அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர்

அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில், கோட்டையூர், சுந்தரபாண்டியம், விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைகுண்டமுர்த்தி
அம்மன் பூரண, புஷ்கலா
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோட்டையூர்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சுந்தரபாண்டியத்தில் பெரியகோயில் என்றழைக்கப்படும் வைகுண்ட மூர்த்தி சுவாமி கோயிலில் தர்மசாஸ்தாவாகவும், அய்யனாராகவும் இருவேறு உருவங்களில் எழுந்தருளி அப்பகுதி மக்களை காத்து வருகிறார். வைகுண்டமூர்த்தி சுவாமி கோயில் கி.பி. 1620ம் ஆண்டில் தற்போதைய சுந்தரபாண்டியம் பகுதியை ஆட்சி செய்து வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டு வரலாற்றுச் சிறப்புடன் திகழ்கிறது. இக்கோயிலில், அந்த மன்னனின் கலை நயத்தை வெளிப்படுத்தும் அழகிய சிற்ப ஓவியங்கள் இன்னும் அவனது புகழை பறைசாற்றும் வகையில் எழிலுற அமைந்துள்ளன.

இங்கு முக்கியத் திருவிழா பாரி வேட்டை. துஷ்டசக்திகளை வேரறுக்கவும், தன்னைச் சுற்றி சார்ந்துள்ள துஷ்ட தேவதைகள், 21 சேனை தளங்களுக்கு இரணபலி வழங்கவும் வருடம் ஒரு முறை அய்யனார் வேட்டைக்குச் செல்வதாக ஐதீகம். இதற்காக நடத்தப்படும் பாரிவேட்டை திருவிழா இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

இத்திருவிழா மாசி மாதம் அமாவாசையை ஒட்டி 3 நாட்கள் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சித்திரை திருவிழா. இதைஒட்டி காவடி பூஜை நடத்தப்படுகிறது.

அந்நாளில் வைகுண்டமுர்த்தி சுவாமி குதிரை வாகனத்திலும், அம்மன்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலும், நடராஜர் சிவகாமியம்மன் ஒரு பல்லக்கிலும் கோயிலை வலம் வந்து காட்சியளிப்பர். இது தவிர மகாசிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.

பல ஊர்களில் காவல் தெய்வமாக, அந்தந்த ஊர்களில் எல்லைகளில் எழுந்தருளியுள்ள அய்யனார், எல்லா இடங்களிலுமே தவக்கோலத்தில் தனியாக காட்சியளிப்பார். ஆனால், இக்கோயிலில் பூரண, புஷ்கலா என்ற இரு பெருந்தேவியருடன் சேர்ந்து தம்பதி சகிதமாக காட்சியளிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர்க்கு அருள்பாலிக்கும் தன்மையுடையவர். அதற்காகவே நாள்தோறும் இங்கு பக்தர்கள் வருவதுண்டு. இங்குள்ள 21 சேனை தளங்களுக்கு முதன்மையானவர் மாமுண்டி கருப்பசாமி, முலஸ்தானத்திற்கு வலப்புறம் தனி சன்னிதானத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளைக்கார துரை ஒருவன் சுவாமியை அலட்சியம் செய்ய, அந்த வழியாக குதிரையில் சென்ற அந்த துரை, தூக்கி எறியப்பட்டதாகவும், தவறை உணர்ந்த அவன் சுவாமிக்காக தனது குதிரையை விட்டுச் சென்றதுடன் குதிரை பீடமும் 21 அடி உயரத்தில் அமைத்ததாகவும் வரலாறு கூறுகிறது. இந்த குதிரை பீடத்தில் தான் வைகுண்டமுர்த்தி சாஸ்தா வடிவில் அமர்ந்து பாரிவேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனை மெய்பிக்கும் பொருட்டு வைகுண்ட மூர்த்தி சுவாமி வேட்டைக்கு போகும் காட்சியுடன் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், தம்பதி சகிதமாக அய்யனராக கோயிலுக்கு உள்ளேயும் இருவேறுபட்ட அவதாரத்தில் ஒரே கோயிலில் அருள்பாலிக்கிறார். இது இக்கோயிலின் கூடுதல் சிறப்பம்சமாகும். வைகுண்ட வாசியான இந்த வைகுண்டமுர்த்தியார் அங்குள்ள ஈரேழு தேவலோகம், சுகபோக வைகுண்டவாசம் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு பூலோக உயிர்களை காப்பதற்காக பூலோகத்தில் வந்து ஆங்காங்கே நிலை கொண்டுள்ளார்.

இவ்வாறு நிலை கொண்டுள்ள வைகுண்டமுர்த்தி, தென்னிந்திய கிராமத் தெய்வங்களில் கிராமத்தை காக்கும் முதன்மை காவல் தெய்வமாக விளங்கும் அய்யனாராகவும், தர்மசாஸ்தாவாகவும், கேரளாவில் சபரிமலையில் ஐயப்பனாகவும் பல்வேறு பெயர்களில் பல ஊர்களில் எழுந்தருளி பக்தர்களை காத்து வருகிறார்.

திருவிழா:

சித்திரை திருவிழா, பாரி வேட்டை, மகா சிவராத்திரி, நவராத்திரி, மாசி மாத அமாவாசை

வேண்டுகோள்:

பக்தர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பூரண, புஷ்கலை சமேத அய்யனாருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *