அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர்

அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர், விழுப்புரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நிதீஸ்வரர்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

அன்னம்புத்தூர்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி தேடி சென்று தோற்றுப் போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பெயாய் சொன்னார். அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் புகழப்பட்ட பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு ஏற்பட்டதுதான் மிச்சம். இதில் வேதனையுற்ற பிரம்மன், இந்த தலத்து இறைவனுக்கு கைநிறைய மலர்களை அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, இழுக்கினால் நேர்ந்த துன்பங்கள் யாவும் விலகியதாம். ஆகவே, இந்த ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.

நம் தலையெழுத்தையே நிர்ணயித்து அருளும் பிரம்மனின் தலையெழுத்தை, கனிவும் கருணையும் பொங்க சிவனார் திருத்தி எழுதிய திருத்தலம் இது. ஆகவே, நிதீஸ்வரரை வணங்கி வழிபட்டால், சிவனாரும் அருள்வார். பிரம்மனும் நம் தலையெழுத்தைத் திருத்தி எழுதி அருள்வார். இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கப் பெறலாம். வேதனைகள் நீங்க பெறலாம். நிதிகளில் பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி என எட்டு வகை நிதிகள் உண்டு. இந்த எட்டு நிதிகளையும் தனது கடும் தவத்தால் ஈசனிடம் இருந்து பெற்றவர், நிதிகளுக்கெல்லாம் தலைவரானார். அவர் குபேரன்.

நிதிகளையெல்லாம் ஒருங்கே பெற்ற குபேரன் வழிபட்ட தலங்களுள், அன்னம்புத்தூர் திருத்தலமும் ஒன்று. எனவே, இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு திருநிதீஸ்வரர் எனத் திருநாமம் அமைந்ததாகத் தெரிவிக்கிறது கல்வெட்டு ஒன்று.

இராஜராஜசோழ மன்னன், ஏராளமான கோயில்களைக் கட்டியுள்ளான். எண்ணற்ற ஆலயங்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளான். புனரமைப்பு செய்து, மகிழ்ந்துள்ளான். சோழர்குல திலகம், சிவபாதசேகரன் என்றெல்லாம் போற்றப்பட்ட மாமன்னன் இராஜராஜசோழன், வியந்து வணங்கி வழிபட்டு சிலாகித்த கோயில் ஒன்று உள்ளது. அந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்தும், நிவந்தங்கள் கொடுத்தும் இறைவனை வழிபட்டுள்ளான். அந்த ஊர் அன்னம்புத்தூர். அங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் நிதீஸ்வரர். 1008ம் வருடம் தன்னுடைய 23வது ஆட்சியாண்டில், அன்னம்புத்தூர் நிதீஸ்வரர் திருக்கோயிலுக்கு இராஜராஜசோழன் திருப்பணிகள் செய்ததையும், புனரமைப்பு செய்ததையும், நிவந்தங்கள் அளித்ததையும் தெரிவிக்கிற கல்வெட்டுகள் உள்ளன என்கின்றனர் இந்தியத் தொல்லியல் துறையினர். இராஜராஜப் பெருவுடையாரின் மெய்கீர்த்தியுடன் துவங்குகிற இந்தக் கல்வெட்டின்படி பார்த்தால், இதுவும் சுமார் 1000 ஆண்டுகளைக் கடந்த ஆலயம் என்பது தெளிவாகிறது. பல்லவர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். இங்கேயுள்ள விநாயகரின் விக்ரகம், பல்லவ காலச் சிற்பத்தை உணர்த்துவதாக உள்ளது என்கின்றனர் தொல்லியல் துறை ஆய்வாளர்கள்.

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி.

கோரிக்கைகள்:

விவசாயம் செழிக்கவும், பிரச்சனைகள் இன்றி நிம்மதியாக வாழவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *