அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர்

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர்-614 202, தஞ்சாவூர் மாவட்டம்
*************************************************************************************************

+91 93448 14071(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – மணலூர்

மாவட்டம்: – தஞ்சாவூர்

மாநிலம்: – தமிழ்நாடு

காவிரி, கொள்ளிடம் நதிகள் ஓடும் மணலூரில், மழைக்காலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். மழையால் மக்களுக்கு தொல்லை உண்டாகக்கூடாது என்றெண்ணிய இப்பகுதியை ஆண்ட சிற்றரசர், மழை தரும் கடவுளான மாரியம்மனை வேண்டினார். உடன் மழை நின்று வெள்ளம் வடிந்தது. இதனால், மகிழ்ந்த சிற்றரசர் இங்கு மாரியம்மனுக்கு கோயில் எழுப்பினார். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல்கள் அதிகம் இருந்ததால் இவ்வூர் மணலூர்எனப்பட்டது.

வயலில் கிடைத்த அம்பிகை:

இவ்வூருக்கு அருகிலுள்ள நல்லூரில் விவசாயி ஒருவர், வயலில் உழுது கொண்டிருந்தார். அப்போது, ஏர்க்கலப்பையில் ஓரிடத்தில் குத்திக்கொண்டது. விவசாயி முயற்சித்தும் அதை எடுக்க முடியவில்லை. பின், அருகிலிருந்தவர்களை அழைத்து தோண்டிப்பார்த்தார். அங்கு, ஒரு அம்பிகையின் சிலை இருந்தது. இதை அறிந்த இப்பகுதி சிற்றரசர், அங்கு வந்தார். அவர சிலையை எங்கு பிரதிஷ்டை செய்வதெனத் தெரியாமல் நின்றபோது, “நான் மணலூரில் குடி கொண்டவள். என்னை அங்கே பிரதிட்டை செய்யுங்கள்என்று ஒரு அசரீரி ஒலித்தது. உடன் சிற்றரசன் அச்சிலையை ஒரு துணியில் சுற்றி, பணியாளர் ஒருவரிடம் மணலூருக்குக் கொடுத்து அனுப்பினான். பணியாளரும் இங்கு வந்து ஊர் மக்களிடம் சிலையைக் கொடுத்துச் சென்றார். இப்போது, அம்மக்களுக்கு சிலையை எங்கு வைப்பதென குழப்பம் வந்து விட்டது. எனவே, சிலையைத் துணியில் இருந்து பிரிக்காமல், அப்படியே வைத்து விட்டனர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிறுமி ஒருத்தி, “என்னை தெரியவில்லையா உங்களுக்கு?” என்று கேட்டு விட்டு மாரியம்மன் கோயிலுக்குள் சென்றுவிட்டாள். பக்தர் கனவில் வந்தது மாரியம்மன் என்றெண்ணிய மக்கள், சிலையைச் சுற்றியிருந்த துணியைப் பிரித்தனர். அதிலிருந்த அம்பிகை உடல் முழுதும் அம்மை போட்டது போல, முத்துக்களுடன் இருந்தாள். பின், மக்கள் அவளை இங்கேயே பிரதிட்டை செய்தனர். இவளுக்கு முத்து மாரியம்மன்என்ற பெயர் ஏற்பட்டது.

கோயிலுக்கு வெளியே கோபுரம் அருகில் தனிச்சன்னதியில் சீதேவி, பூதேவியுடன் மகாவிட்டுணு, சக்தி விநாயகர் சன்னதிகள் உள்ளன.

மாரியம்மன் அக்னி கிரீடம் அணிந்து, எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தியபடி காட்சி தருகிறாள். அம்பாள் சன்னதி முகப்பில் பச்சைக்காளி, பவளக்காளி துவாரபாலகியராக உள்ளனர்.

அம்மை தீர வழிபாடு:

வழக்கமாக அம்மை ஏற்பட்டவர்கள், தங்களது வீட்டிலேயே இருந்து, சூரிய ஒளியில் சூடாக்கிய வெந்நீரில் நீராடுவது வழக்கம். ஆனால், இப்பகுதியில் யாருக்கேனும் அம்மை நோய் ஏற்பட்டால், கோயிலில் வந்து தங்கி விடுகின்றனர். கோயில் வளாகத்திலேயே சூரிய ஒளியில் நீர் வைத்து நீராடுகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், அம்பிகையின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால், விரைவில் நோய் குணமாகுமென பக்தர்கள் நம்புகின்றனர். அம்மை நோய் கண்டவர்கள் ஊருக்குள் அரிசியை தானமாகப் பெற்று வந்து கூழ் காய்ச்சி ஊற்றும் சடங்கையும் செய்கிறார்கள். இந்த அரிசியை கோயில் வளாகத்திலுள்ள பேச்சியம்மன் சன்னதிக்குள் வைத்து பூசித்து, அதன்பின்பே கூழ் காய்ச்சுகின்றனர்.

திருவிழா விசேஷம்:

சிவராத்திரி விழா முடிந்த மறுநாள் இக்கோயிலின் உற்சவ அம்பிகை கோயிலில் இருந்து புறப்பாடாவாள். புன்னைநல்லூர், கும்பகோணம் என சுற்றியுள்ள பல ஊர்களுக்கும் சென்றுவிட்டு, 42 நாள் கழித்து இவள் கோயிலுக்குத் திரும்புவாள். சித்திரை மாத முதல் திங்களன்று காப்பு கட்டி விழா துவங்கும். அடுத்த திங்களன்று அம்பிகை தேரில் புறப்பாடாவாள். இவ்விழாவின் போது ஒரு ஆட்டை, கோயில் முகப்பில் தொங்கவிட்டு செடில் சுற்றுதல்என்றும் வைபவமும் நடக்கும்.

ஆவணி மழைக்காலமாகும். இம்மாதத்தில் விவசாய நிலங்களில் பூச்சி, பாம்புகளின் தொந்தரவு இருக்கும். இதனால், விவசாய வேலை செய்யும் கணவன்களுக்கு ஆபத்து நேரக்கூடாது என்பதற்காக, பெண்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருப்பர்.

ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பிகைக்கு விசேஷ பூசை நடக்கும். அன்று புறப்பாடும் உண்டு.

குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் அந்த பாக்கியம் கிடைக்கவும், கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆகவும் மாரியம்மனை வணங்கி, துவாரபாலகியர்களுக்கு வளையல் கட்டி வழிபடுகின்றனர்.

அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்பிகையை வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இந்த விழாவின்போது பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *