அருள்மிகு இரட்டை முக பைரவர், பெரிச்சிகோயில்

அருள்மிகு இரட்டை முக பைரவர், பெரிச்சிகோயில், சிவகங்கை மாவட்டம்.

+04565 – 255 373, 94866 71544(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 முதல் 12மணி மாலை 5 முதல் 8மணிவரை திறந்திருக்கும்.

 

ஒருமுகம் கொண்ட பைரவரையே தரிசனம் செய்திருப்பீர்கள். பைரவரை மூலவராகக் கொண்ட திருவாரூர் மாவட்டம் தகட்டூர் கோயிலில் கூட பைரவரை ஒருமுகத்துடன்தான் தரிசிக்க முடியும். ஆனால், முன்னும் பின்னுமாக இரண்டு முகங்களுடன் காட்சி தரும் கோயிலை அஷ்ட பைரவத்தலங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோயிலில் காணலாம்.

இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் கட்ட விரும்பினார். அவருக்கு எந்த இடத்தில் கோயில் கட்டுவதென குழப்பம் ஏற்பட்டது. அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு இலிங்கம் இருக்குமெனவும், அங்கேயே கோயில் எழுப்பலாம் என்றும் சொன்னார். குறிப்பிட்ட அந்த இடத்தில் இலிங்கத்தைக் கண்ட மன்னர் கோயில் எழுப்பினார். வாசனை மிக்க மலர்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் சுவாமி, “சுகந்தவனேஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். இச்சிலையை போகர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள். எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார். அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் இருக்கிறார். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை. வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். கலியுக அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.

இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராகக் கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள். பக்தர்கள் பின்புற முகத்தை பார்க்க முடியாது.

அம்பாள் சமீப வல்லிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தன்னை வேண்டுவோர் அருகில் இருந்து காப்பவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். இத்தலத்தின் விருட்சம் வன்னி. கிணற்று நீர் பிரதான தீர்த்தம். அபலைப்பெண் ஒருத்திக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து மணம் முடித்து வைத்த சிவன், அவளை அவளது கணவன் கைவிட்ட போது, வன்னிமரம், கிணறு மற்றும் இலிங்கமாக இருந்து சாட்சி சொன்னார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது போலவே, இந்த தலத்திலும் கிணறையும், வன்னியையும் காணலாம். பிரகாரத்தில் அருகருகே நான்கு விநாயகர்கள் காட்சி தருகின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியருக்கும் சன்னதி உள்ளது.

திருவிழா: ஆனித்திருவிழா 2 நாட்கள், சிவராத்திரி, திருக்கார்த்திகை.

இருப்பிடம்: மதுரையில் இருந்து 60 கி.மீ., தூரத்திலுள்ள, திருப்புத்தூர் சென்று அங்கிருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள கண்டர மாணிக்கம் செல்ல வேண்டும். இவ்வூரிலிருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். பஸ் வசதி அதிகமில்லை என்பதால் ஆட்டோவில் சென்று வரலாம்.

2 Responses to அருள்மிகு இரட்டை முக பைரவர், பெரிச்சிகோயில்

  1. hai

    iam swaminathan from chennai
    your site is very nice and your doing will work

    தொடர்பு கொள்ள

    யக்னஸ்ரீ ஆதி சைவ டிரஸ்ட்
    நிறுவனர்,
    சிவாகமரத்னம்
    எஸ்.சுவாமிநாதன்
    9941234545
    9941755544

  2. தொடர்பு கொள்ள – அவசியமிருப்பின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *