அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்
அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்– 625 214, மதுரை மாவட்டம்.
*******************************************************************************************************
+91-4543-258987, 94431 92101(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
ரேணுகாதேவி சமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூசைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வனின் நிழலை நீரிலே கண்டு அவன் அழகில் மயங்கி வியந்ததால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார்.
மகன் பரசுராமரை அழைத்து, தாயின் தலையை வெட்டிக் கொண்டு வரும் படி கூற, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் வாக்குகிணங்க அன்னையின் தலையைப் பரசுராமர் கொய்தார். இருப்பினும் பெற்ற தாயை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார். தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கேட்டார். முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதித் தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்துத் தண்ணீரை தெளி்க்க உயிர் பெற்றார். அதனால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அரக்கியின் சினம் அதிகரிக்கின்றது. அரக்கியை அடக்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதியின் வடிமாக மாரி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இன்னமும் கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி எனும் நின்ற நிலையிலான ஆக்ரோச ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.
அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியின் வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம். இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அம்மை நோய் தீருதல் :
அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத்துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.
தல பெருமைகள் :
எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது.
வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், அனந்தசாகரம், சனகையம்பதி என்றெல்லாம் போற்றப்படும் கோயில்.
அனைத்து சீவ ராசிகளையும் பிறவிப்பெரும் பயனை அடைய வைக்கும் ஆலயம்.
திருவிழா:
வைகாசி பெருந்திருவிழா – 17 நாட்கள்.
கொடி ஏற்றம். சிங்கவாகனத்தில் புறப்பாடு. 8ம் நாள் தீச்சட்டி. 9ம் நாள் பால்குடம் பூப்பல்லக்கு. அன்று இரவு மலர் பல்லக்கில் அலங்கார வீதியுலா பூக்குழி இறங்குதல்.
தை மாதப் பிறப்பு, சித்திரை வருடப் பிறப்பு, நவராத்திரி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அம்மனுக்கு நடைபெறும். வருடத்தின் விசேச நாட்களான பொங்கல் தீபாவளி பண்டிகைகளின் போதும் கோயிலில் பெரிய அளவில் பக்தர்கள் வருகை இருக்கும். விசய தசமி அன்று வைகை ஆற்றில் அம்பு போடுதல் திருவிழா மிகவும் விசேசமாக இருக்கும். அந்த விழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மை.
கோரிக்கை:
அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம்.
குழந்தை பாக்கியம், திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
விவசாய செழிப்பு, தொழில் விருத்தி, கல்வி மேம்படுதல் போன்ற பிரார்த்தனைகளும் இத்தலத்தில் நிறைவேறுகின்றன.
கை கால் ஊனம், மற்ற உடல் குறைபாடுகள், பிணி பீடை ஆகியன விலகவும் இத்தலத்து அம்மனை வணங்கினால் தீர்வு கிடைக்கிறது.
நேர்த்திகடன்:
சிலை எடுப்பு :
உருவம் செய்து தொட்டில் கட்டி நேர்த்திகடன் செய்வது. குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து கோயிலை சுற்றி வருகின்றனர். விவசாயம் செழிப்படைய வேண்டிக் கொண்டவர்கள் தானியங்களை கொண்டு வந்து கொட்டி அம்மனுக்கு காணிக்கை செய்கின்றனர். தீச்சட்டி, அலகு எடுத்தல் (முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல்) பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், முத்துச் சொரிதல் (ஆமணக்கு விதைகளை போடுதல்) முடி காணிக்கை, ஆடு மாடு சேவல்களை காணிக்கை செலுத்தல். ஆயிரம் கண் பானை செலுத்தல், சிலை காணிக்கை, பரிவட்டம் சாற்றுதல், மாவிளக்கு காணிக்கை ஆகியனவும் இத்தலத்தின் புகழ் பெற்ற நேர்த்தி கடன்களாகும். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்குப் பொருளுதவி செய்யலாம்.
Leave a Reply