொர்ணூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
கோழிக்கோடு
தங்கும் வசதி :
மலப்புறம், திரூர் பகுதிகளில் தங்கும் விடுதிகளில் தங்கி ஆலத்தியூர் செல்லலாம்.
Leave a Reply