அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயில், விபூதிப்புரம்

அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயில், விபூதிப்புரம், பெங்களூரு மாவட்டம், கர்நாடக மாநிலம்.

+91- 80- 2523 7234 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரபத்திரர்
அம்மன் காளிகாம்பாள்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் விபூதிப்புரம்
மாவட்டம் பெங்களூர்
மாநிலம் கர்நாடகா

இப்பகுதியை வீரபல்லாளன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான இவனுக்கு, சிவனை அவரது அம்சமான வீரபத்திரர் வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பத்தை நிறைவேற்றும்படி சிவனிடம் வேண்டி தியானத்தில் ஆழ்ந்தான். அவனது பக்தியை மெச்சிய சிவன், அவனது மனதில் பிரசன்னமாகி வீரபத்திரராக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன், தான் கண்ட வடிவில், வீரபத்திரருக்கு சிலை வடித்தான். அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினான். விபூதிப்புரம் வீரசிம்மாசன சமஸ்தான மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வடக்கு நோக்கிய கோயில் இது. சிவனே வீரபத்திரராக மன்னனுக்கு காட்சி தந்ததால் அவருக்கு, சிவனுக்குரிய புலித்தோல் நிற ஆடையை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். சிவனைப் போலவே இவரது தலையில் வலப்பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும், நெற்றியில் அக்னியும் இருக்கின்றனர். சிவனுக்குரிய ஆயுதங்களான சூலம் மற்றும் உடுக்கையும் இருக்கிறது. இடது கையில் தட்சனின் தலையை வைத்திருக்கிறார். பாதத்திற்கு அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் வணங்கியபடி இருக்கின்றனர். வீரபத்திரருக்கு பின்புறம், ஒரு பீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. சன்னதிக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது, வீரபத்திரரின் தலைக்கு மேலே லிங்கம் இருக்கும்படி உள்ளதான அமைப்பு காண்போரை வியக்க வைக்கிறது. சிவலிங்கத்துடன் காட்சி தருவதால் இவரை, “இலிங்க வீரபத்திரர்என்றும் அழைக்கிறார்கள். சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவர் வீரபத்திரரும் நந்தி வாகனத்துடன் இருக்கிறார்.

வீரபத்திரருக்கு ஞாயிற்றுக்கிழமை, அமாவாசைகளில் விசேஷ ஹோமம், ருத்ராபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் கடைசி திங்களன்று இவருக்கு ஒருநாள் விழா நடக்கிறது. அன்று காலையில் அக்னி பிரவேசம்என்றும் பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். அப்போது கோயிலுக்கு எதிரே அக்னி குண்டம் வளர்த்து, அதிலிருந்து அர்ச்சகர் நெருப்புத்துண்டுகளை கையில் எடுத்து, வீரபத்திரர் சன்னதிக்கு கொண்டு வந்து, அந்த நெருப்பில் தூபம் போட்டு சுவாமிக்கு தீபாராதனை செய்து பூஜை செய்வார். அதன்பின்பு, வீரபத்திரர் பல்லக்கில் எழுந்தருளி உலா செல்வார்.


வீரபத்திரருக்கான அம்பாள் பத்திரகாளி, சாந்த கோலத்தில் தனிசன்னதியில் இருக்கிறாள். இவளைக் காளிகாம்பாள்என்று அழைக்கிறார்கள். புத்திரப்பேறு இல்லாதவர்கள் இவளுக்கு மஞ்சள் வஸ்திரம், சிவனுக்குரிய வில்வ மாலை மற்றும் வளையல் அணிவித்தும், வீரபத்திரருக்கு பாயசம் படைத்தும் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. மனக்குழப்பம், பயம் நீங்க வீரபத்திரருக்கு வெற்றிலை, எலுமிச்சை மாலை அணிவித்து, ருத்ராபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள தல விநாயகர் மகாகணபதி என அழைக்கப்படுகிறார்.

திருவிழா:

சிவராத்திரி, திருக்கார்த்திகை

வேண்டுகோள்:

பயம் நீங்க, மனக்குழப்பம் தீர, தெளிவான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாக இத்தல வீரபத்திரரிடமும், புத்திரப்பேறு இல்லாதவர்கள் அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து, பாயசம் படைத்தும், அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம், சிவனுக்குரிய வில்வ மாலை மற்றும் வளையல் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மனக்குழப்பம், பயம் நீங்க வீரபத்திரருக்கு வெற்றிலை, எலுமிச்சை மாலை அணிவித்து, ருத்ராபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, பாயாசம் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *