அருள்மிகு கனகதுர்கா திருக்கோயில், கனகபுரி
அருள்மிகு கனகதுர்கா திருக்கோயில் கனகபுரி – 520 001. விஜயவாடா மாவட்டம். ஆந்திரா மாநிலம்
*****************************************************************************************************
+91 866 2423600 2425 744 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – பெஜ்ஜவாடா, பிஜபுரி
ஊர்: – கனகபுரி, இந்திரகிலபர்வதம்
மாநிலம்: – ஆந்திரா
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு வருகை தந்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிட்டை செய்திருப்பது சிறப்பு. இங்குள்ள இறைவனின் பெயர் மல்லேசுவரர்.
கீலா என்ற அசுரன் துர்க்கையின் அருள் வேண்டித் தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த துர்க்கை காட்சி கொடுத்து, வேண்டும் வரம் கேள் என்றாள். அன்னையே! நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும், என வரம் கேட்டான். கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்க்கை, மகனே! நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில், அரக்கர்களை அழித்த பின் நான் உன் இதயத்தில் இருப்பேன், என வரமளித்தாள்.துர்க்கையின் ஆணைப்படி, கீலா மலையாக மாறினான். அன்னை துர்கா, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தபின், கீலா மலைமீது அஷ்டகரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி என்ற திருநாமத்துடன் வாசம் செய்தாள். இந்த மலை மீது கோடான கோடி சூரியன்கள் பிரகாசிப்பதைப் போன்று, அன்னை துர்கா பொன்னாக ஜொலித்தாள். தங்க மழையும் பொழியச்செய்து அத்தலத்தைச் செழிப்பாக்கினாள். அன்று முதல் கனக துர்கா என்ற பெயரில் தேவர்கள் அவளைப் பூசித்து வந்தனர். இத்தலத்தின் புனிதத்தை அதிகரிக்க அசுவமேத யாகம் நடத்தப்பட்டது. பிரம்மா இத்தலத்தில், சிவலிங்கம் பிரதிட்டை செய்தார். அருச்சுனன் இத்தலத்தில் தவம் செய்து, சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
அசுரர்களின் கொடுமை தாங்கமுடியாத நிலையில் இந்திரகில என்ற முனிவர் ஆதிபராசக்தியை வேண்டி தவமிருந்தார். பராசக்தி அவர்முன்பு தோன்றி வேண்டும் வரத்தைக் கேட்டாள். முனிவர் அன்னையைப் பணிந்து தனது தலையிலேயே அமர்ந்து அந்தப்பகுதியையும் மக்களையும் காக்கவேண்டும் என வேண்டினார். அதன்படியே முனிவரின் தலையில் அமர்ந்து உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறாள் கனகதுர்க்கேசுவரி.
கந்தபுராணத்தில், இந்திரகில முனிவர் பார்வதியே தனக்கு மகளாகப்பிறக்க வேண்டும் எனத் தவமிருந்தார். பார்வதியும் அவர் முன்பு தோன்றி இந்திரகிலரை ஒரு குன்றாக மாறினால்தான் மகளாகப் பிறப்பேன் என நிபந்தனை விதித்தாள். முனிவரும் குன்றாக மாறி நின்றார். ஆதிபராசக்தி அந்த குன்றில் வந்து கொலுவிருந்தாள், என கூறப்பட்டுள்ளது.
தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள். அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது திருமால் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே விஜயவாடா ஆகும். இங்கே கனகதுர்க்காதேவி மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளிக்கிறாள்.
விஜயவாடா ஒரு காலத்தில் மலைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. இவை கிருஷ்ணா நதியின் போக்கை தடுத்துக்கொண்டிருந்தன. மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். கண்ட கண்ட இடங்களில் வெள்ளம் புகுந்தது. அவர்கள் இத்தல துர்க்கையிடமும், சிவனிடமும் முறையிட்டனர். இறைவன் அந்த மலையைக் குடைந்து நதிக்கு வழிவிட்டதால் இந்த பகுதி பெஜ்ஜவாடா என அழைக்கப்பட்டது.பெஜ்ஜம் என்ற தெலுங்கு வார்த்தையின் பொருள் குகை. பின்பு விஜயவாடா என திரிந்து விட்டது. இந்த நதிக்கரையில் மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள் வளர்ந்ததால் பிஜபுரி என்றும் அழைக்கப்பட்டது.
இந்த கோயிலை பத்தாம் நூற்றாண்டில் திரிபுவன மன்னன் என்ற சாளுக்கிய மன்னன் கட்டினான். புராணங்களில் தர்மர் இந்த கோயிலை கட்டியதாக கூறப்பட்டுள்ளது.
அகத்திய முனிவர் இங்கு சிவலிங்கத்தை மல்லேசுவரர் என்ற பெயரில் பிரதிட்டை செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. இந்த கோயிலில் மூலவர்கள் ஆலயத்தின் உள்ளும் உற்சவமூர்த்திகள் கண்ணாடி மாளிகையிலும் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரார்த்தனைகளாக இத்தலத்தில் லட்சார்ச்சனை, பல்லக்கி சேவா, சாந்தி கல்யாணம் மற்றும் சண்டிஹோமம் ஆகியவற்றை தினசரி கட்டணம் செலுத்தி நடத்திக் கொள்ளலாம்.
கிருஷ்ணா நதிக்கரையில் மலை மீது உள்ள கனக துர்க்கா சன்னதிக்கு செல்ல 260 படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். அல்லது வாகனங்கள் மூலமும் சன்னிதானத்தை அடையலாம்.
கனக துர்கா அம்பாள் கருவறை மேல் தங்க கூரை போடப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும்.
ஆந்திராவின் காவல் தெய்வமாக விஜயவாடா கனக துர்கா விளங்குகிறாள். துர்காதேவி மகிஷாசுரனை அழித்த மகிழ்ச்சியில் இத்தலத்தில் தங்க மழை பொழிய செய்ததால், கனக துர்கா என்ற பெயர் பெற்றாள். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் நவராத்திரி மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கனக துர்காதேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயுதங்கள் உள்ளன. நவராத்திரி இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும். பாலதிரிபுர சுந்தரி, காயத்ரி, அன்னபூரணி, மகாலட்சுமி, சரசுவதி, லலிதா திரிபுரசுந்தரி, துர்கா தேவி, மகிஷாசுர மர்த்தினி, ராஜராஜேஸ்வரி ஆகிய அலங்காரங்களில் அன்னை காட்சி தருவாள். விஜயதசமி அன்று அன்னையை அன்னப்படகில் கிருஷ்ணா நதியில் பவனி வரச் செய்வார்கள். இந்த விழாவிற்கு நவுக விஹாரம் என்று பெயர்.
சும்பன், நிசும்பன், சரபாசுரன், மகிஷாசுரன் மற்றும் துர்க்காசுரனை துர்க்கை, உக்கிரசண்டி மற்றும் பத்திரகாளி ஆகிய அவதாரங்கள் எடுத்து அழித்த ஜெகன்மாதாவின் இருப்பிடமே இந்த தலமாகும்.
விஜயவாடாவுக்கு விஜயபுரி என்ற பெயர்தான் இருந்தது. பல வெற்றிவீரர்கள் வாழ்ந்த பூமி என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது.
நவராத்திரி, தசரா திருவிழா, மஹாசிவராத்திரி, பிரதோஷம், ஆவணி மாதம் – சிரவண மாதம் 30 நாட்கள் விழாக்கோலம்
எதிரிகளின் தொந்தரவு விலக, செல்வம் செழிக்க இந்த அம்மனை வழிபாடுசெய்கிறார்கள். அன்னை கனக துர்காவை வணங்கினால் அவளது ஆசியால் பொன்மழையே பொழியும் என்பது நம்பிக்கை.
அம்மனுக்கு தங்க அரளியால் மாலை சாற்றி, அபிசேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
Leave a Reply