அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிப்பட்டி
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிப்பட்டி-625 512, தேனி மாவட்டம்.
*****************************************************************************************
+91 90429 60299, 92451 91981 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை சாத்துவதில்லை.
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – ஆண்டிப்பட்டி
மாநிலம்: – தமிழ்நாடு
ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆண்டிப்பட்டி , முட்புதர் சூழ்ந்த பகுதியாக இருந்தது. ஊருக்கு நடுவில் ஒரு திரிசூலத்தை வைத்து, பக்தர்கள் காளியம்மனாக வழிபாடு செய்து வந்தனர். இங்கு வசித்த பேரிநாயக்கர் என்ற முதியவரின் கனவில் தோன்றிய காளி,”கேரளாவில் சோட்டானிக்கரையிலிருந்து ஆற்றில் அடித்துவரப்பட்ட எனது சிலை, வடமலை நாயக்கன் பட்டியில் வைகை ஆற்றுமணலில் புதைந்து கிடக்கிறது. பதினாறு அடி தோண்டினால், என் சிலை கிடைக்கும். அதை எடுத்து வந்து ஆலயம் அமைத்து வழிபாடு செய்யுங்கள்” என்றாள். மறுநாள் பேரிநாயக்கரின் தலைமையில் ஊர்மக்கள் சென்று அம்பாள் சிலையை எடுத்து வந்து ஆலயம் அமைத்தனர். அவளுக்கு “காளி” என்று பெயர் சூட்டினர்.
நீதியின் காவல்தெய்வம் :
கருவறையில் நீதியை நிலைநாட்டுபவளாக காளி வீற்றிருக்கிறாள். ஐந்து தலைநாகம் இவளுக்கு குடைபிடித்துள்ளது. வலது காலை மடித்தும், இடது காலை தரையில் ஊன்றியும் உள்ள இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில் உடுக்கை, பாம்பு, சூலம், கபாலம் ஏந்தியிருக்கிறாள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுபவளாக இருக்கும் இவளை வழிபட்ட பின்னரே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஊர்க்காவல் தெய்வங்களுக்குத் திருவிழா நடக்கும். தனக்கு குறை நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளும் இவள், தன் பக்தர்களுக்கு யாராவது தீங்கு எண்ணினால் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.
இப்பகுதி மக்கள் எந்தச் செயலைச் செய்தாலும் காளியம்மனிடம் பூக்கட்டி உத்தரவு கேட்டபின்னரே செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சிவப்பு மற்றும் வெள்ளை மலரை தனித்தனி பொட்டலமாகக் கட்டிப் போட்டு காளியின் திருப்பாதத்தில் இடுகின்றனர். பூசை முடித்து அர்ச்சகர் தரும் பொட்டலத்தில் வெள்ளை மலர் வந்தால் எண்ணிய செயல் காளியின் அருளால் நிறைவேறும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. (மற்ற அம்மன் கோயில்களில் சிவப்பு மலர் வந்தால் அம்பாள் அனுமதி வழங்கியதாகச் சொல்வர்). வெள்ளிக்கிழமையில் பூக்கட்டி உத்தரவு கேட்க ஏராளமானோர் வருகின்றனர்.
பவுர்ணமி அபிஷேகம் :
விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, பவுர்ணமி வழிபாடு செய்பவர்கள் பகலில் உண்ணாமல் விரதம் இருந்து கோயிலுக்கு வருகின்றனர். அன்று இரவில் பாலபிஷேகம் நடக்கிறது. பிரசாதப்பாலை அருந்தி விரதத்தை நிறைவு செய்கின்றனர். பங்குனியில் நடக்கும் திருவிழாவில் அக்னிசட்டி, மாவிளக்கு, பொங்கல், முளைப்பாரி, பால்குடம் போன்ற நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.
Leave a Reply