அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மலைவையாவூர்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மலைவையாவூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நர்த்தன அனுமன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மலைவையாவூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இராம அவதாரத்தில் இராமபிரானுக்கு இராவணனுக்கும் நடைபெற்ற போரில் ஒரு கட்டத்தில் இராமனின் தம்பி இலட்சுமணன் மூர்சையாகிவிடுகிறான். அந்த பரம்பொருளான இராமன் நினைத்திருந்தால் இலட்சுமணனை ஒரு நொடியில் எழுப்பிவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு மனமில்லை. அருகிலிருந்த விபீடணன் இராமனுக்கு ஆறுதல் தந்ததோடு, சஞ்சீவிபர்வதத்திலிருக்கும் மூலிகையை எடுத்து வந்து இலட்சுமணனை முகத்தில் படவைத்தால் மூர்ச்சையிலிருந்து எழ இயலும் என்று கூறுகிறான். இச்செயலைக் செய்ய சர்வமும் தானேயென்று இருக்கும் மகாபராக்கிரமனான ஆஞ்சநேயர் ஒருவரால்தான் இயலும் என்பதை உணர்ந்த இராமன், அனுமனிடம் வந்து உதவி கேட்கிறார். என்றும் தன் உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் அந்த ஸ்ரீராமனே தன்னிடம் உதவி கேட்டதால், உடனே சஞ்சீவி பர்வதத்தை அடைந்து மூலிகையைத் தேடுகிறான், ஆஞ்சநேயர். அவனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சஞ்சீவி பர்வதத்தையே தனது கைகளில் தூக்கி நிறுத்தி பறந்து வந்துவிடுகிறான். ஸ்ரீராமன் முகத்தில் அனுமனைக் கண்டதும் பரவசம் மேலிடுகிறது. விபீடணன் அடையாளம் காட்ட, சஞ்சீவி மூலிகையை இலட்சுமணனின் முகத்தில் வைக்க, அவரும் மூர்ச்சையிலிருந்து விடுபட்டு எழுகிறான். தாங்க முடியாத சந்தோஷத்தில் செயற்கரிய செயலைச் செய்து முடித்த ஆஞ்சநேயரை ஆரத் தழுவிக் கொள்கிறார் இராமசந்திர பிரபு. அப்போது அனுமனின் கைகளை அவர் கவனிக்க, மலையை சுமந்து வந்ததால் உள்ளங்கையில் புண்கள் ஏற்பட்டு இரணமாகியிருந்தது. திடுக்குற்ற இராமர், தாமரை மலரைக் கொண்டு அனுமனின் கையை மெல்ல வருடி விடுகிறார். ஆஞ்சநேயனுக்கோ, தனது இதயத்துள் வைத்து பூஜிக்கும் இராமச்சந்திரப் பிரபுவே தனக்கு சேவை செய்ததில் சந்தோஷம் பிடிபடவில்லை. துள்ளிக் குதிக்கிறான். நர்த்தனமாடுகிறான். இப்படி நர்த்தனக் கோலத்தில் அனுமன் காட்சிதரும் புனித்தலம், மலைவையாவூர். இங்கு வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கி சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த மலைவையாவூருக்கும் பெயர் வந்ததே ஒரு வியப்பான செய்தியாகக் கூறப்படுகிறது. சஞ்சீவி பர்வதத்தைத் தனது கைகளில் சுமந்து வரும் ஆஞ்சநேயர் இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி மலைவையாவூரானது என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இக்கோயிலின் எதிரே மண்டபம் அமைந்திருந்த பகுதியில் மூலவர் இருந்ததாகவும், மண்மூடிப் பலகாலம் இருந்த இவர் ஒரு மகானால் கண்டறியப்பட்டு அங்கிருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு எதிர்புறத்தில் மலைமேல் தென் திருப்பதி என்று மக்களால் போற்றப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன் வைத்தும், வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார். தாமரைத் தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க, வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. தனது காலை சிரசில் வைத்து ஆனந்தமாக நர்த்தனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தில் இவரைக் காண்பது சிறப்பு.

திருவிழா:

ராம நவமி, அனுமன் ஜெயந்தி

வேண்டுகோள்:

இக்கோயிலின் ஆஞ்சநேயரை வேண்டுபவர் தங்கள் எண்ணங்களை வெள்ளைத் தாளில் எழுதி அதன்மீது மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து அனுமனின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். பின்னர் அதைக் கோயிலில், அதற்கென இருக்கும் கொம்பில் கட்டி விட்டுச் சென்றால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள் அவர்களது எண்ணம் கை கூடுகிறது என்பது நம்பிக்கையாக உள்ளது.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *