அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில், பாடகச்சேரி
அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில், பாடகச்சேரி, வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
+91 97517 34868 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் |
தாயார் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
பாடகச்சேரி |
மாவட்டம் |
– |
|
திருவாரூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
இந்தத் திருநாமத்துக்கு இராமாயணக் கதையில் இருந்து பெயர்க் காரணம் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். சீதாதேவியை வஞ்சகமான திட்டத்தின் மூலம் இராவணன் கவர்ந்து சென்றது அனைவருக்கும் தெரியும். தன் கணவர் குடிலில் இல்லாதபோது இப்படிக் கடத்திச் செல்ல முற்படுகிறானே என்று சீதாதேவி இராவணனிடம் கதறினாள். தன்னை விடுவிக்குமாறு வேண்டினாள். ஆனால், அவளது பேச்சை லட்சியம் செய்யாமல், புஷ்பக விமானத்தில் அவளுடன் இலங்கையை நோக்கிப் பறந்தான் இராவணன், அப்போதுதான் சீதாதேவிக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதாவது, இராவணன் தன்னை எங்கே கடத்திச் சென்று வைத்திருக்கிறான் என்பதை தன்னைத் தேடி வரும் ஸ்ரீராமபிரான் அறிந்து கொள்வதற்கு வசதியாக, கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பூமியில் போட்டுக் கொண்டே போனாளாம். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக் கூடிய கொலுசை ஓரிடத்தில் கழற்றிப் போட்டாள். இறுதியில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். சிறையில் இருந்து தன்னை மீட்கச் செல்ல ஸ்ரீராமபிரான் வரமாட்டாரா என்று ஏங்கித் தவிக்க ஆரம்பித்தாள். குடிலில் சீதாதேவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகி, அவளைத் தேடிப் புறப்பட்டனர் இராமனும் இலட்சுமணனும். சீதாதேவி அணியும் ஆபரணங்களை ஆங்காங்கே தரையில் கண்டார் ஸ்ரீராமபிரான். அந்த ஆபரணங்கள் கிடைத்த வழியைத் தொடர்ந்தே தன் தேடுதல் யாத்திரையை நடத்தினார். ஒரு கிராமத்தில் சீதாதேவியின் பாடகம் எனப்படும் அணிகலன் தரையில் கிடப்பதைப் பார்த்த ஸ்ரீராமபிரான், “தம்பி லட்சுமணா. இந்த அணிகலனைப் பார். இது யாருடையது?” என்று கேட்டபோது, இலட்சுமணன் முகம் மலர்ந்து, “இது என் அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் இந்த பாடகங்களை அணிந்திருப்பார். இந்தக் காட்சியை நான் தரிசித்திருக்கிறேன் என்று உளம் மகிழ்ந்து சொன்னானாம்.” அதுவரை தரையில் விழுந்து கிடந்த மற்ற ஆபரணங்களை ஸ்ரீராமபிரான் காட்டிக் கேட்டபோது, “இது அண்ணியாருடையதா என்று எனக்குத் தெரியாது” என்றே சொல்லி வந்த லட்சுமணன், காலில் அணியும் பாடகத்தைக் கண்டு, இது நிச்சயம் அண்ணியார் அணியும் அணிகலன்தான் என்று உறுதிபடச் சொன்னது, இராமனுக்குப் பெருத்த மகிழ்வைத் தந்ததாம். அண்ணியாரை – ஒரு தெய்வமாக எந்த அளவுக்கு இலட்சுமணன் தொழுது வந்திருக்கிறான் என்கிற பக்தி உணர்வு அப்போது வெளிப்பட்டது. பாடகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் இராமபிரான். இதனால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்றும் (பின்னாளில் பாடகச்சேரி), இங்கு அருள் பாலிக்கும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்கிற திருநாமமும் வந்ததாகச் சொல்கிறார்கள் (மாறுபட்ட கருத்தும் உண்டு).
ஸ்ரீ தேவி, பூதேவியுடன் திவ்யமான தரிசனம் தருகிறார் கண்டுளம் மகிழ்ந்த பெருமாள். மூலவர்களான இந்தக் கல் திருமேனிகள் தவிர கருடாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீராமானுஜர் ஆகியோரின் திருமேனிகளும் இங்கு உள்ளன. பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற புதுமையான திருநாமம். பெருமாள் கோயில் பெரியதாகத்தான் இருந்திருக்கிறது. ஸ்வாமிகள் நாளிலேயே பாலாலயம் செய்யப்பட்டு என்னகாரணத்தினாலோ முடிவு பெறமால் உள்ளது என்கிறார்கள். அதற்கான அடித்தளங்களையும் காணமுடிகிறது. காலத்தால் கரைந்து மூலமூர்த்திகள் கருவறையிலிருந்து அகற்றப்பட்டு ஓலைவேய்ந்த சிறுகுடிசைகுள் சுமார் 250 வருடமாக வைக்கப்பட்டுள்ளது. மூன்றரையடி உயரமுள்ள திருமேனியழகு வார்த்தைகளுக்கு அடங்காத வனப்புடன் திகழ்கிறது. ஸ்ரீதேவி, பூதேவியும் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.
திருமாலை யார் தரிசிக்க வந்தாலும் உண்மையிலேயே கண்டவர் உள்ளத்தை மகிழ்விக்கும் பெருமாளாக இன்றும் காட்சி தந்து அருளுகிறார். இப்பொழுது சமீபத்தில் ஒரு பக்தைக்கு தன் திருநாம நெற்றியில் இருந்து ஓர் பேரொளி தோன்றி அங்கு தரிசிக்க வந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். இங்கேயே சவுந்தர நாயகி ஸமேத பசுபதீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். பசுபதீஸ்வரர் மிகவும் சக்திவாய்ந்தவர். ஓலையே கூரையாகக் கொண்டு கணபதி, நந்தியுடன், அமர்ந்திருக்கின்றனர். சவுந்தர்ய நாயகி அழகு வர்ணிக்க வார்த்தை இல்லை. இங்குள்ள சிவபெருமான் மண்புற்றுக்குள் தன்னை மூடிக்கொண்டு தவம் இருப்பது பார்வதி தேவியை தவிர வேறுயாருக்கும் தெரியா வண்ணம் தவம் செய்து வந்தார். பார்வதி தேவியையும் இந்த புற்றை புஷ்பங்களால் பூஜை செய்து வந்தார். அப்போது தேவலோகத்து காமதேனு இதை அறிந்து கொண்டு தானும் புற்றின் மேல் பால் சுரைப்பதை வழக்கமாக கொண்டது. ஒருநாள் பார்வதிதேவி பூஜை செய்யத் தாமதம் ஆனது. அதை அறியாத பசு அவ்விடம் வந்து பாலை சுரக்க, இருவரது பூஜையும் கண்டு மகிழ்ந்த ஈசன் தவம் கலைந்து எழுந்தார். இங்கு பசு பூஜைசெய்தாலும், பால் சுரந்தாலும், ஈசனுக்கு பசுபதீஸ்வரர் என்று பெயர். பசுவை பால் சுரக்க வைத்த பார்வதி தேவிக்கு சவுந்தர்ய நாயகி என்று பெயர். சவுந்தர்யம் என்றால் அனைத்து அம்சங்கள் உடையவர் என்று பெயர். இன்றும் புற்றானது காட்சி தருகிறது. இந்த சிவனை திங்கட்கிழமைகளில் பூஜித்தால் வியாபாரம் பெருகும், நிம்மதி கிடைக்கும், திருமண வரம் அருளும் என்கிறார்கள்.
சிவ விஷ்ணு ஆலயங்களுக்கு திருப்பணி நடைபெறுவதால் பக்தர்கள் பெரிய அளவில் கலந்துகொண்டு, நிறைய பொருள் உதவி செய்து பாடகச்சேரிமகான் அருளுக்கு பாத்திரமாக வேண்டுகிறோம். கண்டுளம் மகிழ்ந்த பெருமாளைத் தரிசித்தால், நம் உள்ளமும் மகிழும் என்கிறார்கள் ஆலயத் திருப்பணி அன்பர்கள்.
பாடகச்சேரி மகான் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் வாழ்ந்த கிராமம். ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் குடந்தை நாகேஸ்வர சுவாமி கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்வித்து அழியா புகழ் பெற்றவர். வேறுபல கோயில்களின் திருப்பணிகளுக்கு காரணமாகயிருந்தவர். தமிழகமெங்கும் பலரையும் பல திருப்பணிகளில் ஈடுபடுத்தியவர். அவரது மகிமைகளையும் பெருமைகளையும் எல்லையற்ற தெய்வீக சக்திகளையும் இன்றும் பலர் பசுமையாக நினைவு கூர்கின்றனர். அவருக்காக ஒரு மடம் அவர் தங்கியிருந்த இடத்தில் கட்டப்பட்டு அவர் சமாதியான ஆடிபூரம், மற்றும் பவுர்ணமி நாட்களில் அன்னதானம் வெகுவிமர்சையாக கொடுக்கப்படுகிறது. சுவாமிகள் எண்ணற்ற வியாதிகளை குணமாக்கியவர். எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தவர். அவருடைய ஜீவ சமாதி திருவற்றியூரில் பட்டினத்தார் சமாதிக்குப் பக்கத்தில் உள்ளது. அவர் பைரவர் உபாசகர். அவர் அன்னதானம் செய்யும் பொழுது நூற்றுக்கணக்கான நாய்கள் திடீரென்று மனிதர்கள் போல இலைகளில் உணவு அருந்தி நொடியில் எங்கோ சென்றுவிடுமாம். இன்றும் அவருடைய மடங்களில் அந்த அதிசயம் நடைபெறுகிறது. அவர் 1949 ஆம் வருடம் ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமை சமாதி கொண்டார். பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால் இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
திருவிழா:
ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி.
கோரிக்கைகள்:
எந்தப் பிரார்த்தனையை இவரிடம் வைத்தாலும், நம் உள்ளம் மகிழும்படி அதை நிறைவேற்றித் தந்து விடுவார் இந்தப் பெருமாள். கொடுத்த கடன் தொகை வசூலாகாமல் இருந்தால், இவரை வழிபடுவதன் மூலம் அந்தத் தொகை வசூலாகி விடும். அதுபோல் புத்திர பாக்கியம் வேண்டுவோர் இவரைப் பிரார்த்தித்தால், பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply